அந்தக் காலத்தில் அப்படி!| Dinamalar

அந்தக் காலத்தில் அப்படி!

Added : ஜூலை 19, 2016 | கருத்துகள் (7)
அந்தக் காலத்தில் அப்படி!

பத்து, கிருமிகளால் தோன்றும் உயிரிழப்புகளை விட தொற்றா நோய்களால் தோன்றும் உயிர்இழப்புகளே அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சர்கரை நோய், இதய நோய், ரத்தக்கொதிப்பு, உடற்பருமன், தைராய்டு குறைபாடு, அல்சர் போன்ற நோய்களால் ஏற்படும் உடல் பாதிப்பு, மன வேதனை மற்றும் பொருளாதார இழப்பு ஆகியன பிற நாடுகளை விட இந்தியாவை தற்சமயம் பெரிதும் அச்சுறுத்தி வருகிறது. நோயின்றி வாழ என்ன செய்ய வேண்டும் என்பதே இப்போதைய இமாலய கேள்வி.உடற்பயிற்சி, நடை பயிற்சி, மூச்சுப்பயிற்சி, யோகா, தியானம், ஆன்மிகம் என பல வழிமுறைகளை நாம் தேடினாலும், ஹோலிஸ்டிக் ஹெல்த் என்று சொல்லப்படும் ஒரு முழுமையான ஆரோக்கியத்திற்கு என்ன வழிமுறை என்பது ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது. ஆனால் பல நுாற்றாண்டுகளுக்கு முன்பு சித்தர்கள் நோயில்லா வாழ்க்கையின் அவசியத்தையும், அதற்கான வழிமுறைகளையும் கூறிச் சென்றுள்ளனர். தேரர் என்னும் சித்தர் தனது 'பதார்த்த குண சிந்தாமணி' என்னும் நுாலில் பல்வேறு வாழ்வியல் நெறிமுறைகளையும், சுகாதார முறைகளையும், மருத்துவக் குறிப்புகளையும் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் குறிப்பிட்டுள்ளார். இன்றைய காலத்திலும் அந்த நெறிமுறைகள் அனைவருக்கும் ஏற்றவையாக இருப்பது வியப்பான விஷயமே.
பசும்பால் : நாம் இன்று கலப்பு பாலை உபயோகிக்கிறோம். குழந்தை முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பசும்பாலே ஏற்றது. எருமைப்பால் மந்தத்தை ஏற்படுத்தும். ஆகவேதான் பசும்பால் மற்றும் பசும்பால் சார்ந்த உணவுகளான தயிர், மோர், வெண்ணெய் ஆகியவற்றை மட்டுமே உணவில் உட்கொள்ள வேண்டுமென சித்தர் தேரையர் குறிப்பிட்டுள்ளார். தயிர் நன்கு புளித்தப் பின்புதான் உணவில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். அப்பொழுது ஒரு பங்கு தயிருக்கு எட்டு பங்கு நீர் சேர்த்து உண்பது அவசியம்.குழந்தை பெற்ற தம்பதியர், மாதத்திற்கு ஒருமுறை மட்டும் தாம்பத்யம் கொள்வது போதுமானது. உணவு உட்கொண்ட மூன்று மணிநேரத்திற்குள் உடலுறவு கொள்வதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக தன்னைவிட வயது மூத்த பெண்களுடன் உறவு கொள்வதை அல்லது திருமணம் செய்வதை தவிர்க்க வேண்டும். இதனால் தவறான உறவு தவிர்க்கப்பட வேண்டுமென்பதை சித்தர் தேரையர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
எப்படி துாங்குவது : இடது கையை தலைக்கு கீழ் வைத்து தான் துாங்க வேண்டும். தலையணை தவிர்ப்பது நல்லது. இரவு நேரத்தில் மட்டும் தான் துாங்க வேண்டும். கண்டிப்பாக பகல் துாக்கம் கூடாது. காலந்தவறி உறங்குவதால் உடலின் வெப்பம் அதிகரிப்பதுடன், உடல் பருமன், வாத நோய்கள் ஏற்படும் என்று சித்த மருத்துவ நுால் குறிப்பிடுகிறது. குளிப்பதற்கு முன் அதிகாலை வெயில் வெற்றுடம்பில் படும்படி கண்டிப்பாக நிற்கக் கூடாது. ஏறு வெயிலின் வெப்பம் தோல் புற்றுநோய் மற்றும் ஒவ்வாமையை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம். மலம் மற்றும் சிறுநீரை அடக்காமல் அந்தந்த நேரத்தில் கழித்துவிட வேண்டும். மும்மலம், அருநீர் என ஒரு நாளைக்கு மூன்று முறை மலமும், ஆறு முறை சிறுநீரும் கழிப்பது அவசியம். இதற்கு நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் சேர்க்க வேண்டும். தினமும் இரண்டு வேளை சமைத்த உணவையும், ஒரு வேளை பழங்களும் சாப்பிடுவது நல்லது. முதல் நாள் சமைத்த உணவை எந்த காரணம் கொண்டும் சாப்பிடக் கூடாது. பசியில்லாத நேரத்தில் உணவு உண்ணக்கூடாது. மூலநோயை துாண்டும் தன்மையுடைய கிழங்குகளையும், செரிக்க தாமத மாகும் வேகாத பயிர் உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.
தண்ணீர் குடிக்க வேண்டும் : கிழங்கு வகைகளில் கருணைக்கிழங்கு மிகவும் நல்லது. வாழைப்பழத்தை விட வாழைப்பிஞ்சில் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவது நல்லது. ஒவ்வொரு முறையும் உணவு முழுவதையும் சாப்பிட்டு முடித்தப் பின்புதான் தண்ணீர் குடிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் உணவு உண்ட பின், அல்லது முக்கியமாக இரவு உணவுக்குப் பின்பு சிறு தொலைவு நடப்பது நல்லது. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வாந்தி செய்விக்கும் மருந்துகளை உட்கொண்டு, வயிற்றை சுத்தம் செய்ய வேண்டும். இதனால் வயிற்றின் அமிலச்சுரப்பு சீராகும். நான்கு மாதங்களுக்கு ஒருமுறை கழிச்சலை உண்டாக்கும் மருந்துகளை உட்கொண்டு, குடலை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இதனால் குடல் பாதையில் வளரும் தேவையற்ற புழுக்களும், பாக்டீரியாக்களும் வெளியேறும். என்சைம்கள் புதிதாக சுரக்க ஆரம்பிக்கும். 45 நாட்களுக்கு ஒருமுறை மூக்கில் உப்பு நீர் அல்லது திரவ மருந்துகளைப் போட்டு மூச்சுப்பாதையை சுத்தம் செய்து கொள்வது நல்லது. இதனால் மூக்கில் சதை வளர்ச்சி, ஒவ்வாமை மற்றும் மூக்குப்பாதையில் நீர்கோர்த்தல் கட்டுப்படும்.
கிருமிகள் வளரக்கூடாது : கண்டிப்பாக வாரம் ஒரு முறை முகச்சவரம் செய்து, ரோமக்கால்களில் கிருமிகள் வளராமல் கட்டுப்படுத்த வேண்டும். இதனால் பொடுகு, பூச்சிவெட்டு மற்றும் சிரங்குகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். நான்கு நாட்களுக்கு ஒருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்து முழுக வேண்டும். நல்லெண்ணெய் அல்லது மருந்து எண்ணெய் ஏதேனும் ஒன்றை உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை தேய்த்து 15 முதல் 30 நிமிடங்கள் கழித்து இளவெந்நீரில் குளிக்க வேண்டும். இதனால் உடல் சூடு குறைந்து, ரத்த ஓட்டம் சீராகி, தோல் மினுமினுப்படையும். தினமும் இரவில் நன்கு துாக்கம் உண்டாகும். இரவு நேரத்தில் வாசனை திரவியங்கள் மற்றும் பூக்களையும் நுகரக்கூடாது. வீட்டு விலங்குகள் மற்றும் துடைப்பம் ஆகியவற்றிலிருந்து எழக்கூடிய துாசி நம் மேல் படும்படி அருகில் நிற்கக்கூடாது. அவ்வாறு செய்தால் ஒவ்வாமையினால் ஆஸ்துமா ஏற்படும் என்று தேரையர் குறிப்பிட்டுள்ளார்.விளக்கேற்றியப் பின்பு அதாவது மாலை நேரத்தில் துாங்குதல், உணவு உட்கொள்ளுதல், அழுக்கு ஆடைகளை அணிதல், தலை சீவுதல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். இதனால் மங்கலான வெளிச்சத்தில் கிருமித்தொற்று மற்றவர்களுக்கு பரவக்கூடிய வாய்ப்பு அதிகரிக்கிறது.கை விரல்கள் மற்றும் தலைமுடியிலிருந்து தெறிக்கும் நீர் தன் மேலோ பிறர் மேலோ படும்படி அவசரமாக கைகளை துடைக்கவோ, தலையை துவட்டவோ கூடாது. இதனால் நம்மை நாமே பாதுகாத்து கொள்வதுடன், பிறருக்கும் பாதிப்பு ஏற்படாமல் காத்துக் கொள்ளப்படுகிறது.தேரையர் என்னும் சித்தர் பல நுாற்றாண்டுகளுக்கு முன்பே, நோயின்றி வாழ கூறிய இந்த விதிகள், பொது சுகாதாரத்திற்கும், தனிமனித ஒழுக்கத்திற்கும் அடிப்படையானவை. இதனை நாம் கடைபிடிக்கும் பொழுது பல்வேறு நோய்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். நோயின்றி நீண்டகாலம் வாழலாம்.
- டாக்டர் ஜெ. ஜெயவெங்கடேஷ்
சித்த, மூலிகை மருத்துவர்

மதுரை. 98421 67567

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X