சுவாதி கொலையில் எனக்கு தொடர்பு இல்லை: ராம்குமார் பல்டி| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சுவாதி கொலையில் எனக்கு தொடர்பு இல்லை: ராம்குமார் பல்டி

Updated : ஜூலை 05, 2016 | Added : ஜூலை 05, 2016 | கருத்துகள் (179)
ஜாமின், ராம்குமார், சுவாதி, மனு தாக்கல்

சென்னை: சுவாதி கொலைக்கும் தனக்கும் தொடர்பில்லை எனக்கூறியுள்ள ராம்குமார், ஜாமின் கேட்டு சென்னை முதன்மை அமர்வு கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளான்.

சென்னை சூளைமேட்டை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சுவாதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டான். அவன் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றான். அவனை காப்பாற்றிய போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவன் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறான். அவன் பாதுகாப்பு கருதி கைதிகள் பிரிவுக்கு மாற்றப்படவில்லை எனவும், தீவிரி சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் டாக்டர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில், ராம்குமார் இன்று புழல் சிறை மருத்துவமனைக்கு மாற்றப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், ராம்குமார் ஜாமின் கேட்டு, மனு தாக்கல் செய்துள்ளான். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ராம்குமார் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ராம்குமார் தனது மனுவில், சுவாதி கொலைக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. உண்மையான கற்றவாளியை காப்பாற்றவே என் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கொலை சம்பவத்திற்கு 2 நாளுக்கு முன் சுவாதியை யாரோ தாக்கியதாக கூறப்படுகிறது எனக்கூறியுள்ளார். விரைவில் இந்த மனு குறித்து விசாரணை நடைபெற உள்ளது.

ராம்குமார் வக்கீல் வக்காலத்து : ராம்குமார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ராம்குமார் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபடவில்லை. ராம்குமார் கழுத்தை அறுத்தது போலீசாருடன் வந்த நபர்கள் தான். எங்களுக்கு வந்த அறிவுரைப்படி ராம்குமாருக்கு ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட் போலீசாருக்கு 2 நாள் கெடு விதித்ததால் ராம்குமாரை போலீசார் அவசரமாக கைது செய்துள்ளது. சுவாதி கொலைக்கும் ராம்குமாருக்கும் தொடர்பில்லை. கொலைக்கு முன்னர் சுவாதியை யாரோ தாக்கியுள்ளனர். இது பற்றி தீவிரமாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.
டி.என்.ஏ., சோதனை: சுவாதியை கொலை செய்ததற்கான காரணங்கள் குறித்து ராம்குமார் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துவிட்ட நிலையில், அதற்கான ஆதாரங்களை திரட்டி கோர்ட்டில் சமர்பிக்க போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர். சுவாதியை கொலை செய்ய ராம்குமார் பயன்படுத்திய அரிவாளில் படிந்திருந்த ரத்தம் ஏற்கனவே சேகரிக்கப்பட்டுள்ளது. அதுபோல ராம்குமாரின் சட்டையில் படிந்திருந்த ரத்தத் துளிகளும் சேகரிக்கப்பட்டுள்ளது. அவை ஹைதராபாத்தில் உள்ள சோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சேகரிக்கப்பட்ட அந்த ரத்தத்தை கொண்டு மரபணு சோதனை செய்யப்படும். அதில் சுவாதியை கொலை செய்தது ராம்குமார் என அறிவியல் பூர்வமாக கண்டுபிடிக்கப்பட்டு, உறுதிபடுத்தப்படும். இந்த வழக்கில் டி.என்.ஏ. அறிக்கையானது முக்கியமானதாக கருதப்படுகிறது. இதுதவிர தடயவியல் சோதனை மற்றும் சாட்சிகளையும் போலீசார் திரட்டி வருகின்றனர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X