உயர் கல்வி பயணம் இனிமையாக| Dinamalar

உயர் கல்வி பயணம் இனிமையாக

Added : ஜூலை 05, 2016 | கருத்துகள் (1)
உயர் கல்வி பயணம் இனிமையாக

இது ஒரு கல்வித் திருவிழாக் காலம். மாணவர்கள் புதிய படிப்புகளையும், புதிய கல்வி நிலையங்களையும் தேடி பயணம் மேற்கொள்ளும் காலம்.இத்தகைய சூழ்நிலையில், முதலில் மாணவர்கள் உயர் கல்வியின் தன்மையை புரிந்துகொள்ள வேண்டும். இதுவரை நீங்கள் பெற்ற கல்விக்கும் இனிமேல் நீங்கள் பெறப்போகும் கல்விக்கும் அதிக வித்தியாசம் உள்ளது. நீங்கள் தான் உயர் கல்வியை நாடி, தேடி செல்ல வேண்டும். இதில் மூன்று வகை மாணவர்கள் உள்ளனர். அவர்கள்:1. விரும்பிய படிப்பை விரும்பிய கல்வி நிறுவனத்தில் படிக்க வாய்ப்பு பெற்றவர்.2. விரும்பாத படிப்பை விரும்பிய கல்வி நிறுவனத்தில் படிக்க வாய்ப்பு பெற்றவர்.3. விரும்பாத படிப்பை விரும்பாத கல்வி நிறுவனத்தில் கட்டாய சூழ்நிலையில் படிக்கும் வாய்ப்பு பெற்றவர்.
யாராக இருந்தாலும் ஒரு புதிய பயணத்தையும், ஒரு புதிய அணுகுமுறையையும் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை இங்கு உள்ளது. இங்கு புரிதல் மிக முக்கியம்.
அறிவு தேடலுக்கான நேரம் : ஆள் இல்லா காட்டில் தனியாக விடப்பட்ட நீங்கள் தான் புதிய பாதைகளையும், புதிய யுக்திகளையும் உருவாக்கிக்கொள்ள வேண்டும். முதலில் உங்கள் கல்வி நிறுவனம் எந்தத் துறையில் நிபுணத்துவம் பெற்றுள்ளது என்று புரிந்துகொள்ள வேண்டும்.உயர் கல்வியை 'அறிவு திரட்டு' என ராஜாஜியும், 'அறிவுத் தேடல்' என திரு.வி.க.வும் என கூறினர். இதுவரை படித்த படிப்பில் ஒரு கேள்விக்கு ஒரே ஒரு சரியான விடைதான் இருக்கும். ஆனால் தற்போது ஒரு கேள்விக்கு பல்வேறு சரியான விடைகள் இருக்கும். ஆகவே பல புத்தகங்களையும், ஆராய்ச்சி கட்டுரைகளையும், நிரூபிக்கப்பட்ட உண்மைகளையும், அண்மை தகவல்களையும் தேடி சென்று சேர்க்க வேண்டும். இன்றைய கணினி உலகில் வலைதளங்களில் கோடிக்கணக்கான புதிய விஷயங்கள், அரிய தகவல்கள் மற்றும் உலகப் புகழ் பெற்ற பேராசிரியர்களின் சொற்பொழிவுகள் என்று பல்வேறு விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஆகவே ஆங்கில அறிவுடன் வலைதளங்களை முழுமையாக பயன்படுத்தக் கூடிய திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
சூழலை புரிந்து கொள்ளல் : மாணவர்கள் தங்களின் கல்வி நிறுவனங்களை பற்றி முழுமையாக புரிந்துகொள்ள வேண்டும். கல்லுாரி நிர்வாக அமைப்பு, மாநில, தேசிய மற்றும் உலகளவில் அக்கல்வி நிறுவனத்தின் தரமதிப்பு, எந்தத் துறையில் புகழ் பெற்றது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இன்று 'நாக்' போன்ற தர நிர்ணயத்திற்கான பல்வேறு அமைப்புகள் உள்ளன. இதுபோன்று எந்தெந்த அமைப்புகளில் எவ்விதமான சான்றிதழ்களை அவை பெற்றுள்ளன என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
நம்பிக்கை முக்கியம் : இங்கு, மாணவர்கள் முதலில் பேராசிரியர்களின் நம்பிக்கையை பெற வேண்டும். அவர்கள் என்ன, எங்கு படித்தனர், தனி சிறப்பு என்ன, எந்த துறையில் நிபுணத்துவம் பெற்றவர், எழுதிய ஆராய்ச்சி கட்டுரைகள் மற்றும் புத்தகங்கள் என்னென்ன போன்ற பல விஷயங்களை புரிந்துகொள்ளல் வேண்டும். உயர்கல்வி உங்களுக்கு பரிமாறப்பட மாட்டாது. 'பபெ' போன்று அனைத்து உணவு வகைகளும் ஒரே இடத்தில் இருந்தாலும் நீங்கள் தான் உங்களுக்கு பிடித்த சிறந்த உணவு எங்கிருக்கிறது என தேடிச் செல்ல வேண்டும். பேராசிரியர்களை அடிக்கடி வகுப்பறை தாண்டி சந்திக்க வேண்டும். அவர்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை உருவாக வேண்டும். உங்களின் அறிவுப்பசி அவர்களுக்கு தெரிய வேண்டும். அப்போதுதான் அவர் உங்களை முழு மனதுடன் ஏற்றுக்கொள்வார். பேராசிரியர்களின் அறிவாற்றலையும், அனுபவங்களையும் உங்களது வாழ்க்கை முன்னேற்றத்துக்கும் பயன்படுத்திக்கொள்வது உங்கள் கையில் தான் உள்ளது. மாவீரன் அலெக்சாண்டர், நெப்போலியன், அக்பர், அசோகர், ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன், டாக்டர் ராதாகிருஷ்ணன், கணிதமேதை ராமானுஜன், அப்துல்கலாம் போன்ற சரித்திர நாயகர்கள் அவர்களது ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டவர்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
சுயகட்டுப்பாடு அவசியம் : இங்கு மாணவர்களுக்கு மிகப் பெரிய சவால், அளவற்ற சுதந்திரம். இதுவரை உங்களுக்கு இருந்த பெற்றோர் அரவணைப்பு, கண்காணிப்பு ஆசிரியர்கள் கண்டிப்பு இனிமேல் கிடைக்காது. விடுதலையாகும் சிட்டுக் குருவிகள் போல் சிறகடித்து பறக்கும் உணர்வை பெறுவார்கள். அளவற்ற சுதந்திரம் தான் உங்கள் மீது வீசப்பட்டுள்ள வலை என உணர வேண்டும். நேர மேலாண்மை, உணவு, உடல்நலம், படிக்கும் நேரம், ஒழுக்கம் மற்றும் நண்பர்களை தேர்ந்தெடுப்பது போன்ற விஷயங்களில் மிக கவனமாக இருக்க வேண்டும்.நானே ராஜா... நானே மந்திரி என்று எல்லாமே நீங்கள் தான். இதனால் உங்களுக்கென ஒரு கட்டுப்பாடு வேலியை உருவாக்கி கொள்ள வேண்டும். இல்லையென்றால் இங்குள்ள மாய வலையில் சிக்கி சிதைந்து போய்விடுவீர்கள். சுய ஒழுக்கம், சுய கட்டுப்பாடு, சுய சிந்தனை மற்றும் சுயமாக முடிவெடுக்கும் ஆற்றல்களை நீங்கள் வளர்த்துக்கொண்டால் தான் வெற்றி பெற முடியும். இல்லாவிட்டால் கஷ்டப்பட்டு படித்தும் பல போட்டிகளை மீறி ஒரு தரமான உயர்கல்வியை, தரமான கல்வி நிறுவனத்தில் படிக்கும் வாய்ப்பை பெற்றாலும் முடிவு உங்களுக்கு சாதகமாக இருக்காது. ஒரு நீண்ட ஓட்டப் பந்தயத்தின் வெற்றியை முடிவு செய்வது தொடக்கமல்ல; முடிவு என்பதை நீங்கள் உணர வேண்டும்.
பரிணாம வளர்ச்சி : உயர்கல்வியில் 45 சதவீதம் மாணவர்களே படிப்பை முடித்து வெளியேறுகின்றனர். மீதி உள்ளவர் முடிக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. இதற்கு, அவர்களின் தவறான பழக்க வழக்கங்கள், கடின உழைப்பு இல்லாமை, நேரத்தை திட்டமிடாதது, பேராசிரியர்களிடம் நெருங்கி பழகி பிரச்னைகள் பற்றி ஆலோசிக்காமல் இருப்பது, போதை பழக்கம், காதல் மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக உள்ளன. உயர்கல்வி என்பது உங்கள் வாழ்வில் ஏற்படும் பரிணாம வளர்ச்சி என்பதை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் புரிந்துகொண்டு அதற்கான முழு கவனத்தையும் செலுத்தினால் வெற்றி நிச்சயம். இன்றைய சூழ்நிலையில் உயர்கல்வியை எவ்வாறு அணுக வேண்டும் என்று பாவேந்தர் பாரதிதாசனின் 'அறிவை விரிவு செய்! அகண்டமாக்கு! விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை அணைந்துகொள்! உன்னை சங்கமமாக்கு மானிட சமுத்திரம் நான் என்று கூவு!' இந்த வைர வரிகள் என்றும் உங்களை வழி நடத்தும் என்று நம்புகிறேன்.
- முனைவர் மு.கண்ணன் மதுரை 0452- 2690 635.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X