மிட் நைட் பேச்சு...அதிகாரியின் மானம் போச்சு!| Dinamalar

'மிட் நைட்' பேச்சு...அதிகாரியின் மானம் போச்சு!

Added : ஜூலை 05, 2016
Share
கோவை அரசு கலைக் கல்லூரி அருகில் உள்ள பூங்காவில் அமர்ந்தபடி, 'லேப் டாப்' லிருந்து நோட்ஸ் எடுத்துக் கொண்டிருந்த மித்துவின் 'ஆன்ட்ராய்டு' முணுமுணுத்தது.மறுமுனையில் பேசிய சித்ரா, ''மித்து, நம்ம எதிர்த்த வீட்டுல இருக்கற லீலாவதி, ஜி.எச்.,ல அட்மிட்டாம்,''பதறிய மித்ரா, ''ஏன்...என்னாச்சு? காலைல நல்லாதானே கிளம்பி போனாங்க?'' என்றாள்.''ஏதோ ஆக்சிடென்டுல மாட்டி, ரொம்ப
'மிட் நைட்' பேச்சு...அதிகாரியின் மானம்  போச்சு!

கோவை அரசு கலைக் கல்லூரி அருகில் உள்ள பூங்காவில் அமர்ந்தபடி, 'லேப் டாப்' லிருந்து நோட்ஸ் எடுத்துக் கொண்டிருந்த மித்துவின் 'ஆன்ட்ராய்டு' முணுமுணுத்தது.
மறுமுனையில் பேசிய சித்ரா, ''மித்து, நம்ம எதிர்த்த வீட்டுல இருக்கற லீலாவதி, ஜி.எச்.,ல அட்மிட்டாம்,''
பதறிய மித்ரா, ''ஏன்...என்னாச்சு? காலைல நல்லாதானே கிளம்பி போனாங்க?'' என்றாள்.
''ஏதோ ஆக்சிடென்டுல மாட்டி, ரொம்ப அடியாம். வர்றியா பார்த்துட்டு வரலாம்... நான் ஜி.எச்., முன்னாடி இப்பதான் இறங்கினேன்,'' என்றாள் சித்ரா.
''அங்கயே நில்லு...இதோ வந்துர்றேன்,'' என்றவாறு, ஸ்கூட்டரில் ஏறி முறுக்கினாள் மித்ரா. இரண்டு நிமிடத்தில் ஜி.எச்., முன் 'ரிசீவ்' செய்த சித்ரா, உள்ளே அழைத்துச் சென்றாள். அரசு மருத்துவமனைக்கே உரிய அந்த 'குளோரின்' நாற்றம் 'குப்' என நாசியை தாக்கியது.
''எவ்வளவு கோடி செலவளிச்சாலும், கவர்மென்ட் ஆஸ்பத்திரிகள்ல இந்த ஸ்மெல்ல மட்டும், ஒண்ணும் பண்ண முடியலையே,'' என்றாள் சித்ரா.
இவர்கள் உரையாடிக்கொண்டிருந்த போது, டிரோமா வார்டு அருகே, கொசு மருந்து அடித்துக் கொண்டிருந்தனர்.
''கோயமுத்தூர்ல கொசுவுக்கு இப்பல்லாம் பஞ்சமே இல்ல. புதுசு புதுசா காய்ச்சல் வர்றதுக்கு இதுதான் காரணம்,'' என்றாள் மித்ரா.
''உனக்கு தெரியுமா மித்து, கார்ப்பரேஷன்ல கொசு ஒழிப்பு வேலைக்கு, பர்மனென்ட் ஊழியர்களையும், ஒப்பந்த ஊழியர்களையும் பயன்படுத்துனாங்க. ஆனா, தனியா மஸ்தூர் வேலைக்காரங்கள போட்டிருக்கறதா, பொய் கணக்கு எழுதி, பல லட்சம் ரூவா அடிக்கிறாங்களாம்,'' அடுத்த மேட்டருக்கு தாவினாள் சித்ரா.
''நானும் கேள்விப்பட்டேன்க்கா. கார்ப்பரேஷன்ல ஆளுங்கட்சி வி.ஐ.பி.,க்கு நெருக்கமான ஒப்பந்ததாரர்தான், இதுல எல்லாம் 'கில்லி'. கொசு ஒழிப்புல ஊழல் பண்றது எப்படின்னு, கார்ப்பரேஷன் ஆபீசர்சுக்கு அவங்கதான் பாடம் நடத்தியிருக்காங்க,'' என்றாள் மித்ரா.
''ஓ...அதனால தான், ஒர்க் முடிஞ்ச வேலைக்கு செட்டில் பண்ண பணமில்லைன்னு, 'ஸ்டேட் பண்ட்ஸ்' கேட்டு, கார்ப்பரேஷன் ஆபீசர்ஸ் சென்னையில 'கேம்ப்' அடிச்சிருக்காங்களாமா?'' கேட்டாள் சித்ரா.
''அதுலயும் கமிஷன் அடிக்காமயா இருப்பாங்க?'' என்றாள் மித்ரா.
''இது எதையும் கண்டுக்காம, கமிஷனர், மேயர்லாம் ஜெர்மனிக்கு போயிட்டாங்க. ஒரு வாரமா பல ஏரியால தண்ணி வரலை. அவங்களுக்கு அடுத்தபடியா இருக்கற 'மேடம்', கார்ப்பரேஷனுக்கு எப்ப வர்றாங்க, எப்ப போறாங்கன்னே தெரியல,'' என்றாள் சித்ரா.
''ஆபீசர்ஸ்னாலே இப்படித்தான்னு ஆகிப்போச்சு. நகர ஊரமைப்பு துறைல புதுசா ஜாய்ன் பண்ணியிருக்கிற ஒரு ஆபீசர், லே - அவுட் அப்ரூவல், கட்டட அனுமதி, தொழிற்சாலை அனுமதின்னு, ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு 'ரேட்' பிக்ஸ் பண்ணி வச்சிருக்காராம். இது நார்மல் மாமூல விட, ரொம்ப அதிகமா இருக்குதுனு புரமோட்டர்கள்லாம் புலம்புறாங்க. ஒரு வருஷத்துக்கு, 20 லட்சம் ரூபா லஞ்சம் கொடுத்து வந்தா, சும்மாவா இருப்பாங்க?'' என்று கடுப்பாக கேட்டாள் மித்ரா.
அப்போது பேஷன்டுடன் ஸ்ட்ரெச்சரை தள்ளியபடி வந்த ஒரு ஊழியர், மற்றொரு ஊழியரிடம், 'செல்வராஜூ, இந்த பேஷன்டுக்கு எக்ஸ்ரே எடுக்கணும். முடிச்சுட்டு டிரோமா வார்டு, 10ம் நம்பர் பெட்ல விட்ரு' எனக் கூறி சென்றார்.
''மித்து, அதிகாரின்னு சொன்னவுடனேதான் ஞாபகத்துக்கு வருது. கோவை இந்து அறநிலையத்துறை அதிகாரி ஒருத்தரு, எந்தெந்த கோவில்ல கட்டுமான வேலை நடக்குதோ, அந்த கோவில் செயல் அலுவலர்ட்ட அஞ்சு லட்சம் ரூவா வரை கப்பம் கட்டச்சொல்றாராம். கப்பம் கட்டாதவங்கள நேரடியா கூப்பிட்டு, ஒருமையில திட்டுறாராம்.
''சிலபேரு மேல, 'டிசிப்ளினரி ஆக்ஷன்' எடுக்கறாராம். அதனால இந்த ஆபீசர் எப்படா டிரான்ஸ்பர் ஆகி போவார்னு எல்லாரும் புலம்புறாங்களாம்,'' என்றாள் சித்ரா.
''ஸ்ஸ்ப்பா...,'' என்று கர்ச்சீப்பால் முகத்தை துடைத்துக் கொண்ட மித்ரா, ''சரிக்கா, பொலிட்டிக்கல் மேட்டர் ஏதாவது இருக்கா?'' என்று கேட்டாள்.
''ம்ம்ம்...இருக்கு. சிங்காநல்லூர் தொகுதில, சவுரிபாளையம் பகுதியில இருக்கற ஒரு கிளை செயலாளர், எலக்ஷன் செலவுக்கு கொடுத்த பணத்தை, கட்சிக்காரங்க கண்ணுலயே காட்டலையாம். ஓட்டுக்கு குடுத்த நோட்டுகளையும் அமுக்கிட்டாராம். அந்த பணத்துல, 'ஆக்டிவா' ஸ்கூட்டரும், மூணு பவுன் சங்கிலியும் வாங்கியிருக்காறாம்,'' என்றாள் சித்ரா.
இருவரும் டிரோமா வார்டுக்குள் நுழைய முயன்றனர். வாசலில் 'பொன்னுசாமி' என பேட்ஜ் குத்தியிருந்த செக்யூரிட்டி, 'டாக்டர்ஸ் வர்ற நேரம். இப்பலாம் விசிட்டர்சை விட முடியாதும்மா' என தடுக்க, இருவரும் அங்கிருந்த மரத்தடிக்கு சென்றனர்.
''கேள்விப்பட்டியா மித்து... வீட்டு வசதி வாரிய ஆபீசரு ஒருத்தரு, பொண்ணுங்க விஷயத்துல கொஞ்சம் லொள்ளு பேர்வழியாம். அங்க வேலை செய்ற, சின்ன வயசு லேடி ஸ்டாப அர்த்த ராத்திரில போன்ல கூப்பிட்டு, ஆபாசமா பேசியிருக்கார்.
கடுப்பான அவரு, போனை 'கட்' பண்ணியும் தொடர்ந்து, 36 தடவை கூப்பிட்டுட்டே இருந்திருக்காரு,'' என்றாள் சித்ரா.
''அந்த ஆள ஏதாச்ச எடுத்து அடிக்க வேணாமா... அப்புறம் என்னாச்சுக்கா?'' கோபத்தில் மித்ராவின் முகம் இறுகியது.
''அந்த லேடி, அவங்க அண்ணன்கிட்ட சொல்லி அழுதிருக்கு. அவர் மறுநாள், திகுதிகுன்னு மேனேஜர் ரூமுக்குள்ளே நுழைஞ்சு திட்டுனதோட, அடிக்கவும் போயிருக்காரு. ஆபீஸ் ஸ்டாப் சேர்ந்து காப்பாத்திட்டாங்களாம். கோபம் தீராத அவரு, வீட்டு வசதி வாரிய ஆபீஸ் கேட் முன்னாடி நின்னு கண்டபடி கத்தி மானத்தை வாங்கிட்டாராம்,'' என்றாள் சித்ரா.
அப்போது, டிரோமா வார்டில் இருந்து அவசரமாக வெளியே வந்த நர்ஸ் ஒருவர், 'ஸ்ரீதர் கூட யாருங்க வந்திருக்காங்க, டாக்டர் வரச்சொல்றாரு' என்றார். அதற்குள் விசிட்டர்சுக்கு செக்யூரிட்டி கதவை திறந்து விட, சித்ராவும் மித்ராவும் உள்ளே நுழைந்தார்கள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X