உன்னால் முடியும் பெண்ணே!| Dinamalar

உன்னால் முடியும் பெண்ணே!

Added : ஜூன் 30, 2016 | கருத்துகள் (3)
உன்னால் முடியும் பெண்ணே!

பெண் பெருமை உடையவள். பெண்ணின் உயர் பண்பே குடும்பத்துக்கு புகழும், அழகும். பெண்ணும் ஆணும் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழவேண்டும். இருவரும் பிணைந்து வாழும் வாழ்வே பிணக்கற்ற வாழ்வாக அமையும். பெண்மையை போற்றிய புனித மண் நம் பாரத புண்ணிய மண். தெய்வங்களில் கல்வி, செல்வம், வீரத்தை குறிக்க பெண். வானம், பூமி பூமாதேவி, இயற்கை அன்னை, கடல் மாதா, நதிகளுக்கு எல்லாம் பெரும்பாலும் பெண்ணின் பெயர்களே என்று பெருமைப்படுத்தி உள்ளோம்.
'மங்கையராக பிறப்பதற்கே நல்ல மாதவஞ் செய்திட வேண்டுமம்மா' என்று கவிமணியும் 'பெண்களினால் பண்கள் இலங்கியம் அவர் பேச்சுக்குத்தான் பெயர் அமிழ்தம் ' என்று புரட்சிக் கவியும் பெண்களை சிறப்பித்து பாடியுள்ளது பெண்ணின் பெருமைக்கு சான்று.
அனைத்து துறைகளிலும் பெண்கள் வீட்டிற்குள்ளேயே முடக்கப்பட்டிருந்த நிலை மாறி, அனைத்து துறைகளிலும் இன்று சாதனை படைத்து வருவதை காண்கிறோம்.'வீட்டுக்குள் இருந்து ஜன்னல் வழியாக வீதியை வேடிக்கை பார்த்த பெண்கள் இன்று 'விண்டோஸ்' (கணினி) முன்னாள் அமர்ந்து பிரபஞ்சத்தையே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்' கல்வி, மருத்துவம், அரசியல், சமூகம், பொருளாதாரம், இசை, நாட்டியம், விளையாட்டு, அறிவியல், விண்வெளி என அனைத்து துறைகளிலும் இன்றைய பெண்கள் தடம் பதித்து சாதனை படைப்பதை காணலாம். மண்ணில் சேவை செய்து விண்ணளவு புகழ் பெற்றவர் அன்னை தெரசா. விண்வெளியில் கால் பதித்து மண்ணில் நிலைத்த பெருமை பெற்றவர், கல்பனா சாவ்லா என்பது பெருமையே.
பெண் கல்வி : சமுதாய மறுமலர்ச்சி ஏற்பட, குடும்பத்தை திறம்பட நிர்வகிக்க, உலகத்தை பேணிக் காக்க, பொருளாதார நிலை மேம்பட, பெண் கல்வி அவசியமாகிறது. இன்றைய பெண்களின் கல்வித் தகுதி உயர்ந்து வருகிறது. பெண்கள் ஏட்டை தொடுவது பாவம் என்றவர்கள் மறைந்து விட்டார்கள். வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர்கள் தலை கவிழ்ந்து விட்டார்கள். கடந்த 30 ஆண்டுகளாக நாட்டில் கல்வியில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மாணவிகள், கிராமப்புற பெண்கள் கல்வித் தரமும் உயர்ந்திருக்கிறது. ஒரு பெண் கல்வி கற்றவளாக இருந்தால் பிரச்னைகளை அறிதல் ஆராய்தல், தீர்வு காணல் மாற்று வழிகளை கண்டறிதல், நேரத்திட்டமிடுதல் போன்ற பல நன்மைகளை பெற முடிகிறது. பெண்களுக்கு நிதி நிர்வாகத்தை கற்றுக்கொடுத்தல், நடைமுறை அறிவு பெறச் செய்தல், தொழில் திறமையினை வளர்த்தல், தன்னம்பிக்கையை உருவாக்குதல், ஒருங்கிணைந்து செயல்படும் திறமையை வளர்த்தல், பேச்சாற்றல் போன்ற தகுதிகளை மேம்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதார வளம் மேம்படும்.
பெண் குறை நீக்குவோம் : பெருமை மிகு பெண்மை மீது சில குற்றச்சாட்டுகளும் வைக்கப்படுகின்றன. பெண்கள் தங்கள் கல்வி, விடுதலையை தவறாக கையாளும் போது சிக்கல் ஏற்படுகிறது. அடக்கம் என்பது வேறு; அடிமைத்தனம் என்பது வேறு. பெண்கள் அடிமையாக இருக்க வேண்டாம். ஆனால் அடக்கமாக வாழ்வது சிறப்பானது என்பதை உணர வேண்டும். இன்றைய சூழலில் மேல்நாட்டு நாகரிகத்தில் மூழ்கிய சில பெண்கள் ஆடம்பரம் மோகம் கொண்டு இல்லற மாண்பை இழந்து விடுகின்றனர்.
'தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்'
என்ற குறளுக்கு இலக்கியமாகத் திகழ்வதே பெண்களுக்கு பெருமை தரும். கணவனுக்கு அடங்கி அடிமையாக வாழ்வது அதன் பொருளல்ல. ஆடவர் தொண்டிற்கு துணை நின்று, சமுதாய நலனுக்கு தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதே சிறப்பானதாகும். ஆனால் பெண்கள் தனித்து வாழ்வது, சுதந்திரமாக திரிவது, கலாசார சீரழிவால் தாய்ப்பால் கொடுக்க மறுப்பது போன்ற நிலைகள் தொடர்ந்தால் குழந்தைகளின் நாளைய சமுதாயம் பாதிக்கப்படும்.
காட்சிப் பொருள் அல்ல : இன்றைய தொலைக்காட்சி ஊடகங்களும் பெண்களை பொழுதுபோக்கிற்குரிய காட்சிப் பொருளாக மாற்றிவிட்டன. பொழுது போக்குக்கு உரியவர்கள் அல்லர். சமுதாயத்தின் பழுது நீக்கும் பாவையர் தாங்கள் என்பதை பெண் சமூகம் உணர்த்த வேண்டும். பெண்கள் நகை, ஆடை, பாலியல் போன்ற மோகங்களில் இருந்து விடுபட்டால் அடிமைத்தனம் அகன்று விடும். பெண்கள் தங்கள் அழகின் மேல் கொண்டுள்ள அபரிமிதமான அக்கறை அவர்கள் அழிவுக்கு காரணமாகி விடும். பெண்களின் அழகு என்பது கண்மையில் இல்லை. பெண்மையில் உள்ளது.
கட்டுப்பாடான சுதந்திரம் : பெண் விடுதலை என்பது கட்டுப்பாடான வளர்ச்சியாக இருத்தல் அவசியம். சூரியப் பூவை பறிக்கின்ற அளவுக்கு பெண்களின் கரங்கள் நீளலாம். ஆனால் வீட்டு விளக்கை ஒரு பெண் ஏற்றினால் தான் பெருமை உண்டாகும். வேலைக்கு சென்று பொருளீட்டும் உரிமை என்பது குடும்பத்திற்கு வளம் சேர்க்க பயன்பட வேண்டுமே தவிர குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல பயன்படக் கூடாது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். மொத்தத்தில் பெண்ணே நீங்கள் மலராக இருங்கள். மணங் கொண்ட மல்லிகையாக மட்டும் அல்ல. தண்ணீரின் அளவுக்கு தானும் உயரும் தாமரையாக இருங்கள். பெண்ணே கொடியாக இருங்கள் கொம்பு கண்ட இடத்தில் பற்றிப் படரும் கொடியாக இல்லை; கோட்டையின் உச்சியில் பறக்கும் வெற்றிக் கொடியாக இருங்கள்.பனி மலைகளாக இருக்காதீர்கள் உருக்கி விடுவார்கள். எரிமலையாகவும் இருந்துவிடாதீர்கள் ஒதுக்கி விடுவார்கள். பனி மூடிய எரிமலையாக இருந்து பாருங்கள் துாக்கி வைத்துக் கொண்டாடுவார்கள். பெண்மையை போற்று வோம். பெண்மையை கொண்டாடுவோம்.
- முனைவர் ரேவதி சுப்புலெட்சுமி, மதுரை

resumi14@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X