என் பார்வை : மாற்றம் காணும் மருத்துவ சேவை - இன்று மருத்துவர் தினம்

Added : ஜூலை 01, 2016
Advertisement
என் பார்வை : மாற்றம் காணும் மருத்துவ சேவை - இன்று  மருத்துவர்  தினம்

டாக்டர் பி.சி.ராய் மேற்கு வங்கத்தின் இரண்டாவது முதலமைச்சர். “மக்கள் சேவையே மகேசன் சேவை” என பணியாற்றி, அந்த மாநிலத் தைப் பல துறைகளில் வளர்ச்சி அடையச் செய்தவர். ஏழைகளின் மருத்துவர். சிறந்த சமூக சேவகர். திறமையான கல்வியாளர். இவரின் பிறந்த தினமும் மறைந்த தினமும் ஜூலை 1. இவருடைய சேவையைப் போற்றும் விதமாக, இன்றைய தினத்தை மத்திய அரசு 'தேசிய டாக்டர்கள் தினம்' என கொண்டாடுகிறது.
கடவுளின் தூதுவர்கள் : மருத்துவர்கள் கடவுளின் தூதுவர். மக்களின் உயிர் காக்கும் சேவகர்கள். மருத்துவச் சேவை புனிதமானது. மருத்துவத்துறையின் அடிப்படையே மனிதநேயம்தான். மருத்துவர்கள் இரவு பகல் பாராமல், துாக்கம் தொலைத்து, தங்கள் ஆரோக்கியத்தையும் புறக்கணித்து, குடும்பத்தைக்கூட கவனிக்க நேரமில்லாமல், நோயாளிகளுக்குச் செய்கின்ற மகத்தான பணியைப் பாராட்டி மகிழும் தினமாக இதைக் கொண்டாடுகிறார்கள்.
அறிவியல் வளர்ச்சி செய்த மாற்றம் : இன்றைய அறிவியல் செய்துள்ள அபார முன்னேற்றங்கள் மக்களிடமும் மருத்துவர்களிடமும் பெரிய மாற்றங்களையும், புதிய பரிணாமங்களையும் ஏற்படுத்தியுள்ளன. மருத்துவர்களைப் பொறுத்தவரை நோயாளியின் நாடி பார்த்து, நோயைக் கணித்து, சிகிச்சை செய்த காலம் ஒன்று இருந்தது. ஆனால், இப்போதோ “ஆய்வுக்கூடப் பரிசோதனைகள்” என்ற பெயரில் இயந்திரங்களை நம்பி சிகிச்சை செய்வது வழக்கமாகிவிட்டது. முன்பு அரசுக் கல்லூரிகளில் இலவசமாகப் படித்து மருத்துவர்கள் ஆனார்கள். அவர்கள் மனதில் மக்கள் சேவையும் மனித நேயமும் முன்னிலை வகித்தன. இப்போது படிக்க நிறைய பணம் செலவழிக்கிறார்கள். இதைக் காரணமாக வைத்துக் கட்டணம் அதிகம் வாங்க வேண்டிய சூழல் உருவாகிவிட்டது. இதனால் மருத்துவம் என்பது வணிகமாகிவிட்டது எனும் நினைப்பு மக்களிடம் வேரூன்றிவிட்டது. மருத்துவ அறிவு என்பது முன்பு மருத்துவர்களுக்கு மட்டுமே சொந்தமாக இருந்தது. என்னென்ன பரிசோதனைகள் தேவை, என்ன சிகிச்சை என எல்லாவற்றையும் மருத்துவர்களே முடிவு செய்தார்கள். நோயாளிகளுக்கு இதில் பங்கு இல்லை. கிட்டத்தட்ட கடவுளிடம் சரணாகதி அடைந்த பக்தனின் நிலை இது. மருத்துவர் நோயாளி உறவில் வெளிப்படைத்தன்மை இருந்தது. மருத்துவர்களின் மீது நோயாளிக்கு நம்பிக்கை இருந்தது. மருத்துவர்களும் மனிதநேயத்துடன் நோயாளிகளை அணுகினார்கள். ஆனால் இன்று படித்தவர்கள் பலருக்கும் 'கூகுள்'தான் குடும்ப டாக்டர். இணையத்தில் தனக்கு என்ன நோயாக இருக்கும் என்பதைத் தெரிந்துகொண்டு, அது சரிதானா என்பதை உறுதி செய்ய மருத்துவரை இரண்டாவதாக அணுகுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இணையத்தில் கொட்டிக் கிடக்கும் தகவல்களில் எது சரியானது என்பதைக் கண்டுபிடிப்பதில் அந்தந்த துறை வல்லுனர்களுக்கே சிரமமாக இருக்கும்போது, அடுத்தவர் நிலைமையைச் சொல்லத்தேவையில்லை. நம்பகத்தன்மையற்ற எதையோ படித்துவிட்டு, அந்தப் பிரச்னை தனக்கும் இருப்பதாக பயந்து, டாக்டர்களிடம் வருபவர்கள் இப்போது அதிகம். இது இன்றைய மக்களிடம் காணும் பெரிய மாற்றம். இது மருத்துவர்களைக் கடவுளாகக் கருதும் நிலையிலிருந்து நல்ல ஆலோசகராக மட்டும் காணும் மாற்றத்துக்கு வழிவகுக்கிறது.
நம்பிக்கை முக்கியம் : மருத்துவர், நோயாளி உறவானது முழுக்க முழுக்க நம்பிக்கையின் அடிப்படையில் அமைவது. ஒரு நல்ல மருத்துவர் எப்படி இருக்க வேண்டும் என்று நோயாளி எதிர்பார்ப்பது இயல்பு. அந்த எதிர்பார்ப்பை ஈடுசெய்கிற மருத்துவரைக் குடும்ப மருத்துவராகக் கொண்டாடும் வழக்கம் முன்பு இருந்தது. ஒரு நோயாளியின் குடும்பப் பின்னணியைத் தெரிந்து வைத்துள்ள மருத்துவரால்தான் அந்த நோயாளியின் பிரச்னைகளைச் சரியாகப் புரிந்து கொண்டு, சரியான சிகிச்சையைத் தர முடியும் என்பதை மக்கள் புரிந்து வைத்திருந்த காரணத்தால், அந்த மருத்துவரிடம் எவ்வளவு கூட்டம் இருந்தாலும், எவ்வளவு நேரமானாலும் பொறுமையாகக் காத்திருந்து அவரிடம் சிகிச்சை பெற்றுவந்தனர். குடும்ப மருத்துவர் பரிந்துரை செய்தால் மட்டுமே மேல் சிகிச்சைக்குச் சிறப்பு நிபுணரிடம் செல்வதும் வழக்கத்தில் இருந்தது.இன்றைய நிலைமை அப்படியில்லை. மக்களிடம் 'ஸ்பெஷாலிட்டி மோகம்'அதிகரித்துள்ளது. எந்த ஒரு சிறு பிரச்னைக்கும் தாங்களே நேரடியாக சிறப்பு நிபுணரிடம் சென்று சிகிச்சை பெறும் நிலைமை அதிகரித்து வருகிறது. சிறப்பு நிபுணர்களை மட்டுமே மருத்துவர்களாகப் பார்க்கின்ற மனநிலையும் வளர்ந்துள்ளது; மக்கள் மனநிலையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் காரணமாக 'குடும்ப மருத்துவர்'என்கிற நல்ல அமைப்பு நம் சமூகத்தில் சிதைந்து வருகிறது.
குடும்ப மருத்துவரின் முக்கியத்துவம் : இங்கிலாந்திலோ, அமெரிக்காவிலோ நோயாளிகள் சிறப்பு நிபுணரை நேரடியாகப் பார்த்து ஆலோசனை பெற்றுவிட முடியாது. முதலில், குடும்ப மருத்துவரைத்தான் பார்க்க வேண்டும். அவர்தான் சிறப்பு நிபுணருக்குப் பரிந்துரை செய்ய வேண்டும். குடும்ப மருத்துவருக்கும் சிறப்பு நிபுணருக்கும் இடையே நல்ல புரிதல் இருக்கும். இதனால் குடும்ப மருத்துவர் பரிந்துரைத்த நோயாளிக்குத் தரமான சிகிச்சை கிடைக்கும். முக்கியமாக, வீண்செலவுக்கு அங்கு இடமிருக்காது. இதனால் நோயாளிக்குத்தான் நன்மை. இதுபோல் இங்கும் குடும்ப மருத்துவர் எனும் உறவு மீண்டும் உயிர் பெற வேண்டும்
கடவுள்கள் அல்ல! : இது ஒரு போட்டி உலகம். புற்றீசல் போல் பெருகியுள்ள ஆய்வு கூடங்கள், மருந்து நிறுவனங்கள், கார்ப்பரேட் மருத்துவமனைகள் இவற்றுக்குள் நடக்கும் போட்டியில், மருத்துவர்களைக் கவர்வதற்காக, சில “மயங்க வைக்கும் வியாபார உத்தி”களையும் பயன்படுத்துகிறார்கள். இதனால் நோயாளிக்குத்தான் பணச்சுமை. மேலை நாடுகளில் இருப்பதைப்போல நம் நாட்டிலும் கல்வியும் மருத்துவமும் எல்லோருக்கும் இலவசமாகக் கிடைக்கும்போதுதான் இந்த நிலைமை மாறும்.மருத்துவர்கள் கடவுள்கள் அல்ல; அவர்களும் மனிதர்கள்தான். என்னதான் மருத்துவ அறிவியல் முன்னேறியிருந்தாலும், காரணம் தெரியாத நோய்கள் ஆயிரத்துக்கு மேல் உண்டு. ஒருவருக்கு பலன் தரும் சிகிச்சை அடுத்தவருக்குப் பலன் தராமல் போகலாம். இதனால் மருத்துவர்கள் சிகிச்சையில் தவறு செய்யவும் சாத்தியம் உண்டு. அப்போதெல்லாம் உணர்ச்சிவசப்படாதீர்கள். அறியாமல் தவறு செய்யும் மருத்துவர்களையும் மன்னித்துவிடுங்கள். நேர்மையான, திறமையான மருத்துவர்களை பாராட்டுங்கள்!
-டாக்டர் கு.கணேசன்மருத்துவ இதழியலாளர்ராஜபாளையம்.gganesan95@gmail.com

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X