கங்கை அமரன்... பல 'ஹிட்' பாடல்களை எழுதிய பாடலாசிரியர், கதாசிரியர், இசை அமைப்பாளர், இயக்குநர் என பல பரிமாணங்களை கொண்டவர். தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக அவரை சந்தித்தோம்.* உங்கள் பார்வையில் சினிமா இசை எப்படி வளர்ச்சி கண்டுள்ளது?தியாகராஜர் பாகவதர், பி.யு. சின்னப்பா, டி.எம்.எஸ்., பி.பி.சீனிவாஸ் காலங்கள் முடிந்து எஸ்.பி. பாலசுப்பிரமணியன் பாடி முடிந்தாயிற்று. தற்போதைய இசை எப்படி இருக்கிறது என அனைவருக்கும் தெரிந்ததுதான். அந்த காலத்து பாடல்கள் போன்று இந்த காலத்து பாடல்கள், இசை இருக்கிறதா. இது வளர்ச்சியா, தளர்ச்சியா என தெரியவில்லை. தமிழ் செத்துக் கொண்டிருக்கிறது. இனிவருபவர்கள் எதை எடுத்துச் சொல்ல இருக்கின்றனர் என தெரியவில்லை.அர்த்தமில்லாத பாடல்கள் வேண்டும் என சிலர் நினைக்கின்றனர். தற்போதுள்ள ஹீரோக்களின் பாடல்கள் ஏதாவது சொல்கிறமாதிரி இருப்பது கஷ்டம். தற்போதைய பாடல்களில் தமிழ் எங்கே இருக்கிறது. தற்போதைய சினிமாக்களில் பக்தி பாடல்களே இல்லை. அந்த காலம் போன்று தற்போது வாழ்க்கை முறை இல்லை. படமும் இல்லை. பாடலும் இல்லை. பாசமும் இல்லை. பந்தமும் இல்லை.* உங்கள் குடும்பம் இசைக்குடும்பம். ஆனால் உங்கள் மகன் வெங்கட்பிரபு இயக்குனராகிவிட்டாரே?அவனும் நன்றாக பாடுவான். இளையமகன் பிரேம் தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் 20 படங்களில் இசை பணியாற்றியுள்ளான். அவனது இசைப்பணி தொடர்கிறது.* மனிதனுக்கு இசை முக்கியமா?இசை மனிதர்களை பண்படுத்துகிறது. மகிழ்ச்சியை கொடுக்கிறது. பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்க செய்கிறது. வாழ்க்கையில் வெற்றிபெற துணை நிற்கிறது. தற்போதுள்ள அனைத்து குழந்தைகளும் ஏதாவது ஒரு திறமையை கொண்டுள்ளனர்.ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகளை இசைக்கருவிகளை வாசிக்கவும், நல்ல இசையை கற்றுக் கொடுக்கவும் பெற்றோர் முயற்சிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் கலைகள் குடி புக வேண்டும்.* எம்.ஜி.ஆர் உங்களை மருமகன் என்று அழைப்பாராமே?ஆமாம். என்னை அவர் 'மருமகன்' என்றே அழைப்பார். அவரது படங்களில் இடம் பெற்ற பாடல்களில், அவர் சொல்லாத கருத்துக்களே இல்லை. அவருக்கு இசை அறிவு அதிகம்.மனிதாபிமானம் அதிகமுள்ளவர். அவர் வீட்டிற்கு சென்றால், முதலில் சாப்பிடத்தான் கூறுவார். காலையில் இட்லி, அயிரை மீன் குழம்பு இருக்கும். 'மதியம் தயிர் சாதத்துடன் கீரையை பிசைந்து சாப்பிடுங்கள். சுவை அதிகம்' என அருகில் இருந்து கவனிப்பார்.* இன்னும் இளமையாக இருக்கும் நீங்கள், இளையதலைமுறைக்கு சொல்ல விரும்புவது?கலை நயம் மிகுந்தது நமது நாடு. கலையை போற்றுங்கள். நல்ல இசையை கேளுங்கள். இசையை கற்றுக் கொள்ளுங்கள். தமிழ் பாடல்களை கேளுங்கள். உங்களுக்கு பிடித்த நடிகர் நடிக்கும் சினிமாவில் தமிழ் பாடல்களை பாடும்படி கடிதம் எழுதுங்கள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE