தேர்தல் சீர்திருத்தம் கொண்டு வராதது ஏன்?

Added : ஜூலை 02, 2016 | |
Advertisement
ஜனநாயகத்தைப் பண நாயகம் வெல்லுகிற கேவலம் ஏற்பட்டிருக்கும் நிலையிலும் கூட, தேர்தல் சீர்திருத்தத்தைப் பற்றிச் சிந்திக்காமலும், ஜனநாயகத்திற்கு நேர்ந்துள்ள அபாயம் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாமலும், நம் அரசியல் கட்சிகள் உள்ளன. குறிப்பாக, அகில இந்திய அளவில் பெரிய கட்சிகளான பா.ஜ.,வும், காங்கிரசும் இதில் அக்கறை செலுத்தாமல் இருப்பது, ஜனநாயகத்தில் நம்பிக்கை
தேர்தல் சீர்திருத்தம் கொண்டு வராதது ஏன்?

ஜனநாயகத்தைப் பண நாயகம் வெல்லுகிற கேவலம் ஏற்பட்டிருக்கும் நிலையிலும் கூட, தேர்தல் சீர்திருத்தத்தைப் பற்றிச் சிந்திக்காமலும், ஜனநாயகத்திற்கு நேர்ந்துள்ள அபாயம் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாமலும், நம் அரசியல் கட்சிகள் உள்ளன. குறிப்பாக, அகில இந்திய அளவில் பெரிய கட்சிகளான பா.ஜ.,வும், காங்கிரசும் இதில் அக்கறை செலுத்தாமல் இருப்பது, ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டிருப்பவர்களுக்கு ஆச்சரியத்தைத் தருகிறது. ஒருவேளை, இக்கட்சிகள் ஜனநாயகத்தைக் காட்டிலும், பண நாயகம் தான் சிறந்தது என்று கருதுகின்றனவோ! இந்திய அரசியல் சாசனம், இந்தியக் குடிமகனை ஓட்டுரிமை என்னும் பிரம்மாஸ்திரத்தைப் பெற்றிருக்கும் சர்வ வல்லமை படைத்தவன் என்று புகழாரம் சூட்டுகிறது. ஆனால், நம் தற்போதைய தேர்தல் முறையோ இந்தியக் குடிமகனை வெறும் ஓட்டளிக்கும் இயந்திரமாக மட்டுமே பாவிக்கிறது. அவனது வல்லமை எல்லாம், ஓட்டுச் சாவடிக்குச் சென்று ஓட்டளிப்பதோடு முடிவுக்கு வந்து விடுகிறது. அதன்பின், எம்.எல்.ஏ.,க்களும், எம்.பி.,க்களும் வல்லமையை அபகரித்து, தங்களுக்கு ஓட்டளித்த மக்களுக்கே எஜமானர்களாக விஸ்வரூபம் எடுத்து விடுகின்றனர். ஜனநாயகத்தைக் காக்கும் சாமானியர்கள், தங்கள் உரிமைகளைப் பெற முடியாமல், அரசியல்வாதிகளுக்கு அடிமைகளாகி அல்லல்படுகின்றனர். கடந்த, 1950ல் நடைமுறைக்கு வந்த நம் அரசியல் சாசனத்தில் காலத்தின் தேவைகளுக்கேற்ப, மக்களின் விருப்பம், எதிர்பார்ப்புகளுக்கேற்ப நுாற்றுக்கும் மேற்பட்ட திருத்தங்கள் செய்யப்பட்டன. அதுபோல், 1952லிருந்து நடைமுறையில் இருந்து வரும் தற்போதைய நம் தேர்தல் விதிமுறைகளிலும் தக்க சீர்திருத்தங்கள் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம். சட்டசபைகளுக்கும், லோக்சபாவுக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்கள் பிரதிநிதிகளாகச் செல்பவர்கள் மக்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, மக்கள் வரிப் பணத்தைக் களவாடி, குறுகிய காலத்தில் கோடீஸ்வரர்கள் ஆகின்றனர். தேர்தலின்போது, தாங்கள் செலவழித்த பணத்தைக் காட்டிலும் பல மடங்கு பணத்தைச் சம்பாதித்து விடுகின்றனர். இம்முறைகேட்டுக்கு அடிப்படைக் காரணம், தற்போதைய நம் தேர்தல் முறையில் உள்ள குறைபாடுகள் தான்.

முதலில் தற்போது நடைமுறையில் இருக்கும் ஓட்டளிக்கும் முறையை மாற்றி அமைக்க வேண்டும். அதாவது, அரசியல் கட்சிகள் ஒவ்வொரு தொகுதியிலும், தங்களது வேட்பாளர்களை நிறுத்தி, அவர்களுக்கு மக்கள் ஓட்டளிக்கும் முறைக்குப் பதிலாக, விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் ஓட்டுப் பதிவு நடைபெற வேண்டும். இதன்படி கட்சிகளால் வேட்பாளர்கள் நிறுத்தப்பட மாட்டார்கள். மாறாக, ஒவ்வொரு கட்சியும், அவைகளுக்குரிய சின்னங்களில் போட்டியிடும். மக்கள், தாங்கள் விரும்பும் கட்சிக்கு, அக்கட்சியின்

சின்னத்திற்கு ஓட்டளிப்பர். ஒரு சட்டசபைத் தொகுதி அல்லது லோக்சபா தொகுதியில் தற்போதுள்ள தேர்தல் முறைகளின்படி எந்தக் கட்சியின் வேட்பாளர் அதிக ஓட்டுகளைப் பெறுகிறாரோ அவரே வெற்றி பெற்றவராகவும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மற்ற வேட்பாளர்கள் தோல்வி அடைந்தவர்களாகவும் கருதப்படுவர். இதனால் வெற்றி பெற்ற வேட்பாளரைக் காட்டிலும், தோல்வியுற்ற வேட்பாளர்கள் அனைவரும் பெற்ற ஓட்டு விகிதம் அதிகம் இருந்தாலும் அவர்களுக்குள்ள ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுகின்றன. ஆனால், விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத்தின்படி தேர்தல் நடத்தப்படும்போது, ஒவ்வொரு கட்சிக்கும், அது பெற்றிருக்கும் ஓட்டு விகிதத்தின் அடிப்படையில், அரசில் பங்கேற்க பிரதிநிதித்துவம் வழங்கப்படும். இதன் மூலம் அனைத்து தரப்பு மக்களின் அபிப்பிராயங்களையும், அபிலாஷைகளையும் நிறைவேற்றும் வாய்ப்புக் கிட்டும். விகிதாச்சாரப் பிதிநிதித்துவத்தின் அடிப்படையில் நடத்தப்படும் தேர்தலில் எந்தக் கட்சியும், ஓட்டளிக்கும் மக்களும் ஏமாற்றத்திற்கு ஆளாவதில்லை. காரணம், தேர்தலில் போட்டியிடும் அனைத்துக் கட்சிகளுமே, அக்கட்சிகள் பெறும் ஓட்டுச் சதவீதங்களின் அடிப்படையில், தங்கள் பிரதிநிதிகளை அக்கட்சிகளால் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும். இதன் மூலம் குறைவான ஓட்டுகளைப் பெறும், ஒரு கட்சி அதிக உறுப்பினர்களைக் கொண்டு, ஆட்சி அமைப்பது தவிர்க்கப்படுகிறது. விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையால், வேட்பாளர்கள், கோடிகள் செலவழித்து ஓட்டுகளை விலைக்கு வாங்குவது தவிர்க்கப்படுகிறது. கோடீஸ்வரர்கள் மட்டுமே தேர்தலில் பங்கேற்க முடியும் என்ற ஜனநாயகத்திற்கு விரோதமான போக்கு தடுக்கப்படுகிறது. ஜாதி, மத, இன, மொழி உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு, அனைவரும் பொது நோக்கோடு, எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தால், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நன்மை கிடைக்கும் என்பதை ஆராய்ந்து, ஓட்டளிக்கும் நிலை இருக்கும்.

விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறையில் தேர்ந்தெடுக்கப்படும் சட்டசபை அல்லது லோக்சபா உறுப்பினர் ஒருவர், தன் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி, முறைகேடுகளில் ஈடுபட்டால், அத்தகைய உறுப்பினரின் பதவியை ரத்து செய்து, அவருக்குப் பதிலாக வேறு நபரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அவர் சார்ந்திருக்கும் கட்சிக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

கட்சி அந்த உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில், மக்களுக்கு அந்த உறுப்பினரைத் திரும்பப் பெறும் உரிமை வழங்கப்படுகிறது. விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறையில் தேர்தல்களை நடத்தும் நாடுகள், தங்கள் வசதிக்கேற்ப அம்முறையில் சில மாற்றங்களுடன் தேர்தல்களை நடத்துகின்றன. தற்போதைய தேர்தல் முறையில், பெரிய கட்சிகள் ஒதுக்குகிற இடங்களோடு திருப்தியடைய வேண்டிய நிர்ப்பந்தத்தில் சிறிய கட்சிகள் இருக்கின்றன. கூட்டணியில் அங்கம் வகித்து, பெரிய கட்சிகளுடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிடும் சிறிய கட்சிகள், ஆட்சியில் பங்கேற்க முடியாது. ஆனால், விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறையில் அறுதிப் பெரும்பான்மை பெற முடியாத பெரிய கட்சி, சில சிறிய கட்சிகளின் தயவுடன் கூட்டணி ஆட்சி தான் அமைக்க முடியும். மிக முக்கியமாக தேர்தலின்போது, சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதற்கு வாய்ப்பில்லாமல் போகும். அதிக எண்ணிக்கையில் போலீஸ் படை குவிக்கப்படுவதைத் தவிர்க்க முடியும். இதனால் மத்திய, மாநில அரசுகளுக்கு ஏற்படும் அதிகப்படியான பணச் செலவு தவிர்க்கப்படுகிறது. எனவே, இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு லஞ்ச, ஊழல்களுக்கும், ஜனநாயக விரோத மக்கள் விரோதச் செயல்களுக்கும் இடம் அளிக்கிற, தற்போதைய தேர்தல் முறையைக் கைவிட்டு, எவ்வித முறைகேடுகளுக்கும் இடம் அளிக்காத, உலகின் பல நாடுகள் பின்பற்றும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையை நடைமுறைக்குக் கொண்டு வர, பா.ஜ., அரசும், காங்கிரசும் காலம் தாழ்த்தாது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சமூக நீதியை காக்க இதை விட வேறு வழியில்லை.


இ-மெயில்: krishna_samy2010@yahoo.com


- ஜி.கிருஷ்ணசாமி -


எழுத்தாளர், சிந்தனையாளர்


கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் (பணி நிறைவு)

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறதுவாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X