திருமுறைகள் காட்டும் சீர்திருத்தம் | Dinamalar

திருமுறைகள் காட்டும் சீர்திருத்தம்

Added : ஜூலை 07, 2016 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
திருமுறைகள்  காட்டும் சீர்திருத்தம்

எவ்வுயிரையும் தம் உயிராகக் கருதும் அருள் உணர்வு எல்லாச் சமயத்தினரிடமும் உண்டு. குறிப்பாக தேவாரத் திருமுறைகளை பாடிய அருளாளர்கள் சிவபரம்பொருளைச் சிந்தனை செய்தும் சமுதாய நிலையில் பல மாற்றங்களை வலியுறுத்திப் பாடியுள்ளனர்.திருமூலர்,
'ஒன்றே குலம் ஒருவனே தேவனும்நன்றே நினைமின்”என்று மனித குலத்தின் ஒருமைப்பாட்டினையும் ஓர் இறை கோட்பாட்டினையும் உணர்த்தியுள்ளார். அப்பர் பெருமான் ஜாதி பேதங்களை வன்மையாகச் சாடியவர். திருக்கன்றாப்பூர் பதிகத்தில்,
'சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்பாத்திரம் சிவம் என்று பணிதிரேல்மாத்திரைக்குள் அருளுமாற் பேறர'என்று அறநிலையை பாடல் மூலம் வலியுறுத்த, மாணிக்கவாசகரோ..'சாதி குலம் பிறப்பென்னும் சுழிப்பட்டுத் தடுமாறும்ஆதமிலி நாயேனை அல்லலறுத் தாட் கொண்டு'என்று கசிந்து உருகுகிறார்.
சோழப் பேரரசில் தலைமை அமைச்சராய் பணியாற்றிய சேக்கிழார், பக்தி அடிப்படையில் பாகுபாடற்ற சமுதாய ஒருமைப்பாட்டினைத் காண ஆசைப்பட்டார்.
'நமிநந்தி அடிகள் புராணத்தில்,தேவர் பெருமான் எழுச்சி திருமணலிக் கொருநாள் எழுந்தருளயாவர் என்னாதுடன் சேவித்துஎல்லாக்குலத்தில் உள்ளோரும்மேல அன்பர் தாமும் உடன்சேவித் தணைந்து விண்ணவர்தம்'என்று சேக்கிழார் பாடியிருத்தல் எண்ணத்தகுந்தது. கூட்டு வழிபாடு சமுதாய ஒருமைப்பாட்டிற்குப் பெரிதும் உதவியது.போலி வழிபாடு பொருள் புரிந்து கொள்ளாமல் செய்யப்படும் சடங்குகள், போலி வழிபாடு, நடிப்பு, பக்தி முதலியவற்றை திருமுறை ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. புனித ஆறுகளிலும் கடல் தீர்த்தங்களிலும் முழுகிவிட்டால் பாவம் கழுவப்பெறும் என்ற நம்பிக்கை அப்பர் காலத்தில் இருந்தது. சிவஅன்பு இன்றி நீராடுவதால் ஒரு பயனும் இல்லை. பாபநாசத் திருக்குறுந் தொகையில்,''கங்கை ஆடிலென் காவிரி ஆடிலென்கொங்குதண் குமரித்துறை ஆடிலென்ஓங்கு மாகடல் ஓதநீர் ஆடிலென்எங்கும் ஈசன் எனாதவர்க் கில்லையே''என வரும் பாடல் இதனை சுட்டிக்காட்டுகிறது. இத்தகைய மூடபழக்கம் யூதர்களிடமும் இருந்தது. ஜோர்டான் நதியில் குளிந்தெழுந்தால் பாபம் போய்விடும் என்று நம்பிய யூதர்களைத் திருத்தும் பாங்கில்,''யூதர்களே! பரலோகத்தில் இருக்கிற பரமபிதாவின் கருணை உங்களுக்குக் கிட்ட வேண்டுமென்றால் ஜோர்டான் நதியில் குளித்தெழுந்தால் போதாது, நீங்கள் செய்த பாவங்களை எண்ணி நைந்துருகிக் கண்ணீரை ஆறாகப் பெருக்கி அதில் குளித்தெழுந்தால் பாவமன்னிப்பு கிடைக்கும்''என்று ஏசுபிரான் கூறிய வாசகம் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.பக்தி இலக்கியம் திருவாசகம் இனியதமிழ் பக்தி இலக்கியமாகும். மாணிக்கவாசகர் அருளிச் செய்த இத்தொகுதியில் 51 தலைப்புகளில் பல்வேறு அறக்கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. 'தேன்', 'நாய்' இரண்டு சொற்களும் அதிக பாடல்களில் இடம்பெறுகிறது. மன்னர் புகழ் பாடும் மரபை மாற்றி, விண்ணாளும் தேவனை பாடுகிற மரபை தோற்றிவித்தவர் மாணிக்கவாசகர். சிலப்பதிகாரத்தில் ஊசற்பாட்டு முதலானவை மன்னர் புகழ் பாடுவனவாக உள்ளன. திருவாசகத்திலே தான் அம்மானை, பொன்னுாசல் போன்ற பாடல்கள் இறைவன் புகழ் பாடுவனவாக உள்ளன. மகளிர் விளையாட்டுப்பாடல்களை மாணிக்கவாசகர் பல சூழல்களில் பாடியுள்ளார்.அம்மானைப் பாடலில், மதுரையில் வெள்ளம் வரும் போது கரையடைக்கும் பணி செய்யாமல் இருந்த இறைவன் பிரம்படி பட்ட செய்தி, வேலை செய்யாமல் கூலி பெற முடியாது என்ற சிந்தனையைக் காட்டுகிறது. மேலும், மதுரை நகரில் அந்நாளில் தமிழும் இசையும் பயின்று வந்த செய்தி திருக்கோவையாரில் காட்டப்பட்டுள்ளது.'தண் பாண்டிநாடு' என மதுரையை புகழ்தலும், சிறுபாணாற்றுப்படையில் 'தமிழ்நிலை பெற்று தாங்கு மரபின், மகிழ்நனை மறுகின் மதுரை' என்று தமிழ்த் தொடர்பினால் போற்றப்படுதலையும் காணலாம்.திருவாசகத்தில் அறிவியல் நமது பிறப்பு தற்பொழுது எந்த எண்ணிக்கை உடையது என்பது எவருக்கும் தெரியாது. ஏனெனில், பல பிறப்புக்களை எடுத்து மனிதப் பிறவி வாய்த்ததை மாணிக்கவாசகர்'புல்லாகி பூடாகி புழுவாய் மரமாகிப்பல்விருகமாய் பறவையாய்ப் பாம்பாகிக்கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்வல்அசுரர் ஆகி முனிவராய் தேவராய்செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்' என்கிறார். நமது உயிர் தாயின் வயிற்றில் எப்படி பயணித்து, உடலாக வருகிறது என்ற நிலையை போற்றித் திருஅகவலில்'மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்துஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும்ஒருமதித் தான்றியில் இருமையில் பிழைத்தும்இருமதி விளைவில் ஒருமையில் பிழைத்தும்மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்ஈர்இரு திங்களில் பேர் இருள் பிழைத்தும்அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்ஆறு திங்களில் ஊறு அலர் பிழைத்தும்ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்எட்டு திங்களில் கட்டமும் பிழைத்தும்ஒன்பதில் வரு தரு துன்பமும் பிழைத்தும்தக்க தசமதி தாயொடு தான்படும்துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்...' என்கிறார் மாணிக்கவாசகர்.நம் பிறப்பு நிகழ்வதை அறிவியலார் போல் சொல்லும் மாணிக்கவாசகர் பிறந்தது மதுரை திருவாதவூரில். ஜூலை 7 ஆனி மகம் அவர் முக்தி பெற்ற நாளாகும்.
- முனைவர் தி.சுரேஷ்சிவன்இசைத்தமிழ் அறிஞர்

மதுரை-. 94439 30540

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rangiem N Annamalai - bangalore,இந்தியா
08-ஜூலை-201620:29:10 IST Report Abuse
Rangiem N Annamalai பதிவிற்கு நன்றி அய்யா
Rate this:
Share this comment
Cancel
hariharan - Bangalore,இந்தியா
08-ஜூலை-201613:08:27 IST Report Abuse
hariharan இது மிக பயனுள்ள பதிவு - இது போல் நிறைய தரவும் என வேண்டுகிறேன்.
Rate this:
Share this comment
Cancel
A. Sivakumar. - Chennai,இந்தியா
08-ஜூலை-201612:32:34 IST Report Abuse
A. Sivakumar. பயனுள்ள கட்டுரை தந்திருக்கும் ஐயாவுக்கு நன்றி. உனது பக்கத்து வீட்டுக்காரன் வேறு மதத்தைச் சேர்ந்தவன் என்பதற்காக அவனை நீ துன்புறுத்தினால், நீ என் மதத்தைச் சார்ந்தவனாக இருந்தாலும், உன் இறுதி நாளில்,அவன் சார்பாக உனது குற்றங்களுக்கான தண்டனைக்காக வாதாடுவேன் என்று நபிகள் நாயகம் சொல்கிறார்.எல்லா மதங்களும் நல்ல விஷயங்கள் பலவற்றைச் சொல்கின்றன. இவற்றைப் பின்பற்றும் விதங்களினால்தான் பிரச்சினைகள் உருவாகின்றன. பிரைமேட்டுக்களின் வழிவந்து, உலகின் வெவ்வேறு பகுதிகளில் பல்வேறு மனித இனங்களாகப் பரிணமித்து, பல்வேறு கால கட்டங்களில் இனக்குழுக்களாக காட்டு வாழ்க்கை வாழ்ந்து, பிறகு விவசாயம், வணிகம், ஜனநாயகம், அரசாங்க அமைப்பு என்று கூட்டு சமூக அமைப்புக்களை வழிவழியாக அடைந்து , தொழில் புரட்சி, தொழில்நுட்பப் புரட்சிகளைப் பார்த்து வரும் மனித குலத்தின் நாகரிக வளர்ச்சியில் மதங்களுக்குப் பெரும் பங்கு உண்டு. அவற்றுள் இருக்கும் நல்ல விஷயங்களுக்கு முக்கியத்துவம் தரும் மனிதர்கள் இன்று வெகுவாகக் குறைந்து, தேவையற்ற அல்லது இந்தக் காலத்துக்குப் பொருந்தாத விஷயங்களை இன்னும் பிடித்துக் கொண்டு தொங்கும் மனிதர்கள்தாம் அதிகம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X