சென்னை : ''போலீஸ் துறையில், காலி பணியிடங்களை நிரப்பும் யோக்கியதை கூட, இந்த அரசுக்கு இல்லை,'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறினார்.
அவரது பேட்டி:
தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கு சரியாக உள்ளதா?
முதல்வரிடம் கேட்க வேண்டிய கேள்வி இது. காரணம் அவர் தான் சட்டம், ஒழுங்கை கையில் வைத்துள்ளார். அவர்தான் உள்துறை, போலீஸ் துறை அமைச்சராகவும் உள்ளார். எனவே, அவரிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டும். நான் மட்டுமல்ல, தமிழகத்தில் இருக்கும் பல கட்சிகளின் தலைவர்களும், இதுபற்றி கேள்வி எழுப்பி வருகிறோம். கருணாநிதி கூட, சட்டம் - ஒழுங்கு பற்றி தெளிவாக கடிதம் எழுதி இருக்கிறார். எனவே, ரவுடிகளின் சாம்ராஜ்யத்தையும், நடந்து வரும் படுகொலைகளையும், உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டியது, ஜெயலலிதாவின் கடமை.
புகார் அளித்தால், உடனடியாக நடவடிக்கை எடுப்பதில்லை என, போலீஸ் துறை மீது பரவலாக குற்றச்சாட்டு உள்ளதே?
முதலில், போலீஸ் துறையில் நிறைய காலி இடங்கள் இருக்கின்றன. சட்டசபையில், நான் இதுகுறித்து ஆதாரத்துடன் பேசியிருக்கிறேன். காவல் துறையில், காலியாக உள்ள ஆயிரக்கணக்கான பணியிடங்களை நிரப்பும் யோக்கியதை கூட, இந்த அரசுக்கு இல்லை.நீதிமன்றம் உத்தரவிட்டும், இந்த அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வேதனைக்குரியது. இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
முன்னதாக, த.மா.கா.,வை சேர்ந்த கோவை தெற்கு மாவட்ட செயலர் மோகன்ராஜ், தே.மு.தி.க.,வை சேர்ந்த ஒத்தகால் மண்டபம் பேரூராட்சி கவுன்சிலர் அமிர்தராஜ் உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், ஸ்டாலின் முன்னிலையில், தி.மு.க.,வில் இணைந்தனர்.
ஸ்டாலின் கூறுகையில், 'கடந்த, 2015 டிசம்பரில், சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்களை தடுக்க, அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்' என்றார்.