சில்லரை ஆபீசரால் தினமும் ஏழரை!| Dinamalar

'சில்லரை' ஆபீசரால் தினமும் ஏழரை!

Added : ஜூலை 19, 2016
Share
முகத்தில் முத்து முத்தாக துளிர்த்திருந்த வியர்வையை, கர்ச்சீப்பால் ஒற்றியபடி பரபரப்பாக வீட்டினுள் நுழைந்தாள் மித்ரா.'டிவி' யில் நியூஸ் பார்த்துக் கொண்டிருந்த சித்ரா, ''என்ன மித்து... என்ன ஆச்சு?'' என, பதறினாள்.''அப்ப உனக்கு விஷயமே தெரியாதா... கீழ் வீட்டு ரமணி ஆன்டியோட, அஞ்சு பவுன் செயினை பைக்குல வந்த யாரோ அறுத்துட்டு போயிட்டாங்களாம். கழுத்துல ரத்தத்தோட, ஆன்டியை
'சில்லரை' ஆபீசரால் தினமும் ஏழரை!

முகத்தில் முத்து முத்தாக துளிர்த்திருந்த வியர்வையை, கர்ச்சீப்பால் ஒற்றியபடி பரபரப்பாக வீட்டினுள் நுழைந்தாள் மித்ரா.
'டிவி' யில் நியூஸ் பார்த்துக் கொண்டிருந்த சித்ரா, ''என்ன மித்து...
என்ன ஆச்சு?'' என, பதறினாள்.
''அப்ப உனக்கு விஷயமே தெரியாதா... கீழ் வீட்டு ரமணி ஆன்டியோட, அஞ்சு பவுன் செயினை பைக்குல வந்த யாரோ அறுத்துட்டு போயிட்டாங்களாம். கழுத்துல ரத்தத்தோட, ஆன்டியை ஆஸ்பத்திரிக்கு கூட்டீட்டு போயிருக்காங்க...''-சொல்லி விட்டு மேஜை மீதிருந்த பாட்டில் தண்ணீரை, கடகடவென தொண்டைக்குள் இறக்கினாள் மித்ரா.
அதிர்ச்சி அடைந்த சித்ரா, ''என்னடி இது அநியாயமா இருக்கு...போலீஸ் சொன்னமாதிரி, இனி நம்ம, 'ஸ்ட்ரீட்லயும்' 'சிசிடிவி' கேமரா வெச்சிர வேண்டியதுதான்,'' என்றாள்.
''கேமரா வெக்க சொன்ன போலீஸ்தான், துடியலூர்ல கண்டுக்காம இருக்காங்க. துடியலூர்ல இருந்து கவுண்டர் மில் வரைக்கும் ரோட்டோரமா, போலீஸ் வச்சிருக்கற 'சிசிடிவி' கேமரா, கரென்ட் கனெக்ஷன் இல்லாததால, சும்மா 'டம்மி' யாதான் இருக்காம். இதப்பத்தி பப்ளிக் கம்ப்ளையின்ட் செஞ்சும், போலீஸ் கண்டுக்கலையாம்,'' என்றாள் மித்ரா.
''அப்ப அந்த ஏரியா திருடனுங்களுக்கு கொண்டாட்டம்தான்னு சொல்லு,'' என்று சிரித்தாள் சித்ரா.
''அங்க திருடனுங்களுக்கு கொண்டாட்டம்னா, போலீஸ் ஸ்டேஷன்கள்ல போலீஸ்காரங்க கொண்டாடி தீர்க்கறாங்களாம்,'' என்று புதிய மேட்டரை பிடித்தாள் மித்ரா.
குழம்பிய சித்ரா, ''புரியலை மித்து...டீட்டெயிலா சொல்லு,'' என்றாள்.
''ஐகோர்ட் கொண்டு வந்திருக்கிற, சட்ட திருத்தத்தை வாபஸ் வாங்கறது வரை, கோர்ட்டுக்குள்ள நுழைய மாட்டோம்னு, வக்கீல்கள் 'ஸ்டிரைக்' பண்ணிட்டு இருக்காங்கள்ல... இதனால, அடி தடி, தகராறு சம்பந்தமா போலீஸ்ல யாராவது கம்ப்ளையின்ட் குடுத்தா, பல ஸ்டேஷன்கள்ல எப்.ஐ.ஆர்., போடுறதே இல்லையாம்; கம்ப்ளையின்ட்டை வாங்கிட்டு, 'விசாரிக்கிறோம்'னு சொல்லி அனுப்பிட்டு, எதிர் பார்ட்டியை கூப்பிட்டு, ஸ்டேஷன்லயே மிரட்டுறாங்களாம்.
'வக்கீல்கள் ஸ்டிரைக் பண்றதால, 'பெயில்' போட முடியாது...ஜெயிலுக்குள்ள போனா வெளிய வர்றது கஷ்டம்'னு சொல்லி, கேஸ் போடாம 'நோட்ட' கறக்கிறாங்களாம். போலீஸ் கேட்கறத குடுத்துட்டு, 'அக்யூஸ்ட்டு' தப்பிச்சிர்றாங்களாம்,'' என்று விளக்கினாள் மித்ரா.
''கார்ப்பரேஷன் ஆபீசர் தப்பிச்சதை விடவா இது பெருசு?'' என்று குசும்பு சிரிப்பு சிரித்தாள் சித்ரா.
''இதென்ன புதுசா இருக்கு...மேல சொல்லுக்கா,'' என்றாள் மித்ரா.
''கார்ப்பரேஷன்ல குப்பை அள்ள வாங்கின, மூணு டிப்பர் லாரி காணாம போய், அப்புறம் கண்டுபிடிச்சாங்களே ஞாபகம் இருக்கா,'' என்று 'ரிவைண்ட்' செய்தாள் சித்ரா.
''அதை எப்படி மறக்க முடியும்...முதல்ல லாரிய காணோம்னாங்க, அப்புறமா அதோட பேப்பர்ஸ் காணோம்னாங்க. 'உசந்த' அதிகாரியை சஸ்பெண்ட் பண்ணுனாங்க, கணக்கு காட்ட சென்னைல இருந்து, துருப்பிடிச்ச மூணு லாரியை துாக்கிட்டு வந்தாங்க...அதானே? ஆமா, அந்த மூணு லாரியும் ஓட தொடங்கிருச்சா?'' அப்பாவியாய் கேட்டாள் மித்ரா.
''அந்த லாரிகள் ரோட்டுல ஓடுற கண்டிஷன்ல இல்லையாமா... அதனால, ரிட்டையர்டு ஆன அந்த 'உசந்த குமாருக்கு' ஆதரவா இருக்கறதுன்னு முடிவு செஞ்சிட்டாரு அந்த ஆபீசரு. லாரிகளை ஆட்டைய போட்ட மேட்டர்ல, இவருக்கும் பங்கு இருக்கறதுனால, மத்த ஆபீசர்ஸ் சப்போர்ட்டோட லாரிகளை, 'கண்டம்' லிஸ்ட்டுல சேர்க்க வேலை நடக்குதாம்...'' என்றபடியே 'டிவி' சேனலை மாற்றினாள் சித்ரா.
பக்தி 'டிவி' யில், 'சரவண பொய்கையில் நீராடி...' என்ற பாட்டு பாடிக் கொண்டிருந்தது. அந்த இசையை தலையாட்டி ரசித்த மித்ரா, ''என்கிட்டயும் ஒரு கார்ப்பரேஷன் மேட்டர் இருக்கு,'' என்றாள்.
''ம்ம்...சொல்லு,'' என்றாள் சித்ரா.
''கார்ப்பரேஷன்ல, 'டிபிஓ' செக்ஷன்ல போஸ்டிங் போட்டதுல, ஏகப்பட்ட கூத்து நடந்திருக்கு. கவர்மென்ட் உத்தரவ மீறி, இன்ஜினியரிங் செக்ஷன்ல இருந்த, 'பிரியமான' அதிகாரியை, அங்க முக்கியமான பதவியில உக்கார வெச்சிருக்காங்க,'' என்றாள் மித்ரா.
''நானும் கேள்விப்பட்டேன். நீ சொல்ற அந்த 'பிரியமான' அதிகாரி, வருமானத்துக்கு அதிகமா சொத்து குவிச்ச வழக்குல, 'விஜிலென்ஸ்' விசாரணைல சிக்குனாங்களே அவங்கதானே மித்து...?'' என்று கேட்டாள் சித்ரா.
''அவங்களேதான். இங்கிருந்து திருநெல்வேலிக்கு 'டிரான்ஸ்பர்'ல போனாங்க. மறுபடியும் இங்கேயே வந்துட்டாங்க. அதுவும், இப்ப பணம் கொழிக்கற, முக்கிய சீட்டுல உக்காந்திருக்காங்க. என்னென்ன நடக்கப்போகுதோ...'' என்றாள் மித்ரா.
''இதே மாதிரிதான், புது எம்.எல்.ஏ., மகன் போடுற ஆட்டத்தைப் பார்த்து, 'இன்னும் என்னென்ன நடக்கப் போகுதோ' ன்னு எல்லாரும் பேசிக்கறாங்க மித்து,'' என்றாள் சித்ரா.
''இதென்ன புது கதையா இருக்கு,'' - முகத்தில் ஆச்சரியம் காட்டினாள் மித்ரா.
''நம்மூரு புது எம்.எல்.ஏ., வீட்டு கதைதான் இது. கேளு மித்து. அந்த எம்.எல்.ஏ.,வோட புத்திரன் போடுற ஆட்டம் தாங்காம, ஆளுங்கட்சிகாரங்களே புலம்பறாங்களாம். கட்சி ஆபிசுக்கோ, கட்சி நிகழ்ச்சிக்கோ போறப்போ, புதுசா வாங்கியிருக்கிற, 40 லட்ச ரூபா கார்ல, கும்பலோட பந்தாவா போய் இறங்குறாராம்...'' என்றாள் சித்ரா.
''அடடா...தலை இருக்கும்போதே வால் ஆட்டம் போடுதா?'' என்று 'கமென்ட்' அடித்தாள் மித்ரா.
''மேல கேளு... யாராவது போன் பண்ணி, எம்.எல்.ஏ., கிட்ட பேசணும்னு சொன்னா... 'எதாயிருந்தாலும் என்கிட்டயே சொல்லுங்க'ன்னு, தோரணையோட பதில் சொல்றாராம். தொகுதிக்கு, 'ஆக்டிங் எம்.எல்.ஏ.,' மாதிரி, இவர் அட்டூழியம் பண்றதால, ரத்தத்தின் ரத்தத்துக்கெல்லாம், 'பீபி' ஏறுதாம்,'' என்றாள் சித்ரா.
''ம்ம்ம்... தொகுதி ஜனங்களை, அந்த 'அம்மன்' கடவுள்தான் காப்பாத்தணும்,'' பெருமூச்சு விட்டாள் மித்ரா.
''கடவுள்னு சொன்னவுடனேதான் நினைவுக்கு வருது...நம்மூர் மலையோர முருகன் கோவில்ல, சில ஆபீசர்ஸ் முகம் சுளிக்கற அளவுக்கு நடந்துக்கறாங்கன்னு கம்ப்ளையின்ட் கிளம்பியிருக்கு மித்து,'' என்றாள் சித்ரா.
''கோவில்னாலே இப்பல்லாம் எல்லாருக்கும் இளக்காரமா போச்சு...என்ன மேட்டர்?'' என்று கேட்டாள் மித்ரா.
''அந்த மலைக்கோவில் கெஸ்ட் ஹவுஸ், வி.ஐ.பி.,க்கள் தங்குற ரூம்கள் எல்லாம், 'டி.சி.,' கட்டுப்பாட்டுல இருக்கு. சம்பந்தமே இல்லாத சிலபேரு, அந்த அறைகள யூஸ் பண்றாங்களாம். அந்த அறைகள்ல, 'சகலமும்' நடக்குதாம். 'படை வீட்டுல நடக்கற இந்த கூத்து பத்தி, அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தெரிஞ்சும், ஆக்ஷன் எடுக்காதது ஏன்'னு, இந்த சமாச்சாரம் தெரிஞ்ச டிவோட்டீஸ் கேக்கறாங்க,'' என்றாள் சித்ரா.
''எல்லாம் அந்த 'பழனி' ஆண்டவனுக்கே வெளிச்சம்,'' என்று நமுட்டு சிரிப்பு சிரித்தாள் மித்ரா.
அப்போது 'டிவி'யில் ஓடிய ஒரு காமெடி நிகழ்ச்சியில், 'டிக்கெட்...டிக்கெட்' என்று நடிகர் வடிவேலு சிரிக்க வைத்துக் கொண்டிருந்தார்.
''உனக்கு தெரியுமா மித்து...நம்மூரு கவுர்மென்ட் பஸ் கண்டக்டர்களை மிரட்டி, மிரட்டியே ஒரு மேனேஜர் லட்சம், லட்சமா சம்பாதிக்கறாராம்,'' என்றாள்.
''மிரட்டியே சம்பாதிக்கறாரா? விவரமா சொல்லுக்கா,'' ஆவலானாள் மித்ரா.
''அரசு போக்குவரத்து உக்கடம் கிளைல இருக்கற அந்த அதிகாரி, 'தினமும் கிடைக்கற சில்லரையையெல்லாம், கரெக்டா வந்து குடுத்துரணும்' னு கண்டக்டர்கள்கிட்ட உத்தரவு போட்டுருக்காராம். சொல்படி கேக்கறவங்களுக்கு, கேக்கும்போதெல்லாம் லீவு, ஆசைப்படுற வழித்தடம்னு வாரி குடுக்கறாராம்.
சில்லரையை வெளியில கொடுக்கற கண்டக்டர்களுக்கு, பனிஷ்மென்ட் உறுதியாம்,'' என்றாள் சித்ரா.
''சரியான 'சில்லரை' போல. வெறும் சில்லரைய வச்சு அவரு என்ன பண்றாரு?'' என்று சிரித்தாள் மித்ரா.
''அதென்ன அப்படி கேட்டுட்டே... நுாறு ரூபா சில்லரைக்கு, பத்து ரூபாய் கமிஷன் வீதம் வாங்கி, காசு பாக்குறாராம். ஒரு பஸ்சுக்கு ஒரு நாளைக்கு, அதிக பட்சம் பத்தாயிரத்துல இருந்து, 15 ஆயிரம் ரூபா வரை கலெக்ஷன் ஆகும். அப்படின்னா ஒரு பஸ்சுக்கு, ஆயிரத்துல இருந்து ஆயிரத்து 500 ரூபா வரை கமிஷன் வரும். இப்படி அந்த டிப்போல ஓடுற, 55 பஸ்சுக்கு கணக்கு போட்டுக்கோ. இவர்கிட்ட சில்லரை வாங்க, நடுராத்திரி சாக்கு மூட்டையோட பெரிய ஓட்டல்காரங்க, டிபார்ட்மென்ட் ஸ்டோர்காரங்கன்னு காத்துக் கிடக்காங்கன்னா பார்த்துக்கோயேன்,'' என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே போன் முணுமுணுத்தது.
எடுத்து பேசிய சித்ரா, ''என்ன பாஸ்கரா...நோட்ஸ் வாங்கிட்டுப் போய் எத்தனை நாளாச்சு? இப்படியெல்லாம் ஏமாத்தாதே. வீட்லதான் இருக்கேன். உடனே கொண்டு வா,'' என்று போனை 'கட்' செய்தாள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X