விளையாடினார்கள்... வென்றார்கள்! படிப்பு?| Dinamalar

விளையாடினார்கள்... வென்றார்கள்! படிப்பு?

Added : ஜூலை 22, 2016 | கருத்துகள் (1)
Advertisement
விளையாடினார்கள்... வென்றார்கள்! படிப்பு?

விளையாட்டு என்பதற்கான அர்த்தத்தை அனைத்து தமிழ், ஆங்கில அகராதிகளில் அலசினால் 'உடல் சக்தியை பயன்படுத்துதல்' என்ற வார்த்தையுடன் மட்டும் சம்பந்தப்பட்டிருக்கிறது. ஆனால் இன்றைய உயர்கல்விக்கான இடஒதுக்கீட்டில் உடல் சக்தியை பயன்படுத்தும் விளையாட்டுகளின் நிலை பற்றி மகிழ்ச்சியடைய முடியவில்லை. சிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கடுமையாக பயிற்சி செய்வதாலும், விளையாட்டுகளில் தொடர்ந்து கலந்து கொள்வதாலும், அவர்களால் படிப்பில் அதிகபட்சமான மதிப்பெண்கள் எடுக்கமுடியாத சூழ்நிலை. அவர்களின் வாழ்வில் குமாஸ்தா, காவல்துறை, ராணுவ வேலை தவிர வேறு வேலைவாய்ப்புகள் இல்லாத நிலையே இருந்து வந்தது. இதை மாற்றும் நோக்கில் விளையாட்டு வீரர்களும் உயர்கல்வி பயின்று, நல்ல வேலை வாய்ப்புகளுக்கு செல்ல வேண்டும் என்ற உயரிய நோக்கில், தொழிற்கல்வியில் விளையாட்டு வீரர்களுக்கு 500 சீட்டுகள் ஒதுக்கீடு செய்து வீரர்களுக்கு மாபெரும் பரிசளித்தார் முதல்வர் ஜெயலலிதா.
ஏற்றமும் ஏமாற்றமும் : தமிழக பொறியியல் கல்லுாரிகளின் விளையாட்டு இட ஒதுக்கீட்டில் முதல் இடத்தை பிடித்த வர்ஷினி, தன் அறிவு பலத்துடன் 'செஸ்' விளையாட்டில் குதிரைக் காய்களை நகர்த்த, நிச்சயமாக தன் உடல் வலிமையால் சிரமப்பட்டிருக்க மாட்டார். விளையாட்டு ஒதுக்கீட்டின் முதல் இடமே இப்படி என்றால், மற்ற 499 இடங்களை பற்றி சொல்லவே வேண்டாம். ஒலிம்பிக்கில் எட்டு முறை தங்கம் வென்று, இந்த முறை பதக்கம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படும் நமது தேசிய விளையாட்டான ஹாக்கியை விளையாடிய வீரர்களுக்கு, முதல் 200 இடத்தில் ஒருவருக்கு கூட இடமில்லை என்பது ஆச்சரியம் மட்டுமல்ல வேதனை கலந்த உண்மை.
விளையாட்டின் மதிப்பு : விளையாட்டு ஒதுக்கீட்டு நெறிமுறைகளை வகுத்தவர்களே, இந்திய விளையாட்டு அமைப்பின் உண்மை நிலையை மறைத்து, உண்மையான விளையாட்டு வீரர்களுக்கு பயனளிக்காத நெறிமுறைகளை உருவாக்கினார்கள். 500 இடங்கள் மற்றும் கட்டண சலுகை என்பது இன்றைய மதிப்பில் ரூ.200 கோடி. இச்சலுகைகளை அடையும் பொருட்டு, உடல் உழைப்பு அதிகம் சாராத விளையாட்டுகளையும், ஒலிம்பிக் அட்டவணையில் இல்லாத விளையாட்டுகளையும் இப்பட்டியலில் சேர்த்துள்ளனர்.
எத்தனை ரகங்கள் : விளையாட்டுக்கான ஒதுக்கீட்டில் இடம் பெறுவதற்கான சில விளையாட்டுகளின் பெயர்களை, நம் மக்கள் இதுவரையிலும் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். ஏன் நம்மால் அந்த பெயர்களை கூட உச்சரிக்க முடியவில்லை. அதன் ஒரு சில பெயர்கள் அட்டயா பட்டயா, கார்ப்பால், மல்லாப் கேம்ப், சபக்டக்ரா, சாப்ட்டென்னிஸ் என 54 விளையாட்டுகளின் அட்டவணை உள்ளது. இவை அனைத்துமே உடல் உழைப்பு அதிகம் சாராத விளையாட்டுகள்.மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு 45 மதிப்பெண்ணும், தேசிய அளவில் கலந்து கொண்டு அனைத்து வேலை வாய்ப்புகளுக்கும் தகுதி உள்ள பாம் 2 சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு, 50 மதிப்பெண்களும் கொடுக்கப்பட்டு விளையாட்டின் மாவட்ட அளவிற்கும், தேசிய அளவிற்கும் கிட்டத்தட்ட ஒரே மதிப்பெண் கொடுத்து தவறாக நெறிப்படுத்தப்பட்டுள்ளது. தென்னிந்திய அளவில் நடைபெறும் போட்டிகளில், தமிழகம் சார்பில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு எந்த மதிப்பெண்ணும் இல்லை.
வகைப்படுத்தும் முறை : விளையாட்டுகளை தரப்படுத்தும் நோக்கில் இந்திய விளையாட்டு அமைச்சகம் மிக முக்கிய விளையாட்டுகள் (high priority game), முக்கிய விளையாட்டுகள் (priority game) மற்றும் மற்ற விளையாட்டுகள் (other game) என பிரித்துள்ளனர். அதே போல் இந்திய ஒலிம்பிக் சங்கமும் ஒலிம்பிக் விளையாட்டு மற்றும் ஒலிம்பிக் அல்லாத விளையாட்டு என இரு பிரிவாக பிரித்துள்ளது. இது போல் தமிழக அரசும் வகைப்படுத்த வேண்டும்.இந்திய விளையாட்டு அமைச்சகம் ஒலிம்பிக் அட்டவணையில் உள்ள பதக்கம் வெல்ல வாய்ப்புள்ள மற்றும் ஆசிய காமன்வெல்த் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற விளையாட்டுகளுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து தடகளம், ஹாக்கி, மல்யுத்தம் என 9 விளையாட்டுகளை மிக முக்கிய விளையாட்டுகளாக பிரித்து சலுகைகள் வழங்கி வருகிறது.கால்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து போன்ற 25 விளையாட்டுகளை முக்கியத்துவம் வாய்ந்த விளையாட்டுகள், மற்ற 25 விளையாட்டுகளை மற்றைய விளையாட்டுகள் என்று இந்திய அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
போராட்டம் அதிகம் : மாவட்ட அளவில் தேர்வு பெற்று, மாநில அளவில் விளையாடி, தேசிய போட்டியில் கலந்து கொள்வது என்பது, மிகக் கடினமான பல அடுக்கு நிலைகளைக் கொண்ட பணி. மற்ற விளையாட்டுகளில் இவ்வளவு கடினப் போட்டி இருப்பதில்லை. அதிகம்பேர் விளையாடுவதும் இல்லை. மேலும் இந்த விளையாட்டு ஒதுக்கீட்டை அடையும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட சங்கங்கள் மாநில, உலக அளவிலான போட்டிகளை பெரும் நகரங்களில் தங்களுக்குள் நடத்தி மதிப்பெண்களை குவித்து, தொழில் மற்றும் மருத்துவ கல்லுாரிகளில் இடம்பெற்ற பின் தாங்கள் விளையாடிய விளையாட்டை மறந்தும் விடுகிறார்கள். இவர்களில் பெரும்பான்மையோர் நகர்புறத்தை சார்ந்தவர்கள்.மிக முக்கியமான விளையாட்டை விளையாடுபவர்களோ, பெரும்பாலும் கிராமம் மற்றும் ஏழை எளிய மாணவர்கள். இவர்கள் சாதாரண வேலை வாய்ப்புக்காக இறுதி வரை விளையாடிக் கொண்டே போராடுகிறார்கள். இதுவரை நடந்த பொறியியல், மருத்துவ, விவசாயத்துறை படிப்பிற்கான விளையாட்டு ஒதுக்கீட்டில், 75 சதவீதம் ஒலிம்பிக் அல்லாத விளையாட்டு விளையாடியவர்களுக்கே கிடைத்துள்ளது.
கனவு நனவாகும் : வருங்காலங்களில் வெயிலில் வாழ்ந்து, வேர்வையில் குளிக்கும் மிக முக்கிய விளையாட்டு விளையாடும் வீரர்களுக்கு பொறியியல், மருத்துவ, விவசாய கல்லுாரி ஒதுக்கீடுகளில் முதன்மை பட்டியலில் முதன்மை ஒதுக்கீடு கொடுத்து மதிப்பெண் நெறிமுறைகளை மாற்றி அமைக்க அரசு முன் வர வேண்டும். அப்போது தான் ஒலிம்பிக் பதக்க கனவை நனவாக்க காத்திருக்கும் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையிலும் ஒளியேற்றி வைக்க முடியும். இதுதான் அனைத்து விளையாட்டு சங்கங்களின் விருப்பமும், வீரர்களின் ஆசையும்!
- ஏ.ஜி.கண்ணன்
செயலாளர், தமிழ்நாடு அனைத்து விளையாட்டு வீரர்கள் சங்கம்.

90034 61505.வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KRK - Kumbakonam,இந்தியா
22-ஜூலை-201603:05:27 IST Report Abuse
KRK இந்த பாவம் அவர்களை சும்மா விடுமா? எல்லா உயர் மட்டத்திலும், அரசன் அரசிகளுக்கு பக்கத்திலும் இந்த புல்லுருவி இனத்தவர்(வெயில் படாமல், நோகாமல் நொங்கு தின்னும்) நிரந்தரமாக உட்கார்ந்துகொண்டு செய்யும் அக்கிரமம் இது. இது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் நமக்கென்ன நம் பிள்ளைகளா கஷ்டப்படுதுன்னு அன்றாட பிழைப்பை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம். எல்லா இடத்திலும் இந்த மாதிரி தந்திர வேலையை செஞ்சி வச்சிருக்காங்க இவங்க. வெறும் 5% நம் 95% ஆட்டி படைக்குது. இன்னும் 100 பகுத்தறிவு தந்தைகள் தேவைப்படுது இந்த நாட்டுக்கு. புரட்சி மட்டுமே வென்றெடுக்கும். ஒன்று சேர்வோம் வென்றெடுப்போம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X