சுறுசுறுப்பை சொந்தமாக்கி மகுடம் சூடுங்கள்!

Added : ஜூலை 04, 2016
Advertisement
சுறுசுறுப்பை சொந்தமாக்கி மகுடம் சூடுங்கள்!

அறிஞர் எமர்சனை பார்த்து ஒருவர் கேட்டார்.'உங்கள் வயது என்ன?''360 ஆண்டுகள்''என்னால் நம்ப முடியவில்லை. இது இயலாத காரியம். அறுபது வயதுக்கு அதிகமாக இருக்க மாட்டீர்கள்'எமர்சன் சொன்னார் ''நீங்கள் சொல்வது சரிதான். எனது உண்மையான வயது அறுபதுதான். ஆனால் உங்களைவிட 6 மடங்கு அதிகமாக வாழ்ந்திருக்கிறேன். 360 ஆண்டுகள் எப்படி வாழ முடியுமோ, அவ்விதம் இந்த 60 ஆண்டுகளை பயன்படுத்தி இருக்கிறேன்'' என்றார்.நாம் எவ்வளவு காலம் வாழ்ந்திருக்கிறோம் என்பது முக்கியம் அல்ல. எப்படி வாழ்கிறோம் என்பதுதான் முக்கியம்.பிறவிகளில் மகத்தானது மனித பிறவி அல்லவா? அந்த பிறவியை மகத்துவப்படுத்துவது நாம் வாழும் முறையில்தானே இருக்கிறது. வரலாறு என்பது வந்து போனவர்களின் தொகுப்பு அல்ல. சாதனைகளை தந்து போனவர்களின் தொகுப்பு. சோம்பல் கொண்ட மனம் துருப்பிடித்த இரும்பு போல. சுறுசுறுப்பு கொண்ட மனம், சாணை பிடிக்கப்பட்ட கத்தி போல. உடனுக்குடன் பணிகளை முடிப்பதே முக்கியம்.வெற்றிக்கான வழிமுறைகள் பிரார்த்தனை செய்ய நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். அது ஆத்மாவின் சங்கீதம்.படிக்க நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். அது அறிவின் வாயில்.உழைக்க நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.அது செயலின் ஊற்று.விளையாட நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். அது இளமையின் ரகசியம்.உதவி செய்ய நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். அது உள்ளத்திற்கு உரம்.ஒருநாள் என்பது நம் வாழ்வின் ஒரு பகுதி. அதன் ஒவ்வொரு மணித்துளியையும் நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில்தான் நம் வாழ்க்கை அமைகிறது. உயிரோடு வாழ்வது வாழ்க்கை அல்ல. உயிர்ப்போடு வாழ்வதுதான் வாழ்க்கை. அந்த உயிர்ப்பை தருவது சுறுசுறுப்பு. வாழ்க்கை எனும் தீபத்தில் சுறுசுறுப்பு எனும் நெய்யை பிரகாசமாக எரிய விடுங்கள். வாழ்க்கை நிச்சயம் வளமடையும்.''சுறுசுறுப்பான மனதுக்குதான் எதிர்பாராத வாய்ப்புகள் வந்து சேரும். வாய் பிளந்த சிப்பிக்குள்தான் மழைத்துளி விழுந்து முத்தாக வளரும்'' என்பார் லுாயிபாஸ்டின். சுறுசுறுப்பாளர்கள் உலகப்புகழ் பெற்ற அறிவியல் மேதை சர். ஐசக் நியூட்டன் ஒருநாள் 18 மணி நேரம் உழைக்க கூடியவர். ஏறத்தாழ தன் 20 ஆண்டு கால ஆராய்ச்சியை ஒரு பெரிய நோட்டு புத்தகத்தில் எழுதி வைத்திருந்தார். ஒருநாள் இரவு தமது சோதனை சாலையில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். வெளிச்சத்திற்காக ஏற்றி வைக்கப்பட்டிருந்த மெழுகுவர்த்தி சாய்ந்து ஆய்வு புத்தகத்தை எரித்துவிட்டது. நியூட்டன் நிலை குலையவில்லை. நண்பர்களிடம் சொன்னார். ''இப்போது ஒன்றும் கெட்டு போய்விடவில்லை. சில மாதங்களில் மீண்டும் முயன்று இழந்த குறிப்புகளை தொகுத்து விடுவேன்'' என்றார்.சோர்வில் மூழ்காத சுறுசுறுப்பாளர்களுக்கே இது இயலும்.''உற்சாக உழைப்பு இல்லாமல் உயர்ந்த வெற்றியை பெற முடியாது'' என்கிறார் வால்டேர். ஆளுமைதிறனில் 'பளிச்'சென்று இருப்பது ஒரு பண்பு என்று சொல்வார்கள். அது உடையில் மட்டுமல்ல. உள்ளத்திலும் தான். உங்களுடைய புத்திசாலித்தனம், காரியபங்கு, சுறுசுறுப்பு, அந்த 'பளிச்'சென்ற தன்மையை உங்களுக்கு கொடுத்துவிடும். விறுவிறு நடை மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும்.புத்திகூர்மை உடையவர்தான் சுறுசுறுப்பாக காரியம் பண்ணுகிறார். அவர் சூழ்நிலைகளுடன் மின்னல் வேகத்தில் பொருந்திவிடுகிறார். அவருடைய துரிதம் மற்றவர்கள் மத்தியில் அவரை 'பளிச்'சிட வைக்கிறது. ஒத்திவைப்பை ஓரங்கட்டுங்கள் சுறுசுறுப்பின் முதல் எதிரி சோம்பல். மனதுக்கு பிடிக்காத வேலையை வேறுவழியின்றி செய்பவரிடம் 'என்ன வேலை செய்கிறீர்கள்' என்று கேட்டால், 'இந்த சனியன் பிடிச்ச வேலையில்தான் 20 வருஷமா குப்பை கொட்டிகிட்டு இருக்கிறேன்' என்பார்.இங்கே ஒரு வேடிக்கை சம்பவம் நினைவுக்கு வருகிறது.எனது அமெரிக்க பயணத்தில், நியூயார்க் விமான நிலையத்தில் இறங்கியபோது வரவேற்க வந்தவர்களில் ஒருவர், 'தமிழ்நாட்டில் எங்கே வேலை செய்கிறீர்கள்?' என்று கேட்டார். நான் அவரை உற்றுபார்த்தேன். 'தவறாக இருந்தால் மன்னித்துவிடுங்கள்' என்றார். 'நீங்கள் சரியாகதான் கேட்டிருக்கீங்க. தமிழ்நாட்டில் நாங்க விசாரிக்கும்போது, 'எங்கே வேலை செய்றீங்கனு கேட்பதில்லை. எங்கே வேலை பார்க்கிறீங்க?' என்றுதான் கேட்போம்' என்றேன். ஏனென்றால் பல பேர் வேலையை பார்க்கிறார்கள். செய்வதில்லை. அரசு அலுவலகங்களில் இந்த கொடுமை அதிகம் என்று நான் சொன்னதும், அந்த நையாண்டியை எல்லோரும் ரசித்தனர். எந்த வேலையை செய்தாலும் ஈடுபாட்டோடு செய்ய வேண்டும். பொய்யான மனப்பாங்கு சிகரெட், குடி போன்ற கெட்ட பழக்கங்களை விட வேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருந்தால் எப்படி? செயல்படுத்த வேண்டாமா? சிகரெட் பிடிக்கிற வழக்கத்தை விடமுடியாதென்று யார் சொன்னது? இதுவரை நான் 30 முறை விட்டிருக்கிறேன் என்று ஒருவர் சொன்னால் எவ்வளவு வேடிக்கையாக இருக்கும். துாக்கம் வருகிறது அல்லது உடம்பு களைப்பாக இருக்கிறது என்று உடம்பெல்லாம் அடிச்சி போட்ட மாதிரி இருக்குது என்பது நீங்கள் அடிக்கடி கேட்ட வசனமாக இருக்கலாம். அல்லது நீங்களே உச்சரிக்கும் வாக்கியங்களாக இருக்கலாம். ஆனால் இது உண்மையா? திடீரென்று நமது வீடு தீப்பிடித்துக் கொண்டதென்றால் துாக்கம் வருமா? நேரமே இல்லை என வேலைகளை ஒத்திப்போடுதல் ஒரு பொய்யான மனப்பாங்கு. சுறுசுறுப்பானவர்களுக்கு நேரம் இருந்து கொண்டே இருக்கும். சோம்பல் உள்ளவர்களுக்கு சோம்பல் முறிக்கவே நேரம் இருக்காது. ஒரு காரியத்தை எப்படி தொடங்குவது என்பதில் தயக்கம், பலரை ஆட்டிப்படைக்கிறது. அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்று கடமையில் இருந்து நழுவுகிறவர்கள் வெற்றி மகுடத்தை சூட முடியாது. பணிகளை முடிக்காமல் கிடப்பில் போட்டு விட்டு, அதை முடிக்க முடியவில்லையே மனதால் அலட்டிக்கொள்ளாமல், உரிய காலத்தில் பணிகளை முடித்து மனதுக்கு பூரண ஓய்வு கொடுங்கள். அப்போது அடுத்த வேலைக்கு தயாராகலாம். சுறுசுறுப்பு மந்திரமே இதற்கு துணை செய்யும்.
உழைப்பில் விதையுங்கள் : ஒவ்வொரு நாளின் பணிகளையும் முந்தைய நாளின் இரவிலேயே திட்டமிட்டுக் கொள்ளுங்கள். செய்வதற்கு வேலைகள் இருந்தால் மனம் எப்போதும் சுறுசுறுப்போடும், உற்சாகத்தோடும் இருக்கும். உண்மையான பரவசம் என்பது ஒரு வேலையை துரிதமாக, சரியாக செய்து முடிப்பதுதான். எதையும் ஈடுபாட்டோடு செய்தால் உற்சாகம் பொங்கும். படைப்பாளி, ஆராய்ச்சியாளர், தொழில் விற்பனையாளர்களுக்கு கை கொடுக்கும் மருந்து இதுதான்.ஒவ்வொரு தினமும் உங்களுக்கு வெற்றி திருநாளாக அமைய வேண்டுமானால், ஒவ்வொரு நொடியையும் உழைப்பில் விதையுங்கள். அதிக நேரம் துாங்குவது தேவையினால் அல்ல. பழக்கத்தினால்தான். துாங்கும் நேரத்தை வரையறை செய்யுங்கள். எழ வேண்டிய நேரத்தை தீர்மானித்துக்கொண்டால், உடனே எழுந்துகொள்ளுங்கள். தோள்களை பத்து முறை மேலும், கீழுமாக குலுக்குங்கள். துாக்கம் பறந்தோடிவிடும்.மேஜைகளில் தேவையில்லாத அடைசல் வேண்டாம். முக்கிய ஆவணங்கள் எங்கே உள்ளன என்பதை பற்றி கோப்பு இருக்கட்டும். எந்தெந்த பொருட்களை எங்கெங்கே வைக்க வேண்டும் என்ற திட்டம் இருக்கட்டும். தேவையில்லாத தேடல்கள் வேண்டாம். வந்த கடிதங்களுக்கு, இமெயில், எஸ்.எம்.எஸ்.,க்கு உடனுக்குடன் பதில் தர முயற்சி செய்யுங்கள். முக்கிய தினங்கள், கூட்டங்கள், சந்திப்புகள் பற்றிய குறிப்பேடு இருக்கட்டும். வேலைகளை முடிக்க காலவரையறை நிர்ணயுங்கள். உற்சாகம் தரும் தன்னம்பிக்கை நுால்களை படியுங்கள். எப்போதும் கலகலப்பாக இருங்கள். கவனத்தை ஒருமுகப்படுத்துங்கள். அப்புறம் என்ன... நீங்களும் மகுடம் சூடலாம்.
-- முனைவர் இளசை சுந்தரம்,பேச்சாளர், மதுரை

98430 62817.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X