அன்பை வளர்ப்போம்..! ஆணவத்தை தவிர்ப்போம்.!!| Dinamalar

அன்பை வளர்ப்போம்..! ஆணவத்தை தவிர்ப்போம்.!!

Added : ஜூலை 07, 2016 | கருத்துகள் (4)
அன்பை வளர்ப்போம்..! ஆணவத்தை தவிர்ப்போம்.!!

வாழ்க்கையில் எந்த ஒரு மனிதருக்கும் ஆணவம் தலை துாக்கும்போது, அவர் அழிவை நோக்கி பயணிக்க ஆரம்பிக்கிறார். குடும்ப வாழ்க்கை, நண்பர்கள், உறவினர்கள் மற்றும் தொழில் சார்ந்த இடங்கள் எங்கெல்லாம் ஆணவம் தலை துாக்குகிறதோ, அங்கெல்லாம் உறவில் விரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக மகிழ்ச்சி தொலைகிறது. பகை வளர ஆரம்பிக்கிறது. ஆணவத்தின் காரணமாக பழிவாங்கும் எண்ணம் ஏற்படுகிறது. இதனால் உறவில் விரிசல் ஏற்படுகிறது. ஆக மொத்தத்தில் மகிழ்ச்சி தொலைகிறது; வாழ்க்கை அழிகிறது.நான் என்ற ஆணவமும், எனது என்ற ஆசையும் இருக்கும் வரையில் மனிதனால் கடவுளிடம் நெருங்க முடியாது. கண்ணை இருள் மறைப்பது போல் அறிவை மறப்பது ஆணவமாகும். நான் என்ற எண்ணம் ஒருவரிடம் உண்டாகும்போது, அவரிடம் ஆணவம் இருக்கும். ஆணவம் வளர வளர மகிழ்ச்சி நம்மை விட்டு விலகிவிடும் என்பதை நாம் அறிவது அவசியம். ஆணவத்தை ஒழிக்க வேண்டும் என்றால் நாம் பொறுமை மற்றும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்து கொள்ள வேண்டும். அதனால் தான் ''வெறுப்பவர்கள் யாராக இருந்தாலும் அன்பு செலுத்துபவர்கள் நாமாக இருப்போம்'' என்றார் அன்னை தெரசா.பாரத போரின் முடிவில் தேரோட்டியாக இருக்கும் கிருஷ்ணர் தேரில் அமர்ந்தபடி, ''அர்ஜூனா போர் தான் முடிந்து விட்டதே! இன்னும் ஏன் நின்று கொண்டிருக்கிறாய். தேரை விட்டு இறங்கு,'' என்றார். அதற்கு அர்ஜூனர், ''கிருஷ்ணா நீ என்னை போரில் வெற்றி பெறச்செய்தாய். வெற்றி பெற்றவரை தேரோட்டி தான் கையை பிடித்து தேரிலிருந்து இறக்கி விட வேண்டும் என்ற சம்பிரதாயத்தை மறந்து விட்டாயா! அப்படி செய்வது எனக்கு பெருமை அல்லவா! நீயோ என்னை கீழே இறங்கு என்று ஆணையிடுகிறாய். இது என்ன நியாயம்?,'' என்றார். அர்ஜூனரின் வார்த்தைகளை, கிருஷ்ணர் காதில் வாங்கிக்கொண்டதாக தெரியவில்லை. கிருஷ்ணர் கட்டளை ''தேரை விட்டு இறங்கு,'' என்றார் கிருஷ்ணர் கண்டிப்புடன். வருத்தத்துடன் அர்ஜூனன் கீழே இறங்கினார். அப்போது கிருஷ்ணர், அர்ஜூனரிடம் ''தேரின் பக்கத்தில் நிற்காதே. சற்று தள்ளி நில்,'' என்றார் அதட்டலுடன். அர்ஜூனரால், கிருஷ்ணரின் அதட்டலை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஒன்றும் புரியாதவராய் தேரை விட்டு தள்ளி நின்றார் அர்ஜூனர். வாடிய முகத்துடன் நின்ற அர்ஜூனரை கண்டு புன்னகைத்த கிருஷ்ணர் தேரிலிருந்து குதித்து ஓடிச்சென்று அர்ஜூனனை இறுக கட்டி அணைத்து கொண்டார். அந்த கனமே தேர் தீப்பற்றி எரிந்தது. ''பார்த்தாயா தேர் எரிகிறது. அதனால் தான் உன்னை தேரை விட்டு இறங்கச் சொன்னேன்,'' என்றார் புன்முறுவலுடன். ஆணவம் அழிந்தது அர்ஜூனருக்கு, தேர் ஏன் எரிகிறது என்று புரியாத காரணத்தால் கிருஷ்ணரிடம் கேட்கிறார். கிருஷ்ணர், ''அர்ஜூனா போர் புரியும்போது கவுரவர்கள் உன் மீது பல அஸ்திரங்களை ஏவினர். அவற்றின் சக்தி அளவிட முடியாதது. தேரில் நானும், தேரின் கொடியில் அனுமனும் இவ்வளவு நேரம் அவைகளை தடுத்துக்கொண்டு இருந்தோம். அதனால் அவை வலிமையற்றுக்கிடந்தன. தேரைவிட்டு நான் குதித்ததும் தேர்க்கொடியிலிருந்து அனுமனும் புறப்பட்டு விட்டான். கவுரவர்கள் ஏவிய அஸ்திரங்களின் சக்தி தலை துாக்கியது. தேர் பற்றி எரிய தொடங்கியது. உண்மை இப்படியிருக்க நீயோ போரில் வெற்றி பெற்ற உன்னை கவுரவிக்கவில்லை என்று வருத்தப்படுகிறாய். வெற்றி பெற்றதும் நான் என்னும் ஆணவம் உனக்கு வந்து விட்டது. ஆணவம் அழிவுக்கு வழி வகுக்கும் என்பதை மறந்து விடாதே,'' என்று அறிவுரை கூறினார். தேர் பற்றி எரிந்தது போல் அர்ஜூனரிடம் இருந்து ஆணவமும் பற்றி எரிந்து சாம்பலாயிற்று. அதனால் தான் ''வெற்றி வந்தால் பணிவு அவசியம்,தோல்வி வந்தால் பொறுமை அவசியம்,எதிர்ப்பு வந்தால் துணிவு அவசியம்,எது வந்தாலும் நம்பிக்கை அவசியம்,'' என சான்றோர் கூறினர்.
மன்னரின் சந்தேகம் : தஞ்சையை ஆண்ட மன்னர் ராஜராஜசோழனுக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. உலகில் அனைவருக்கும் மகிழ்ச்சியை தரக்கூடிய பொருள் எது என்பதே அவர் கேள்வி. ''மன்னரின் கேள்விக்கான சரியான விளக்கத்தை அறிஞர்கள் மட்டுமல்லாமல் மக்களும் அளிக்கலாம். அனைவரையும் மகிழ்விக்கும் பொருளை அரண்மனையில் இருக்கும் கொலுமண்டபத்தில் வைத்து விடுங்கள். யாருடைய பொருள் அரசருடைய சந்தேகத்திற்கு சரியான விடையை தருகிறதோ, அவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு,'' என அறிவிக்கப்பட்டது. மக்களும் யோசித்து அவர்களுக்கு தெரிந்த மகிழ்ச்சியை தரும் பொருட்களை அரண்மனை கொலு மண்டபத்தில் வைத்து விட்டு ஆயிரம் பொற்காசுகள் பரிசுக்காக காத்திருந்தார்கள். மறுநாள், மன்னர் ராஜராஜ சோழர் கொலு மண்டபத்திற்கு வந்து பார்த்தார். மக்கள் வைத்த பொருட்கள் மண்டபத்தில் நிரம்பி இருந்தன. ஒவ்வொரு பொருட்களாக அரசர் பார்த்துக்கொண்டே வந்தார். முதலில் சிறிய அளவு பொன் இருந்தது. அதன் கீழ் ''செல்வமே மகிழ்ச்சி தரக்கூடியது,'' என எழுதப்பட்டிருந்தது.ஆனால் ''செல்வந்தர்களுக்கும், நோயாளிகளுக்கும் செல்வம் எப்படி மகிழ்ச்சியை தரும்? அதனால் இது சரியான விளக்கம் அல்ல,'' என அதை நிராகரித்தார் மன்னர். அடுத்ததாக, இசை கருவி இருந்தது. அதன் கீழே ''இசையே மகிழ்ச்சி தரக்கூடியது,'' என எழுதப்பட்டிருந்தது. ஆனால் ''காது கேட்காதவர்களுக்கு இந்த இசை எப்படி மகிழ்ச்சியை தர முடியும்? இதையும் ஏற்றுக்கொள்ள முடியாது,'' என நிராகரித்தார். அடுத்து அழகான மலர்கள் இருந்தன. ''இவை கண் தெரியாதவர்களுக்கு எப்படி மகிழ்ச்சியை தர முடியும்? அதனால் இதையும் ஏற்றுக்கொள்ள முடியாது,'' என்றார். அடுத்து, இனிப்பான பலகாரங்கள் இருந்தன. ''நோயாளிகளுக்கு எப்படி இனிப்பு மகிழ்ச்சியை தரும்?,'' என்று கூறி அதனையும் மன்னர் ராஜராஜசோழர் நிராகரித்தார்.
அன்பே சிவம் : அடுத்ததாக ஒரு பெரிய சிவலிங்கத்தின் அருகில் வந்தார். அந்த சிவலிங்கத்தின் கீழே ஒரு சிற்பம். அதில் ஒரு தாய், பசியில் இருக்கும் ஒரு சிறுவனுக்கு உணவு தருவது போல், அந்த சிற்பம் வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்த சிற்பத்தின் கீழே 'அன்பே சிவம்' என்று எழுத்தப்பட்டிருந்தது. ''இந்த சிலையை வைத்த சிற்பியை அழைத்து வாருங்கள்,'' மன்னர் கட்டளையிட்டார். வறுமை தின்ற உடலுடன் ஒரு ஏழை சிற்பி, மன்னரின் முன் அழைத்து வரப்பட்டார். ''நீங்கள் தான் இந்த சிலையை இங்கு வைத்தீரா? இதன் பொருள் என்ன என்பதை விளக்கமாக சொல்லுங்கள்,'' என்றார் மன்னர் அந்த சிற்பியிடம்.''அரசே நான் ஒரு சிற்பி. இந்த சிலையை வடிவமைத்தது அடியேன் தான். சிவலிங்கத்தின் கீழே ஒரு பெண், அன்போடு ஒரு சிறுவனுக்கு உணவு தருகிறாள். இந்த உலகில் அன்பை மட்டும் தான், கண் தெரியாதவர்களும், காது கேட்காதவர்களும், வாய் பேச முடியாதவர்களும் உணர முடியும். அதேபோல் உடல் நலம் இல்லாதவர்களும் அன்பை தான் எதிர்பார்க்கிறார்கள். அன்பு மட்டுமே உலகில் சிறந்தது. அன்பிருந்தால் எதிரியையும் நண்பனாக்கும், அன்பு இல்லையெனில் நண்பனையும் எதிரியாக்கும். உலகில் சிறந்ததும், அனைத்து ஜீவராசிகளுக்கும் மகிழ்ச்சியை தரக்கூடியது அன்புதான்,'' என்றார்.இதை கேட்ட அரசர் மிகவும் மகிழ்ந்தார். ''உலகத்திலேயே அனைவருக்கும் மகிழ்ச்சி தரக்கூடியது எது என்ற என் சந்தேகத்திற்கு அற்புதமான விளக்கம். நீங்கள் ஒரு சிற்பி என்பதால் நான் கட்டும் தஞ்சை கோயிலுக்கு நீங்களே சிற்ப வேலையை செய்யுங்கள்,'' என்று கூறி ஆயிரம் பொற்காசுகளை பரிசாக சிற்பிக்கு தந்து, ஏழை சிற்பியின் வாழ்க்கை தரத்தை உயர்த்தினார் மன்னர். அன்புக்கு கட்டுப்படாதவர்கள் இந்த உலகில் யார் இருக்கிறார்கள். அன்பு தான் அனைத்து ஜீவராசிகளுக்கும் மகிழ்ச்சியை தரக்கூடியது. எனவே அன்பை நாம் வளர்ப்போம். ஆணவத்தை நாம் தவிர்ப்போம். வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வோம்.
- என். ரவிச்சந்திரன்வட்டார போக்குவரத்து அலுவலர், மதுரை.

99424 61122

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X