வேலுார்: காட்பாடி அருகே, ஓடும் ரயிலில் இளம்பெண்ணுக்கு, அரவாணிகள் பிரசவம் பார்த்ததில், அழகான ஆண் குழந்தை பிறந்தது. கேரள மாநிலம், கொல்லத்தைச் சேர்ந்தவர் அல்லா முகமது; கட்டட மேஸ்திரி. இவரது மனைவி செரினா, 25; நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இவர்கள், அசாம் மாநிலம், கவுகாத்தி செல்வதற்காக, 'கவுகாத்தி எக்ஸ்பிரஸ்' ரயிலில் நேற்று முன்தினம் புறப்பட்டனர்.
ஓரமாக படுக்க வைத்து...: நேற்று காலை, 7:00 மணிக்கு, வேலுார் மாவட்டம், ஜோலார்பேட்டையைத் தாண்டி ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது, செரினாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது; இதனால், அவர் அலறினார். ரயிலில் இருந்த பெண்கள் அவருக்கு உதவினர்.அப்போது, ரயிலில் பயணம் செய்த அரவாணிகள் மூன்று பேர், ரயில் பெட்டியின் ஓரமாக செரினாவை படுக்க வைத்து, பிரசவம் பார்த்தனர். சுக பிரசவம் ஆக வேண்டும் என்று, சக பயணிகள் கடவுளிடம் வேண்டிக் கொண்டனர். இக்கட்டான சூழலில் இருந்த செரினாவுக்கு, லாவகமான பிரசவ வழிமுறைகளை அரவாணிகள் மேற்கொண்டனர். இதையடுத்து, 7:40 மணிக்கு, செரினாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
பாராட்டு : சுக பிரசவம் ஆனதோடு தாயும், சேயும் நலமாக இருப்பதை கண்ட பயணிகள், மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். பிரசவம் பார்த்த அரவாணிகளுக்கு, பாராட்டு தெரிவித்தனர்.இதற்கிடையே, ரயில் காட்பாடி வந்தது. ஏற்கனவே கொடுக்கப்பட்ட தகவலை அடுத்து, காட்பாடி ரயில்வே போலீசார், ஆம்புலன்சுடன் தயாராக நின்றிருந்தனர். செரினா மற்றும் குழந்தையை வேலுார் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, செரினாவும், அவரது குழந்தையும் சேர்க்கப்பட்டனர். பொதுவாக, ரயில் பெட்டிகளில் அரவாணிகள் அட்டகாசம் தாங்க முடியாது என்று தான் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில், ஓடும் ரயிலில் இளம்பெண்ணுக்கு, அரவாணிகள் பிரசவம் பார்த்து உதவிய சம்பவம், ரயில் பயணிகளை நெகிழச் செய்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE