தோற்றவர்களின் கேடயமா தேர்தல் சீர்திருத்தம்?| Dinamalar

தோற்றவர்களின் கேடயமா தேர்தல் சீர்திருத்தம்?

Added : ஜூலை 23, 2016 | கருத்துகள் (1)
தோற்றவர்களின் கேடயமா தேர்தல் சீர்திருத்தம்?

ஒவ்வொரு தேர்தல் முடிந்ததும், தோல்வியடைந்த கட்சிகள் கூறும் வாசகம், 'தேர்தல் சீர்திருத்தம் தேவை' என்பது. தோற்ற பின் இவ்வாறு கூறும் கட்சிகள், வெற்றி பெற்றிருந்த போது, இப்படி கூறியதில்லை. வழக்கம் போலவே, தோல்விக்கு பின், சில தேர்தல் சீர்திருத்தம், விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை ஆகியவற்றை பற்றி கட்சிகள் குரல் கொடுத்துள்ளன. இந்தியாவில், இப்போதுள்ள தேர்தல் நடைமுறையில், அதிக ஓட்டுகளை பெற்றவர்கள், வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுகின்றனர். இதனால், தோல்வியடைந்த கட்சிகளுக்கு, பிரதிநிதித்துவம் இல்லாமல் போகிறது. உதாரணமாக, சமீபத்தில் நடந்த தமிழக சட்டசபை தேர்தலில், மொத்தம், நான்கு கோடியே, 28 லட்சத்து, 78 ஆயிரத்து, 674 பேர் ஓட்டளித்தனர். அவர்களில், ஒரு கோடியே, 76 லட்சத்து, 17 ஆயிரத்து, 60 பேர் ஓட்டுகளை (40.80 சதவீதம்) பெற்று, அ.தி.மு.க., 134 இடங்களைப் பெற்றது. இதனால், தமிழகத்தில் மீண்டும் அக்கட்சி ஆட்சி பொறுப்பில் அமர்ந்து விட்டது. தமிழக வாக்காளர்களின் பெரும்பான்மையானோர், அதாவது, 59.20 சதவீதத்தினர், அ.தி.மு.க.,வுக்கு எதிராக ஓட்டளித்துள்ள போதிலும், அக்கட்சி அமைத்துள்ள ஆட்சி, எப்படி உண்மையான ஜனநாயகத்தின் பிரதிபலிப்பாக இருக்க முடியும்? அதேபோல், அ.தி.மு.க., - தி.மு.க., கூட்டணி தவிர, மீதமுள்ள கட்சிகள், 22 சதவீத ஓட்டுகளை, அதாவது, 95 லட்சம் ஓட்டுகளை பெற்றுள்ள போதிலும், அவர்களுக்கு சட்டசபை செல்வதற்கான வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. அப்படியென்றால், அவர்களுக்கு ஓட்டளித்த மக்களை, மொத்தமாக, இந்த ஜனநாயகம் புறக்கணிக்கத் தானே செய்கிறது? இந்நிலை மாறி, இந்தியாவில் உண்மையான ஜனநாயகம் தழைக்க வேண்டும் என்றால், விகிதாச்சார முறையிலான பிரதிநிதித்துவம் ஏற்படுத்த வேண்டும். இந்திய சட்ட ஆணையம், இதை பலமுறை பரிந்துரைத்த பிறகும், யாரும் கவனம் செலுத்தாமலேயே இருப்பது தான் வேதனை. இந்தியாவில் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்ட நிலையில், அனைத்து மக்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க கூடிய, ஒரே முறை விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை தான். இந்த முறை, நடைமுறைப்படுத்தப்பட்டால், தேர்தல் செலவுகள் கட்டுப்படுத்தப்படும். கட்டுத்தறியில்லாமல், வாக்காளர்களுக்கு வாரி இறைக்கப்படும் பணமும் குறையும். தோல்வியை தழுவிய கட்சிகள் சில வலியுறுத்தும், விகிதாச்சார பிரதிநிதித்துவம் மீது பிற கட்சியினர் கவனமும் குவிய வேண்டும். மத்திய அரசும், தேர்தல் ஆணையமும் இதில் கவனம் செலுத்த வேண்டும். தி.மு.க., ஒவ்வொரு முறை தோல்வி அடையும் போது, விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறையைக் கையிலெடுக்கும். பா.ம.க., 25, 'சீட்'களை வென்றிருந்தால், இதே கோரிக்கைகளை வலியுறுத்தியிருக்குமா என்றால், சந்தேகம் தான். பா.ம.க., மட்டுமல்ல; வெற்றி பெற்றால், தேர்தல் சீர்திருத்தம் குறித்து, எந்த கட்சியும் பேசுவதில்லை; சிந்திப்பதும் இல்லை. அப்படியென்றால், இந்த முழக்கம் என்பது, உயிரோட்டம் இல்லாத முழக்கமா என எண்ணத்தோன்றுகிறது. 'இந்திய தேர்தல் என்பது, 'நம்பர் கேம்' அடிப்படையில் நடக்கும் ஒரு விளையாட்டுத் தானே தவிர, வேறொன்றுமில்லை' என்று, வெளிப்படையாக கூறியிருக்கிறார், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் லிங்டோ.இந்த எண் விளையாட்டை வைத்து தான், 120 கோடி பேருக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட மிகப் பெரிய ஜனநாயக நாட்டில், உலகுக்கே மாயாஜாலம் காட்டிக் கொண்டிருக்கிறது, தேர்தல் ஆணையம். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., 41 சதவீத ஓட்டுகளை பெற்று, ஆளுங்கட்சியாகி விட்டது. அப்படியென்றால், மீதி, 59 சதவீதம் மக்களின் எண்ணத்தை ஜனநாயகம் பிரதிபலிக்காதா? கடந்த, 2014ல் நடந்த பார்லிமென்ட் தேர்தலில், பா.ஜ.,வுக்கு விழுந்த ஓட்டுகளை விட, அக்கட்சிக்கு எதிரான ஓட்டுகள் அதிகமாக இருந்ததை கவனிக்க வேண்டும். இருந்தபோதும், மத்தியில் என்ன நிலை? சர்வ வல்லமையுடன் ஆட்சி பொறுப்பில் பா.ஜ., தான் வீற்றிருக்கிறது. இப்படிப்பட்ட மக்களாட்சி தத்துவத்தை கொண்ட ஜனநாயகத்தைத் தான் நாமும், மக்களும் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். அதுமட்டுமா... முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, சட்டசபை தேர்தலில், பணம் புகுந்து விளையாடியது. அதற்கு சாட்சிகளாக, அரவக்குறிச்சியும், தஞ்சாவூரும் உள்ளன. ஓட்டுக்கு, 500 ரூபாயிலிருந்து, 5,000 ரூபாய் வரை, தங்கு தடையில்லாமல் கொடுத்திருக்கின்றனர். ஆனால், தேர்தல் ஆணையமோ, பணம் வாங்கிய குற்றத்துக்காக, வாக்காளர்களை பிடித்து, வழக்கு போட்டதாக கூறுகிறது. 234 தொகுதிகளிலும் பண வினியோகம் நடந்தது என்றால், ஒரு வேட்பாளர் கூட கைது செய்யப்படவில்லையே; ஏன் வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லையே. ஆட்சியில் இருந்தபோது, ஊழல் மூலம் கொள்ளையடித்த கோடிகளை கொட்டி, மக்களை விலைக்கு வாங்கி, வெற்றியையும் விலை கொடுத்து வாங்கி விட்டனர். அப்படியென்றால், தேர்தல் ஆணையத்துக்கு, எந்த அதிகாரமும் இல்லையா?நேற்று வரை, ஆளுங்கட்சி சொல்வதற்கு தலையாட்டும் எடுபிடிகளாக இருந்தவர்கள், தேர்தல் நடத்தை விதிகள் அமலான பின், தேர்தல் ஆணைய அதிகாரிகளாக உருவெடுத் தால், ஒரே நாளில், அவர்கள் எப்படி நடுநிலையாளர்களாக மாற முடியும்?இது தான் இங்கு பிரச்னையே. தேர்தல் ஆணையம் என்பது, திருவிழா கடைகள் போல, திடீரென அமைக்கப்படுவதும், அகற்றப்படுவதுமாக இருக்க கூடாது. அது, சுய அதிகாரம் கொண்ட தனி அமைப்பாக, தொடர்ந்து இயங்க வேண்டும். அதற்கென, தனிப்பட்ட ஊழியர்களும், அதிகாரிகளும் இருக்க வேண்டும். தேர்தல் தொடர்பான இந்த சீர்திருத்தங்கள் எல்லாம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றால், அனைத்து கட்சிகளும் இணைந்து, கூட்டு முயற்சியாக, இதற்காக போராடினால் மட்டுமே, எதிர்காலங்களில், நல்ல பலன் கிட்டும். அப்படி இல்லாத வரையில், வழக்கமான தேர்தல் நடைமுறைகள் தான், அப்படியே தொடரும்; எந்த சீர்திருத்தத்தையும் ஏற்படுத்த முடியாது.
- பி.ஜாபர் அலி - பத்திரிகையாளர்
இ - மெயில்: pudumadamjaffar1968@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X