இல்லம் நல்லாயிருந்தா எல்லாமும் நல்லா இருக்கும்!| Dinamalar

இல்லம் நல்லாயிருந்தா எல்லாமும் நல்லா இருக்கும்!

Added : ஜூலை 16, 2016 | கருத்துகள் (5)
இல்லம் நல்லாயிருந்தா எல்லாமும் நல்லா இருக்கும்!

சமீப காலமாக குற்றங்கள் அதிக அளவில் நிகழ்வதற்கு, நம் குடும்ப அமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களும், மின் மென்பொருட்களுக்கு, குழந்தைகள் முதல் பெரியோர் வரை அடிமைப்பட்டுக் கிடப்பதும் தான் அடிப்படை காரணம்.கூட்டுக் குடும்ப அமைப்பு, நம் நாட்டின் பெருமைமிகு ஆணி வேர். அது சிதைந்த போதே, நம் தலைமுறை இடைவெளிப் பிரச்னைகளும் பெருக ஆரம்பித்து விட்டன. பக்குவமற்ற மனநிலையில் உள்ள இளம் தம்பதியர் எடுக்கும், அனுபவம் இல்லாத முடிவுகள் தவறாக முடிய, அதை அடுத்தவர் மேல் பழிபோட்டு அன்றாட வாழ்க்கையையே சிக்கலாக்கிக் கொள்கின்றனர். கூட்டுக்குடும்பத்தில் இருந்த அக்காலப் பெரியோர், தம்பதியருக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, எவ்வளவு பெரிய பிரச்னை ஏற்பட்டாலும் சுமுகமாக தீர்த்து, தம்பதியர் ஒற்றுமையுடன் வாழ, வழி தேடுவர். ஆனால், இக்கால பெரியோர், சிறிய பிரச்னைகளை கூட பெரிதாக்கி, பிள்ளை, பெண் தன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என, நினைக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம், அவர்களுக்குள் இருக்கும் பாதுகாப்பற்ற எண்ணமே. இதனால், குடும்பங்களில் தினமும் வாக்குவாதம், அடிதடி. இதைப் பார்த்தே வளரும் குழந்தைகள், அன்பான கவனிப்பு, சரியான வழிகாட்டுதல் இன்றி நண்பர்களின் துாண்டுதலுக்கு இரையாகின்றனர். இதனால் தான் பள்ளி, கல்லுாரி, அலுவலகம், பொது இடம் என்று எங்கும் சண்டை, சச்சரவு, அடிதடி பெருகி வருகின்றன. இதற்கு உச்சகட்டமாக, நீதிமன்ற வளாகத்திலேயே, வழக்கறிஞர் ஒருவரின் மகனே, தந்தையை அரிவாளால் வெட்டிய செய்தி வெளி வந்துள்ளது. மன உளைச்சல் மற்றும் மனப் பதற்றத்தின் உச்சகட்டமே, வன்முறை செயல்களில் ஈடுபடுவது. மன நல ஆற்றுப்படுத்தும் வழிமுறைகளை பள்ளியிலிருந்தே துவக்க வேண்டும்.குறிப்பாக, மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் முதல் பெற்றோர் வரை, அனைவருக்கும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இந்தப் பயிற்சிகள் நடத்த வேண்டும். குறைந்தது, ஒரு மணி நேரப் பயிற்சி முறைகள் - செயல்முறை பயிற்சிகள் கற்பிக்கப் படவேண்டும். இதனால், அவ்வப்போது, அவர்களின் மன உளைச்சல் தீர்வது மட்டுமின்றி, தமக்குள்ள பிரச்னைகளையும் வெளிப்படையாகப் பேசி, தீர்வு தேட வழி வகுக்கும். இப்படிப்பட்ட அணுகுமுறை பள்ளி, கல்லுாரி, அலுவலகங்கள் என்று அனைத்து துறைகளிலும் செயல்படுத்தப்பட வேண்டும். பன்னாட்டு நிறுவனங்கள் நடத்துவோர், ஊழியர்களின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு தம் சொந்த செலவில், குடும்ப நல ஆலோசனை, தனிநபர் ஆலோசனை, குழுப்பயிற்சி, சுற்றுலா, ஆண்டு விழா என, அவ்வப்போது பணிச் சுமையிலிருந்து விடுபட உதவுவதால், பன்னாட்டு நிறுவனங்களில் பணி செய்ய பெரும்பாலானோர் விழைகின்றனர். அதேபோல், ஊழியர்களின் தகுதித்திறன் ஆய்வின் படி, முறையாக ஊதிய உயர்வும் தருவதால் பணி நிறைவும், வளர்ச்சியும் அடைகின்றனர். ஆனால், பெரும்பாலான தனியார் நிறுவனங்கள், குறைந்த ஊதியத்தில் பணியாளர்களை நியமித்து, பணி நேரத்தையும் அதிகரிக்கின்றன. குடும்பத் தேவையின் கட்டாயத்திற்காக கணவன், மனைவி இருவரும் பணிக்கு செல்வதால் குழந்தைகளிடம் நேரம் செலவிட முடியாமல், பணியிடத்தில் ஏற்படும் மன உளைச்சல்களை குழந்தைகளிடம் காட்டுகின்றனர்.வேலைக்கு செல்லும் மருமகளுக்கு உதவ மனமில்லாத மாமியார், மாமனார், கொழுந்தனார், நாத்தனார் என, எல்லாராலும் பாம்பின் விஷம் போன்று வார்த்தைக் கணைகளை எதிர்கொள்ளும் மருமகள், தெரிந்தே குழந்தைகளை பலிகடா ஆக்குகின்றனர். சரியான ரோல் மாடல் (முன்மாதிரி) இன்றி, திட்டு, குறை, அடி என்றே பெரும்பாலும் வளரும் குழந்தைகள் மனதில், அன்பு, கருணை, பாசம், விட்டுக்கொடுத்தல், மன்னித்தல் போன்ற உயர் பண்புகள் எப்படி வளரும்? சதா வஞ்சம், பழி வாங்குதல், கோபம், விரோதம், தன் கட்டுப்பாட்டில் வர வேண்டும் என்ற அதிகார மனப்பான்மை போன்ற சிந்தனைகளை புதைத்து வளரும் குழந்தைகள், பின்னாளில் வன்முறை செயல்கள் மிக நியாயமான ஒன்று என்றே நினைக்கின்றனர். காரணம், அவர்கள் மனம் புரிந்து ஊக்கமும், உற்சாகமும் கொடுத்து வழி நடத்தி, தவறுகளை மனம் கோணாமல் எடுத்துரைத்து, திருத்தி வளர்க்கும் பெற்றோரோ அல்லது தாத்தா, பாட்டியோ இல்லை. தினமும், இரவில் படுக்கும் முன், நல்ல கதைகளை கேட்டு உறங்கிய அக்கால குழந்தைகள் மனதில் நற்சிந்தனைகளும், நேர்மையும், வெற்றியடைய வேண்டும் என்ற எண்ணமும் இருந்தன. இக்கால குழந்தைகளுக்கு நல்ல கதைகளை கூறும் தாத்தா - பாட்டியும் இல்லை; பெற்றோருக்கும் தமக்குள் சண்டையிட்டுக் கொள்ளவே நேரம் சரியாக உள்ளது. குழந்தைகள் முதல் பெரியோர் வரை பார்க்கும், 'டிவி'யில் எதிர்மறை நிகழ்வுகள் மட்டுமே காட்டப்படுகின்றன. இதைப் பார்த்து வளரும் குழந்தைகளுக்கும் சரி, பெரியவர்களுக்கும் சரி, எதிர் மறை எண்ணங்கள் அன்றாட பதிவாக மாறி விடுகின்றன. இதனால், பெரிதும் பாதிப்படைவது, அப்பாவி மக்களும், நம் சமுதாயமும் தான்.இப்படிப்பட்ட தவறான முன்னுதாரணச் செயல்களை, உடனடியாக தடுக்க முற்படுவது, நம் அனைவரின் சமுதாயக் கடமை. இன்றைய சமுதாயத்தினர் சுயசிந்தனை என்ற ஒன்றே இல்லாமல், மொபைல் போன் மற்றும், 'டேப்லெட்' போனில், 'கேம்ஸ்' விளையாடவும், 'வாட்ஸ் ஆப்'பில், 'சாட்' செய்யவும் மட்டுமே தெரிந்திருக்கின்றனர். இதை முறைப்படுத்தி, நற்போதனைகளை பள்ளிப்பருவம் முதலே வளர்க்க வேண்டியது நம் அரசின் தலையாய கடமை.

இமெயில்: ramas_s@rediffmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X