ஐதராபாத் : ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் அவரது மனைவி பாரதிக்கு சொந்தமான, 750 கோடி ரூபாய் மதிப்பு சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. ஆந்திராவில், முதல்வர் சந்திர பாபு நாயுடு தலைமையிலான, தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி நடக்கிறது. எதிர்க்கட்சியாக உள்ள, ஓய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி மீது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது, நிதி மோசடி உட்பட பல வழக்குகள் உள்ளன; இந்த வழக்குகளை சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை விசாரித்து வருகின்றன. நிதி மோசடி தொடர்பாக, ஜெகன் மோகன் ரெட்டி மீது, சி.பி.ஐ, தாக்கல்
செய்த குற்றப்பத்திரிகையில் கூறியிருந்ததாவது: ஜெகனின் தந்தை ராஜசேகர ரெட்டி ஆந்திர முதல்வராக இருந்த போது, பாரதி சிமென்ட் நிறுவனத்துக்கு, சட்ட விரோதமாக, சுண்ணாம்பு சுரங்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனத்தின் தலைவராக, ஜெகனின் மனைவி, பாரதி உள்ளார். மேலும், தன் நிறுவனங்களில் முதலீடு என்ற பெயரில், பல நிறுவனங்களிடமிருந்து ஜெகன் மோகன், பல கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியுள்ளார். இந்த நிறுவனங்களுக்கு, ஆந்திர அரசு மூலம், சட்டவிரோதமாக சலுகையும் அளிக்கப்பட்டுள்ளது. தன் நிறுவனங்கள் பெயரில், பல கோடி ரூபாய்க்கு அசையும் மற்றும் அசையா சொத்துக்களை ஜெகன் மோகன் ரெட்டி வாங்கி குவித்துள்ளார். அதேபோல், பாரதி சிமென்ட் நிறுவனத்தின் பெயரிலும், சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளது. இவ்வாறு குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டிருந்தது.
இதுபற்றி பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், அமலாக்கத்துறை விசாரித்தது. விசாரணையில், 404 கோடி ரூபாய்க்கு அசையும் சொத்துக்களும், 344 கோடி ரூபாய்க்கு அசையா சொத்துக்களும் வாங்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ஜெகன் மற்றும் அவரது மனைவிக்கு சொந்தமான, 750 கோடி ரூபாய் மதிப்பு சொத்துக்களை அமலாக்கத்துறை நேற்று பறிமுதல் செய்தது. 'இந்த சொத்துக்கள், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் உள்ளது' என, அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.