சாமானியர்கள் மீதான வன்முறைகள்!| Dinamalar

சாமானியர்கள் மீதான வன்முறைகள்!

Added : ஜூலை 17, 2016
சாமானியர்கள் மீதான வன்முறைகள்!

'ஆனி பிராங்கின் டைரிக்குறிப்புகள்' என்ற, 13 வயது சிறுமியின் போர்க்கால அனுபவங்களை, சமீபத்தில் படித்தேன். உஷாதரனின் தமிழ் மொழிபெயர்ப்பை, எதிர் வெளியீடு, 2011ல் வெளியிட்டிருக்கிறது. ஒரு யுத்தத்தை, ஜன்னல் வழியே பார்ப்பது போன்ற பிரமையே, அந்த புத்தகம் படிக்கும் போது ஏற்படுகிறது. ஹிட்லரின் ஆட்சியில், யூதர்கள் எவ்வாறெல்லாம் கொடுமையை அனுபவித்தனர் என்பதை பிராங்கின் அனுபவங்கள் விளக்குகின்றன.
பிராங்க், யுத்த காலத்தில், ஒரு புத்தக அலமாரிக்கு இடையில் ஒளிந்து வாழ்கிறாள். அவளின் தந்தை, ஒரு நாட்குறிப்பேட்டை பரிசளிக்க, அதில், தினசரி நிகழ்வுகளை குறித்து வைக்கிறாள். பிராங்க், அம்மாவை விட, அப்பாவை அதிகம் நேசிக்கிறாள். ஹாரியை காதலிக்கிறாள். அவள், எழுத்தாளராகவோ, நடிகையாகவோ ஆசைப்படுகிறாள். ஆனால், நாஜிப் படைகளின் வதைமுகாமில் உயிர் விடுகிறாள். அவளின் டைரியை, மையூத் எடுத்து, அவளின் தந்தை ஓட்டோ பிராங்கிடம் கொடுக்கிறாள். அவர், மகளின் எழுத்தாளர் கனவை, புத்தகமாக்கி நிறைவேற்றுகிறார்.
யூதர்கள், தங்களின் மதச்சின்னமான மஞ்சள் நட்சத்திரத்தை எப்போதும் அணிந்திருக்க வேண்டும். சைக்கிளை தள்ளிக்கொண்டு தான் போக வேண்டும். டிராமில் பயணிக்கவோ, வாகனங்கள் ஓட்டவோ கூடாது. பிற்பகல், 3:00 மணி முதல் மாலை, 5:00 மணிக்குள் யூதர்களின் கடைகளில் மட்டுமே பொருட்களை வாங்கிக்கொள்ள வேண்டும். இரவு, 8:00 மணிக்கு பின், யாரும் வெளியில் நடமாடக்கூடாது. வீட்டு முற்றத்தில் அமர யாருக்கும் அனுமதி இல்லை. பொழுதுபோக்கு, விளையாட்டுகளில் யாரும் ஈடுபடக்கூடாது என்றெல்லாம், நாஜிப் படைகள், யூதர்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்திருந்ததாக, பிராங்க் எழுதுகிறாள்.
புத்தகத்தை படிக்கும் போது, இலங்கை இனப்படுகொலை முதல், காஷ்மீர், பாலஸ்தீனம் உள்ளிட்ட ஆதிக்கப் போர்கள், சாமானியர்களின் மீது கட்டவிழ்க்கும் வன்முறைகள் தான் பிரம்மாண்டமாக எழுந்தாடுகின்றன.

முருக தீட்சண்யா, கவிஞர்
பதிப்பக தொடர்புக்கு: 04259 - 226012

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X