சென்னை:'அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க உத்தர விடும் முன் அரசிடம் இருந்து லஞ்ச ஒழிப்பு துறை கருத்துக்களை பெற்று பரிசீலிக்க தேவையில்லை' என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான அரசாணையையும் ரத்து செய்துள்ளது. இதனால் லஞ்சம் வாங்கும் அரசு உயர் அதிகாரிகள், ஊழியர்கள் இனி தப்ப முடியாது என்ற சூழ்நிலை உருவாகி உள்ளது.கடந்த பிப்ரவரி மாதம், தமிழக அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில், கூறப்பட்டிருந்ததாவது:
உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற உத்தரவுகளை தொடர்ந்து, அரசு ஊழியர்களுக்கு எதிரான ஊழல் புகார்களை, ஒரே மாதிரியாக பரிசீலிக்கும் வகையில், ௧௯௮௮, ௧௯௯௨, ௧௯௯௬ம் ஆண்டுகளில், பிறப்பிக்கப்பட்ட அரசாணைகள் ரத்து செய்யப்படுகின்றன.
பொது ஊழியர் ஒருவர் எந்த பதவியில் இருந்தாலும், அவர் மீது அலுவல் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுக்கள், புகார்கள் வந்தால், 'விஜிலன்ஸ்' ஆணையத்துக்கு, லஞ்ச ஒழிப்பு இயக்குனரகம் அனுப்ப வேண்டும்;
தகுந்த விசாரணைக்கு உத்தரவிடும் முன், அரசிடம் இருந்து, 'விஜிலன்ஸ்' ஆணையம் குறிப்புகளை பெற்று பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர்
நீதிமன்றத்தில், வழக்கறிஞர் புகழேந்தி தாக்கல் செய்த மனு:
தமிழக
அரசின் தற்போதைய உத்தரவால், அரசின் முன் அனுமதி இல்லாமல், ஐ.ஏ.எஸ்.,
அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு எதிரான ஊழல் புகார்களை விசாரிக்க
முடி யாது. இவ்வாறு உத்தரவு பிறப்பிக்க, அரசுக்கு அதிகாரமில்லை. எனவே,
அரசாணை யில் உள்ள, இந்த பகுதியை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில்
கூறப்பட்டுள்ளது.
மனுவை, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி மகாதேவன் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' விசாரித்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் எம்.ராதாகிருஷ்ணன் ஆஜரானார். மனுவை விசாரித்த, 'முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:
உச்ச நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றும் விதமாக, பாரபட்சமற்ற முறையை ஏற்படுத்த, ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளை, அரசு ரத்து செய்துள்ளது. அவ்வாறு ரத்து செய்யும் போது, 'ஊழல் புகார்களை விசாரிக்க உத்தரவிடும் முன், அரசிடம் கருத்துக்களை பெற்று பரிசீலிக்க வேண்டும்' என்ற, ஒரு பகுதியை, அரசாணையில் சேர்த்துள்ளது. இதை எதிர்த்து தான், வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஒரு புகார் அல்லது தகவல் குறித்து, முதல் கட்டமாக விசாரணை நடத்துவது என்பது, மிகவும் ரகசியமாக இருக்க வேண்டும். லஞ்சம் கேட்டு பெறுவது; வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு; லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடிபட்டு, கைது செய்வது ஆகிய குற்றச்சாட்டுக்களுக்கு, அரசின் கருத்துக்களை பெற தேவையில்லை; அது போன்ற குற்றச்சாட்டுகளில் விசாரணையை துவங்க, லஞ்ச ஒழிப்பு துறைக்கு அதிகாரம் உள்ளது என, அரசு தரப்பு கூறுகிறது.
அப்படி இருக்கும்போது, 'ஆரம்ப கட்ட விசாரணை நடத்துவதற்கு கூட, அரசிடம் இருந்து கருத்துக்கள் பெற வேண்டும்' என,
அட்வகேட் ஜெனரல்கூறுகிறார். குற்றச் சாட்டுக்கள் மீதான உண்மையை கண்டுபிடிக்க, ஆவணங்களை கோரவும், சாட்சியங்களை அடையாளம் காணவும் நடவடிக்கை எடுக்க முடியும்.
ஆனால், போலீஸ் அதிகாரிகளின் அதிகாரங் களை கட்டுப்படுத்தும் வகையில், 'விசார ணைக்கு உத்தரவிடுவதற்கு முன், அரசிடம் இருந்து கருத்துக்கள் பெற வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.
அரசு உத்தரவில், 'குறிப்புகள்' என்று தான் கூறப்பட்டுள்ளது; 'முன் அனுமதி' என, கூறப்பட வில்லை. ஆனால், குறிப்புகள் தேவை என கூறுவதில் எந்த காரணமும் இல்லை; இது, ஆரம்ப விசாரணைக்கு கூட, புலனாய்வு நடவடிக்கைகளை கால தாமதப்படுத்தும்.லஞ்ச ஒழிப்பு இயக்குனரகம் பெறும் புகார்களை, முதலில்,'விஜிலன்ஸ்' ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும்; அந்த ஆணையம், அரசிடம் இருந்து கருத்துக்களை பெற வேண்டும். அதன்பின், மனதை செலுத்த வேண்டும்; பின், முடிவை, லஞ்ச ஒழிப்பு இயக்குனரகத்துக்கு தெரிவிக்க வேண்டும். இத்தகைய நடைமுறை அனுமதிக்கதக்கது அல்ல.
ஆரம்பகட்ட விசாரணைக்கும், அரசின் கருத்துக் களை பெற வேண்டுமா என்ற கேள்விக்கு, ஆரம்ப கட்ட விசாரணை நடத்துவதற்கு, எந்த இடையூறும் இருக்காது என்ற உறுதி மொழியை, அரசு அளித்து இருக்கலாம். அளிக்கப்பட்ட முரண்பாடான விடைகளை பார்க்கும் போது, ஆரம்பகட்ட விசாரணைக்கும், லஞ்ச ஒழிப்பு இயக்குனர கத்தின் மீதான நம்பிக்கை குறைவை தான், அது காட்டுகிறது.
எனவே, பிப்ரவரியில் பிறப்பிக்கப்பட்ட அரசா ணையின், ஒரு பகுதியை ரத்து செய்வது தவிர வேறு வழியில்லை.இவ்வாறு, 'முதல் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.இதன் மூலம், லஞ்சம் வாங்கும் உயர் அதிகாரிகள், அரசு ஊழியர்கள் தப்ப முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (51)
Reply
Reply
Reply