பள்ளியில் பாலியல் கல்வி அவசியம்: டாக்டர் நாராயணரெட்டி ஆர்வம்| Dinamalar

பள்ளியில் பாலியல் கல்வி அவசியம்: டாக்டர் நாராயணரெட்டி ஆர்வம்

Added : ஜூலை 10, 2016 | கருத்துகள் (5)
பள்ளியில் பாலியல் கல்வி அவசியம்: டாக்டர் நாராயணரெட்டி ஆர்வம்

பாலிய குறித்து பேச துவங்கினாலே பிரச்னைகள் எழுந்த காலத்தில் பாலியல் பிரச்னைகளுக்கு தீர்வு காண தனி கிளினிக்கை துவக்கியவர், பாலியல் சிகிச்சை நிபுணர் டாக்டர் நாராயணரெட்டி. 1982ல் அவர் கிளினிக்கை துவக்கிய காலம் தென்னிந்தியாவில் எந்த ஒரு டாக்டரும் தொட தயங்கிய துறையாக இருந்தது பாலியல் துறை. இன்று காணப்படும் பாலியல் விழிப்புணர்வுக்கு காரணகர்த்தா அவர்.

சமீபத்தில் மதுரை வந்த டாக்டர் நாராயணரெட்டி வாசகர்களுக்காக மனம் திறந்ததாவது...


* பாலியல் கல்வி தேவையா?


பாலியல் நலக் கல்வி என்பது ஒரு மருத்துவ காப்பீட்டு பாலிசி போன்றது. ரோட்டில் செல்லும் போது விபத்தில் காயமடைய போகிறோம் என்பதற்காக காப்பீடு பாலிசி எடுப்பதில்லை. ஒரு வேளை அதுபோன்ற அசம்பாவிதங்கள் நடந்தால், பாலிசி உதவியாக இருக்கும் என்பதற்காக எடுக்கிறோம். அதுபோல, குழந்தைகள் பாலியல் கல்வியை கற்றால் மட்டுமே அதன் நன்மை தீமைகளை அறிந்து கொள்வர். பாலியல் வியாதிகள் குறித்தும் முழு புரிதல் ஏற்படும். தவறான வழியில் பயணிக்க வாய்ப்பு கிடைக்கும் போது அதை தவிர்ப்பர். பள்ளிகளில் பாலியல் கல்வி சமூகத்திற்கு அவசியம்.


* குடும்ப உறவில் நிற வேறுபாடு குறித்து?மக்கள், வெளிநாட்டு நிறுவனங்களின் 'சிகப்பழகு' விளம்பர தந்திரத்திற்கு அடிமையாகி விட்டனர். ஒரு மனிதனின் இயற்கையான நிறத்தை ஒரு வாரத்தில் மாற்றும் 'கிரீம்' உலகில் கிடையாது. ஆனால், இந்த 'கார்ப்பரேட்' நிறுவனங்கள் தங்கள் பொருட்கள் குறித்த விளம்பரங்களை திரும்ப திரும்ப மக்களிடம் திணித்து, அவர்களை உளவியல் ரீதியாக மாற்றி விட்டன. சிவப்பாக இருப்பது தான் அழகு என்ற தவறான கருத்தை விதைத்து விட்டன. தன் இயற்கை நிறம் குறித்து தாழ்வு மனப்பான்மை கொண்டிருக்கும் மனிதர்கள் வாழ்க்கையில் தோல்வி அடைகிறார்கள்.

* பாலியல் தொழிலை அங்கீகரிக்கலாமா?

அரசு அங்கீகரிக்க வேண்டும்என்பது என் கருத்து. உறவிற்கு முன் முறையான மருத்துவ பரிசோதனை செய்ய கூடிய கட்டமைப்பையும் உருவாக்க வேண்டும். இதனால், எய்ட்ஸ் போன்ற கொடிய நோய்களை தவிர்க்கலாம். தன் குடும்பங்களை விட்டு பணி நிமித்தம் வெவ்வேறு இடங்களுக்கு இடம் பெயரும் மனிதர்கள் சிவப்பு விளக்கு பகுதியை நாடும் பட்சத்தில், முறையற்ற உறவுகள் மற்றும் அதன் மூலம் ஏற்படும் சமூக சீரழிவுகள் இதனால் தவிர்க்கப்படும்.


* அதிகரித்து வரும் விவாகரத்து குறித்து?முன்பு கணவர் மட்டும் வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றும் நிலையிருந்தது. பொருளாதார ரீதியில் கணவரை சார்ந்திருந்த மனைவி விவாகரத்தை பற்றி நினைக்கவில்லை. ஆனால், கணவனும் மனைவியும் வேலைக்கு செல்ல துவங்கி விட்ட பின் மனைவி சுயமரியாதையை எதிர்பார்க்கிறாள். அது கிடைக்காத பட்சத்தில் கணவரை பிரிய தயாராகிறாள். தாம்பத்திய உறவுகளில் ஏற்படும் விரிசல் கூட சில சமயங்களில் விவாகரத்திற்கு காரணமாக அமைகிறது. கணவன் மனைவி தினமும் சில நிமிடங்கள் குடும்ப பிரச்னைகளை விவாதித்தாலே, விவாகரத்துகளை தவிர்த்து விடலாம்.

* நவீன உணவு முறைகளால் நன்மையா?

தற்போதைய உணவு முறைகள் மட்டுமே, எல்லா நோய்களுக்கும் காரணம் என கூற முடியாது. மருத்துவ விழிப்புணர்வால் அனைத்து நோய்களும் வெளியே தெரிய வருகின்றன என்பது தான் உண்மை. அதனால் அதிக நோயாளிகள் உருவாவது போன்ற தோற்றம் உருவாகியுள்ளது. உயர்தர வாழ்க்கை என்ற பெயரில் துரித உணவுகள், போதை பழக்கங்கள் போன்றவைகளுக்கு அடிமையானவர்கள் பல உடல் நல பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X