அம்மன் கோவிலுக்கு சென்றுவிட்டு சித்ராவும், மித்ராவும், பேசிக்கொண்டே வீட்டுக்கு கிளம்பினர். ஊத்துக்குளி ரோடு பாலம் கட்டுமானப்பணி நடக்கும் இடத்தில் வாகன நெரிசல், காற்றில் பறந்த புழுதியால் மூச்சு முட்டியது. ""பாலம் வேலையில வேகத்த காணோம்; ஆனா, "அம்மா' பெயரில் வசூல் வேட்டை மட்டும் ஜரூரா நடந்திருக்கு,'' என்று, புதிரோடு பேச்சை துவங்கினாள் சித்ரா.
""ஆளுங்கட்சிக்காரங்க, யார் வந்தாலுமே, வசூல்ல குறியாக இருக்காங்க,'' என்றாள் மித்ரா.
""ஆனா, ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தினர், எதிர்க்கட்சி ஆளுங்ககிட்டயே கறாரா, வசூல் செஞ்சுட்டாங்க. ஒனக்கு தெரியுமா,'' என்றாள் சித்ரா.
""அப்படியென்ன வசூல்? யார் செஞ்சாங்க,'' என, மித்ரா ஆச்சரியத்துடன் கேட்டாள். ""சிவில் சப்ளை கிடங்கில் வேலை செய்யும் சுமை தொழிலாளர்கள் பல கட்சியில் இருக்காங்க. இதுல, ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தை சேர்ந்தவங்க, எலக்ஷன்ல ஜெயித்ததை கொண்டாட, கெடா வெட்டி விருந்து வைக்க தொழிற்சங்க ஆளுங்ககிட்ட வசூலிச்சாங்க. இந்த வசூல், மத்த கட்சியோட தொழிற்சங்கத்தினரிடமும் நடந்திருக்கு,'' என்றாள் சித்ரா.
""இதிலென்னக்கா இருக்கு? ஒரே இடத்தில் வேலை செய்யறதால மத்த கட்சிக்காரங்க பணம் குடுத்திருப்பாங்க,'' என்றாள் மித்ரா.
""தொழிற்சங்கத்துடன் வசூல் முடியல. சரக்கு இறக்கும் ரேஷன் கடைகளிலும், கடைக்கேத்த மாதிரி, 200 முதல் 500 ரூபாய் வரைக்கும் போட்டு தள்ளிருக்காங்க. அதுவும் பத்தாதுன்னு, ஆபிச வேலை செய்யறவங்ககிட்டயும் வசூல் வேட்டை ஜோரா நடந்திருக்கு,'' என்றாள் சித்ரா.
""வசூல் நடந்தது சரி; கெடா வெட்டுனாங்களா,'' என்று, சந்தேகம் கிளப்பினாள் மித்ரா.
""எங்கயோ கெடா வெட்டி விருந்து நடந்திருக்கு. பணம் கொடுத்தவங்க, கெடாக்கறியும் பிரியாணியும் வரும் காத்திருந்தாங்க. ஆனா, நெம்ப தெரிஞ்சவங்க மட்டுந்தான் பிரியாணி கிடச்சதாம்,'' என்றாள், சித்ரா.
""அப்டின்னா, ஆளுங்கட்சிக்காரங்க வசூல் பண்ணிட்டு, சூப்பரா "அல்வா' கொடுத்துட்டாங்கன்னு சொல்லு'' என்றாள் மித்ரா.
""வழக்கமா, தீபாவாளி நேரத்தில் மட்டும் தான் ரேஷன் கடைகளில் வசூல் நடக்குமாம். இப்போ, புதுசா வசூலை ஆரம்பிச்சுருக்காங்க. இதுவே வழக்கமாகிட்டா, எப்படி சமாளிக்கிறதுன்னு, ரேஷன் கடையில வேல பாக்குறவங்க பொலம்பிக்கிட்டு இருக்காங்க,'' என, அங்கலாய்த்தாள் சித்ரா.
""நம்ம மாவட்டத்தில், மினிஸ்டரு, எம்.எல்.ஏ., சிபாரிசு பண்றவங்களுக்குத்தான் எல்லாமே நடக்குது; மத்தபடி காத்திட்டு இருக்கறவங்க, கடைசில ஏமாந்து தான் போறாங்க,'' என, இழுத்தாள் மித்ரா.
""இது, எல்லா ஆட்சியிலும் நடக்கிற கதைதானே,'' என, சித்ரா சலிப்புடன் கூறினாள்.
""ஆனாலும், இது கொஞ்சம் வித்தியாசமானது. "பேன்ஸி' நம்பர் வேணும்னு, திருப்பூர் வடக்கு ஆர்.டி.ஓ., ஆபீசுல அப்ளிகேஷன் கொடுத்துட்டு, ஒரு வாரமா, நண்பர் ஒருத்தர் காத்திருந்தாரு. "சீரியல்' எண் வந்ததும், "மாஜி' ஆபீசுல இருந்து போன் போட்டு, நண்பர் கேட்ட அதே நம்பர, வேறொருவருக்கு கொடுக்க சொல்லிட்டாங்க. ஆர்.டி.ஓ., ஆபீசுல இருக்கறவங்க என்ன செய்ய முடியும்? நண்பர், மனசை தேத்திக்கிட்டு, வேற நம்பர் வாங்கிட்டு வந்திருக்காரு,'' என்றாள் மித்ரா.
""ஆர்.டி.ஒ., ஆபீசிலும் அரசியல் புகுந்து விளையாடுனா என்ன செய்ய முடியும்?'' என்று சித்ரா கை விரித்தாள்.
""மாஜி' யோட "பி.ஏ.,'வை காணோம்னு எல்லோரும் தேடிட்டு இருக்காங்களே? என்ன விஷயம்?'' என, மித்ரா கொக்கி போட்டாள்.
""அதுவா, அவர் பதவியில இருந்தப்ப, வேலை வாங்கி தர்றேன்னு சொல்லிட்டு, மாவட்டம் பூரா, வசூல் செஞ்சிருக்காரு. நெலமை தலைகீழா மாறினதும் வேலையும் கெடைக்கல; பணமும் கெடைக்கல. பணம் கொடுத்தவங்க, "மாஜி' வீட்டுக்கு படையெடுத்து இருக்காங்க. அங்கே, அதபத்தி தெரியாதுன்னு சொல்லி, அனுப்பிட்டாங்கா,'' என்று, ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள் சித்ரா.
""கார்ப்ரேஷனுக்கு புதுசா வந்திருக்கற சி.எச்.ஓ., திடீர்னு "பிளாஸ்டிக்' ரெய்டுல இறங்கிட்டாரே?'' என, அடுத்த விஷயத்துக்கு மித்ரா தாவினாள்.
""அறிமுகம் அதிரடியா இருந்தாத்தானே ஒரு பயம் இருக்கும்; வியாபாரிகளையும் சரிக்கட்ட முடியும்? இதெல்லாம்கூட பரவாயில்லை. துப்புரவு பணியாளர்னு சேர்ந்தவங்க, பேனா பிடிச்சு எழுதிட்டு இருக்காங்க. எங்களுக்கு வேலப்பளுன்னு அதிகமுன்னு சொல்லிட்டு, புலம்பறாங்க. அவங்க மேல கொஞ்சம் கவனம் செலுத்தினா பரவாயில்லை. அதே மாதிரி, அதிகாரிகளுக்கு "கப்பம் 'கட்டிட்டு, வேலைக்கு வராம இருக்கறவங்களையும் "களை' எடுத்தார்னா ரொம்ப புண்ணியமா போகும்,'' என கூறி விட்டு, கிளம்பினாள் சித்ரா.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE