அன்றைய நாளிதழ்களை புரட்டிக் கொண்டிருந்த சித்ரா, ஒவ்வொரு செய்தியையும் கூர்ந்து படித்துக் கொண்டிருந்தாள்.
""என்னக்கா, எக்சாம் எழுதப் போறீங்களா? இப்படி, விழுந்து விழுந்து படிக்கிறீங்க,'' என, கிண்டலடித்த படி, சமையல் வேலையில் "பிஸி'யாக இருந்தாள் மித்ரா.
""நம்மூர் எம்.எல்.ஏ., ஒருத்தரு, "மினிஸ்டர்' கனவுல சுத்துறாரு போலிருக்கு,'' என, இழுத்தாள் சித்ரா.
""ரெண்டு நாளைக்கு முன்னாடி, தொழில்துறை சந்திப்பு கூட்டம் நடந்துச்சே, அதைப்பத்தி சொல்றீங்களா,'' என, மித்ரா கேட்க, ""எப்படிம்மா, இவ்ளோ கரெக்டா கண்டுபிடிச்சிட்ட,'' என, சர்ட்டிபிகேட் கொடுத்த சித்ரா, ""ரசத்துக்கு மறக்காம உப்பு போட்டுடு,'' என, "அட்வைஸ்' செய்தாள்.
""அக்கா, தக்காளி ரசம் சூப்பரா வந்துருக்கு,'' என சொன்னதோடு, ""இப்ப, எதுக்காக சந்திப்பு கூட்டம் நடந்துச்சு,'' என, கேட்டாள் மித்ரா.
""மாஜி வி.ஐ.பி., கட்சி பதவியில மட்டும் இருக்காரு. அமைச்சர் பதவிக்கு ஈடா ஏதாவது ஒரு பதவியை கைப்பத்தணும்னு முயற்சி செய்றாரு. ஆனா, எதுவும் கை
கூடலை. அவருக்கு "துணை'யாவும், வலது கரமாவும் இதுநாள் வரைக்கும் செயல்பட்டவரு, "பின்னலாடை நகருக்கு, இனிமே எல்லாமே நான்தான்' என்கிற தோரணையில் செயல்பட்டுக்கிட்டு இருக்காரு,'' என, சித்ரா சொல்லி முடிப்பதற்குள், ""அரசியல்ன்னாலே, "அமைதிப்படை' ஸ்டைல்தானே, எப்படா, "நாற்காலி' கெடைக்கும்னு எல்லோருமே காத்துக்கிட்டு இருப்பாங்க,'' என, இடைச்செறுகலாக சொறுகினாள் மித்ரா.
""கூட்டத்துல என்ன நடந்துச்சுன்னு தெரியுமா ஒனக்கு,'' என, சித்ரா கேட்க, ""தெரியாது'' என, மித்ரா கைவிரித்தாள்.
""தொழில்துறையை சேர்ந்த அனைவரும் கலந்துக்கிட்டு, ஏகப்பட்ட கோரிக்கைகளை சொல்லியிருக்காங்க. இதெல்லாம் நடக்குமா நடக்காதான்னு தெரியாது. இருந்தாலும், நம்பிக்கையோடு முறையிட்டிருக்காங்க,'' என்றாள் சித்ரா.
""ஒரு எம்.எல்.ஏ.,வுக்கு இவ்ளோ செல்வாக்கா,'' என, மித்ரா வாயைப்பிளக்க, ""திருப்பூரை பத்தி சாதாரணமா நெனைக்காதப்பா, சரித்திரத்தையே மாத்திக்காட்டக் கூடிய வல்லமை படைச்சவங்க,'' என, சான்று கொடுத்தாள் சித்ரா.
""அதெல்லாம் சரி, கோர்ட்டுக்கு போகறதுக்கு வக்கீல்களை துப்புரவு தொழிலாளர்கள் சந்திச்சுக்கிட்டு இருக்காங்களாமே,'' என, கேட்டாள் மித்ரா.
""அதுவா, மாநகராட்சி பதிவேடு கணக்குப்படி, 800 துப்புரவு தொழிலாளர்கள் இருக்கணும். ஆனா, களப்பணிக்கு, 550 பேருதான் வர்றாங்க. மத்தவங்கள எங்கேன்னு கேள்வி கேக்குறாங்க. "ரெகமென்டேசன்'ல வேலைக்கு சேர்ந்தவங்க, கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், கிளார்க், டிரைவர்னு, தங்களுக்கு பிடிச்ச வேலையை செஞ்சுக்கிட்டு இருக்காங்க. இதனால, குப்பை அள்ளுற வேலை, மத்தவங்களுக்கு சுமையா இருக்கு. பல இடங்கள்ல, ஆளில்லாம தேங்கிக்கிடக்குது. இப்பிரச்னையை பூதாகரமா, சங்கம் மூலமா கோர்ட்டுல வழக்கு போட திட்டமிட்டிருக்காங்க. அதுக்குதான், வக்கீலை பார்க்க போயிருக்காங்க,'' என, கொட்டிய சித்ரா,
""உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கறதுக்கு முன்னாடி, வசூலை ஆரம்பிக்க திட்டமிட்டிருக்காங்க,'' என்றாள்.
""யாருக்கா, அது? நன்கொடை வசூலிக்க கௌம்பிட்டாங்களா,'' என, கேட்டாள் மித்ரா.
""நம்மூர்ல ஆளுங்கட்சிக்கு சொந்தமா அலுவலகம் இல்லை; இப்ப இருக்கற அலுவலகத்தை காலி பண்ணச் சொல்லிட்டாங்க. அதனால, மாநகராட்சி அலுவலகத்துக்கு முன்னால, கோபால்டு மில் வளாகத்துல, நில வாடகை அடிப்படையில, புதுசா ஆபீஸ் கட்ட திட்டம் போட்டு, பூமி பூஜை போட்டிருக்காங்க. கட்டடம் கட்டுவதற்கு ஒவ்வொரு நிர்வாகியிடமும் பணத்தை கறக்க ஆரம்பிப்பாங்களே, அதைச் சொன்னேன்,'' என்றாள் சித்ரா.
""கிடா வெட்டி, விருந்து வச்சது, "வேஸ்ட்டா' போச்சுன்னு போலீஸ்காரங்க புலம்புறாங்க,'' என, கடைசி மேட்டருக்கு தாவினாள் மித்ரா.
""என்னாச்சுப்பா, குற்றம் குறையலையா,'' என, சித்ரா கேட்க, ""மேற்குவங்கத்தை சேர்ந்த ஒருத்தரை, ஐ.எஸ்., பயங்கரவாதின்னு கைது பண்ணியிருக்காங்களே, அவர் குடியிருந்த வீடு, சென்ட்ரல் போலீஸ் லிமிட்டுக்குள்ள வருது. ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி, "பாஸ்போர்ட்' கேட்டு விண்ணப்பிச்சிருக்காரு. நல்லவேளையா, ஆவணங்கள் சரியில்லைன்னு நிராகரிச்சிருக்காங்க, இப்பத்தான், விஷயம் வெளிச்சத்துக்கு வருது,'' என, சொன்ன மித்ரா, வடை, பாயாசத்துடன் விருந்து பரிமாறத் துவங்கினாள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE