மாத்தி மாத்தி கூட்டம்... நடுராத்திரி வரை ஆட்டம்!| Dinamalar

மாத்தி மாத்தி கூட்டம்... நடுராத்திரி வரை ஆட்டம்!

Added : ஜூலை 12, 2016
Share
மித்ராவுக்கு அன்று வங்கித் தேர்வு. ஈச்சனாரி அருகில் உள்ள தனியார் கல்லூரியில் தேர்வு மையம். கல்லூரி வரை சித்ரா ஸ்கூட்டரில், 'டிராப்' செய்வதாக ஏற்பாடு.''சீக்கிரம் வண்டிய எடுக்கா...இன்னும் ஒரு மணி நேரத்துல காலேஜ்ல இருந்தாகணும்,'' என, முடுக்கினாள் மித்ரா.''இதோ வந்துட்டேன்...,'' என்றபடி ஸ்கூட்டரை முறுக்கிய சித்ரா, ''ம்ம்... ஏறு. நீயும் காலேஜ் காலேஜா ஏறி எக்சாம்
மாத்தி மாத்தி கூட்டம்... நடுராத்திரி வரை ஆட்டம்!

மித்ராவுக்கு அன்று வங்கித் தேர்வு. ஈச்சனாரி அருகில் உள்ள தனியார் கல்லூரியில் தேர்வு மையம். கல்லூரி வரை சித்ரா ஸ்கூட்டரில், 'டிராப்' செய்வதாக ஏற்பாடு.
''சீக்கிரம் வண்டிய எடுக்கா...இன்னும் ஒரு மணி நேரத்துல காலேஜ்ல இருந்தாகணும்,'' என, முடுக்கினாள் மித்ரா.
''இதோ வந்துட்டேன்...,'' என்றபடி ஸ்கூட்டரை முறுக்கிய சித்ரா, ''ம்ம்... ஏறு. நீயும் காலேஜ் காலேஜா ஏறி எக்சாம் எழுதறே... ஒண்ணும் உருப்படியா நடந்த மாதிரி தெரியல. காலேஜ் பக்கத்துல கஞ்சா விக்கிறதாவது தெரியுமா?'' என்று கேட்டாள்.
''அட...இதெல்லாம் வேற நடக்குதா, அது எங்கே?'' என்று கேட்டாள் மித்ரா.
''வேற எங்கே... எல்லாம் பீளமேடுலதான். அங்க கஞ்சா பொட்டலம் கட்டி வித்தாங்கன்னு, ரீசன்டா பிரகாஷ், மகாலட்சுமின்னு ரெண்டு பேர போலீஸ் அரெஸ்ட் பண்ணுனாங்கல்ல... இவங்க, காலேஜ், 'டியூசன்' சென்டர் பக்கத்துலயே கஞ்சா பொட்டலம் வித்துட்டு வந்துருக்காங்க. மெடிக்கல் ஸ்டூடண்ட்ஸ்தான் மெயின் கஸ்டமர்சாம்...,'' என்றாள் சித்ரா.
''என்னதான் நடக்குது இங்கே...?'' பதறினாள் மித்ரா.
''மேல கேளு...காலேஜ் ஸ்டூடண்ட்சுக்கு கஞ்சா சேல்ஸ் செஞ்சது மட்டுமில்லாம, அவங்கள வச்சே மத்தவங்களுக்கும் 'சேல்ஸ்' செஞ்சிருக்காங்க. ஒரு மணி நேரத்துக்கு, 200 ரூபான்னு இதுக்கு கமிஷனாம். இதுல என்ன கொடுமைன்னா, இவங்க கஞ்சா பொட்டலம் கட்டின இடமே, போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து சில அடி தூரத்துலதான் இருக்காம்...,'' என்று முடித்தாள் சித்ரா.
''போலீசுக்கு கரெக்டா, 'விஷயம்' போயிருக்கும்,'' என்று மித்ரா சொல்லிக் கொண்டிருக்கும்போதே, குறிச்சி குளத்தருகில், ஒரு நாய் திடீரென 'கிராஸ்' செய்தது.
ஸ்கூட்டரை சடாரென வெட்டி திருப்பினாள் சித்ரா.
''ஏய்...பார்த்து, பார்த்து,'' பதட்டமானாள் மித்ரா.
அதற்கு சித்ரா, ''இத விடு... நம்ம போலீஸ் மோப்ப நாய்ங்க பண்ணுன, காமெடிய கேட்டியா மித்து... சின்னியம்பாளையம் ஏரியால, போனவாரம் ஒரு ரெட்டை கொலை நடந்துச்சுல்ல, அப்ப குடோன் பக்கத்துல, 'டெட்பாடி' கிடந்த இடத்துக்கு மோப்ப நாய வரவெச்சாங்க. அது, வழக்கம்போல மோப்பம் பிடிச்சுட்டு, கொஞ்ச தூரம் ஓடி, நின்னுருச்சாம். அப்புறம் 'புட்பிரின்ட்ஸ்' கலெக்ட் செஞ்சுட்டு போலீஸ் கிளம்பிருச்சு,''
''கொஞ்ச நேரம் கழிச்சு பார்த்தா, டெட்பாடி கிடந்த இடத்துக்கு பக்கத்துலயே, இன்னொரு 'பாடி'யும் கிடந்துருக்கு. ரெண்டாவது பாடிய, மோப்ப நாயால கண்டுபிடிக்க முடியலை. மோப்ப நாய்க்கு போலீஸ்ல குடுக்கற, 'டிரெய்னிங்க', அந்த ஏரியா ஜனங்க சொல்லி, சொல்லி சிரிச்சிருக்காங்க,'' என்று சிரித்தாள் சித்ரா.
''எல்லாமே ஒரு கணக்குக்கு மட்டும்தான்னு ஆகிப்போச்சுக்கா... இப்படித்தான் மலையடிவார முருகன் கோவில்லயும், அன்னதானத்துல தப்புக்கணக்கு போட்டு, காசு பார்க்கிறாராம், இந்த திட்டத்துக்குன்னே அப்பாயின்ட் செஞ்சிருக்கற ஒரு ஸ்டாப்,'' என்றாள் மித்ரா.
''ஆண்டவன் சன்னிதியிலயேவா...,'' லேசாக இடதுபக்கமாக தலையை திருப்பி ஆச்சரியம் காட்டினாள் சித்ரா.
''ஆமாக்கா... இந்தாளுதான் கொள்முதல், ஸ்டாக், வினியோகம், மண்டப பராமரிப்பெல்லாம் பார்த்துக்கறாராம். கல்யாண நாள், பிறந்தநாள் மாதிரி விசேஷங்களுக்கு, 'டிவோட்டீஸ்' தர்ற அன்னதானத்த, கோவில் கணக்குல குடுத்ததா கணக்கு காட்டி, பணத்தை சுருட்டிர்றாராம்,'' என்று அடுக்கினாள் மித்ரா.
''அந்த ஆண்டவன்கிட்டயே, வேலைய காட்டுறார்ன்னு சொல்லு,'' என்று 'கமென்ட்' அடித்தாள் சித்ரா.
அதற்கு மித்ரா, ''அது மட்டுமில்லக்கா...அன்னதானத்துக்கு மத்த கோவில்கள்ல ஒரு ஆளுக்கு, 15 ரூபான்னா, இந்த கோவில்ல, 20 லயிருந்து, 22 ரூபா வரை கணக்கு எழுதுறாங்களாம். இந்த கம்ப்ளையின்ட், அறநிலையத்துறை கமிஷனர் வரை போய், 'ஆடிட் ரிப்போர்ட்' கேட்டு, ஆக்ஷன் எடுக்க உத்தரவு போட்டுருக்காராம்,'' என்றாள்.
''ஆக்ஷன்னு சொன்னவுடனேதான் ஞாபகம் வருது மித்து... கலெக்டர மாத்துன தடாலடி ஆக்ஷனுக்குப் பெறகு, பத்து தாசில்தார்களயும் மாத்துனாங்கல்ல, அதுல ரெண்டு லேடீ தாசில்தாருங்க, உடம்பு சரியில்லன்னு, டிரான்ஸ்பர் உத்தரவ மாத்த சொல்லி முரண்டு பிடிக்கறாங்களாம்,'' என்றாள் சித்ரா.
அப்போது அங்கிருந்த ஒரு பெட்டிக்கடையை பார்த்ததும் மித்ரா, ''அக்கா, வண்டிய கொஞ்சம் 'ஸ்லோ' பண்ணு...பென்சில் வாங்கிக்கிறேன்,'' என்று இறங்கினாள்.
பென்சில் வாங்கி வந்ததும் சித்ரா, ''ரத்தினபுரில இதே மாதிரி ஒரு கடைல, ரெண்டு நாள் முன்னாடி திருட்டு நடந்துச்சு. ரெண்டாவது தடவை இந்த திருட்டு நடந்தும், போலீஸ்ல கடை ஓனர் கம்ப்ளைய்ன்ட் குடுக்கலையாம்,'' என்றாள்.
''ஏன் புகார் குடுக்கலை?'' என்று கேட்டாள் மித்ரா.
''அந்த ஏரியா 'இன்ஸ்' மேல இருக்கற பயம். விசாரணைங்கற பேர்ல மிரட்டுவாருன்னும், பறிகொடுத்த பணத்தைப்போல, இன்னொரு பங்கு செலவாகும்ங்கறதும்தான் காரணமாம். முரட்டுத்தனமா நடந்துக்குவாரு, பொது இடத்துல ஆபாசமா பேசுவாரு, தள்ளுவண்டி, பிளாட்பார கடைங்கன்னு யாரையும் விடாம ஆயிரம், ரெண்டாயிரம்னு வசூல போடறார்னு, அரண்டு கெடக்காங்களாம் அந்த ஏரியா வியாபாரிங்க,'' என்றாள் சித்ரா.
''தெய்வமே...இத எங்க போயி சொல்ல?'' என்ற மித்ரா, அடுத்த மேட்டருக்கு தாவினாள். ''கூட வேலை பார்க்கறவங்க மேலேயே, அந்த பாரஸ்ட் டாக்டருக்கு டவுட்டாம்,'' என்றாள்.
''மதுக்கரை மகாராஜ் மேட்டர்லயா?'' என்று கேட்டாள் சித்ரா.
''சரியா பிடிச்சேக்கா. மதுக்கரை மகராஜ் யானை இறந்த விவகாரம் தொடர்பா, புதுகலெக்டர் அந்த பாரஸ்ட் டாக்டரை கூப்பிட்டு விசாரிச்சிருக்காரு. அதுக்கு அவரு, 'என்கூட வேலை பார்க்கற சில பேரு திட்டம் போட்டு பழி போடறாங்கன்னு' சொல்லி புலம்பினாராம். ஆனாலும், நம்ம மேல ஏதாவது ஆக்ஷன் எடுப்பாங்களோன்னு அப்செட்ல இருக்காராம்,'' என்றாள் மித்ரா.
''சரி...சரி...எக்சாம் சென்டர் வரப்போகுது. ஏதாவது சூடா பொலிட்டிக்கல் மேட்டர் சொல்லிட்டுப் போ,'' என்றாள் சித்ரா.
''ஒரு மேட்டர் இருக்கு, கேளுக்கா. உடன் பிறப்பு கட்சி அம்மணி, சில வாரங்களுக்கு முன்னால, திண்டுக்கல் லியோனியை வச்சு அவங்க ஏரியால கூட்டம் நடத்தினாரு. இத வச்சு, எலெக்ஷன்ல தோத்தாலும், கருணாநிதிகிட்ட தனக்குள்ள செல்வாக்கை பப்ளிசிட்டி பண்ணிக்கிட்டாரு. ஆளுங்கட்சிக்காரங்க சும்மா இருப்பாங்களா? நாஞ்சில் சம்பத்தை வச்சு அதே ரத்தினபுரி, சம்பத் வீதியில போட்டிக்கூட்டம் நடத்துனாங்க. நிதிக்குழு தலைவருதான், இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு,'' என்றாள் மித்ரா.
''அரசியல்ல ஆளாளுக்கு பெரியாளாக பார்க்கறது சகஜம்தானே...,'' என்றாள் சித்ரா.
''அவசரப்படாதே...மேல கேளுக்கா. இந்த நிதிக்குழு தலைவரு, மாஜி மேயரு மற்றும் மாஜி எம்.எல்.ஏ., ஒருத்தரோட நெருக்கமானவரு. ஆனாலும், உள்ளூர் வி.ஐ.பி.,யையும் கூப்பிட்டிருந்தாரு. கூட்டம் நடத்துன நிதியோட பேரையே, மேடையில சொல்லலையாம் அந்த வி.ஐ.பி. இதனால மறுபடியும் சீட்டு கிடைக்குமா, கிடைக்காதாங்கற குழப்பத்துல, நிதி செம மூட் அவுட்டாம்,'' என்று முடித்தாள் மித்ரா.
''இந்த சமாச்சாரம் பத்தி நானும் லேசா கேள்விப்பட்டேன். இதுல 'ஹைலைட்டான' ஒரு விஷயத்தை சொல்ல மறந்துட்டியே...கூட்டம் நடத்துன ஆளுங்கட்சிக்காரங்க, பக்கத்துல இருக்கற ஸ்கூல, 'பார்' மாதிரி பயன்படுத்துனது, கார் பார்க்கிங்கா மாத்துனது, ராத்திரி, 11:00 மணி வரை கூட்டம் நடத்தி ஏரியாவை 'கலீஜ்' ஆக்குனதுன்னு, எந்த சமாச்சாரத்தையும் விடாம, தாளிச்சு எடுக்கறாங்களாம் எதிர்க்கட்சிக்காரங்க,'' என்றாள் சித்ரா.
அதற்குள் எக்சாம் சென்டர் வந்து விட, ''சரிக்கா...கொஸ்டீன்லாம் ஈசியா வரணும்னு, போற வழியில ஈச்சனாரி கணபதிகிட்ட எனக்காக வேண்டிக்கோ,'' என்றபடி, கல்லூரிக்குள் நுழைந்தாள் மித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X