நெடுஞ்சாலைகளில் உள்ள சாலையோர உணவகங்களை, 'மோட்டல்' என, அழைத்து வருகின்றனர். இந்த மோட்டல்களில் உணவு பொருட்களின் விலை அதிகமாக இருப்பதால், 'அம்மா' உணவகம் போல், முக்கிய பஸ் வழித்தடங்களில், 'அம்மா மோட்டல்' அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. தொலைதுாரம் செல்லும் பயணிகளின் நலன் கருதி, அரசு போக்குவரத்துக் கழகங்களால், குறிப்பிட்ட வழித்தடங்களில் மோட்டல்கள் அமைக்கப்பட்டன. முறையான நிர்வாகம் மற்றும் பராமரிப்பு இல்லாததால், பெரும்பாலான மோட்டல்கள் மூடப்பட்டன. இதையடுத்து, தொலைதுார பஸ்கள் செல்லும் வழித்தடங்களில், தனியார் பலர் மோட்டல்களை திறந்தனர். பஸ் ஒன்றிற்கு, 40 ரூபாயை மோட்டல்கள் தரும் வகையில்,போக்குவரத்து துறை ஒப்பந்தம் செய்தது. ஒவ்வொரு பஸ்சையும், எந்த மோட்டலில் நிறுத்த வேண்டும் என்பது, பஸ் புறப்படும் போதே, ரசீதில், 'சீல்' போட்டு அனுப்பப் படுகிறது.
ஆனால், 'இந்த மோட்டல்களில் விலை மிக அதிகம்; உணவும் தரமாக இல்லை' என, பயணிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கு தீர்வாக, தமிழக அரசு சார்பில், 'அம்மா மோட்டல்' அமைவதற்கான வாய்ப்புகள் உருவாகி உள்ளன.
இது குறித்து, போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது: அரசு சார்பில், சென்னையில், ஜூன், 29ம் தேதி நடந்த கலந்தாய்வு கூட்டத்தில், தமிழகத்தின் பல இடங்களை
சேர்ந்த நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தினர் பங்கேற்றனர். முக்கிய பஸ் வழித்தடங்களில், 'அம்மா மோட்டல்' அமைக்க வேண்டும் என்பதே அவர்களின் முக்கிய கோரிக்கையாக இருந்தது. இந்த கோரிக்கையை அரசு விரைவில் பரிசீலிக்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.