மாவட்ட தலைவர்கள், 16 பேர், மாநில நிர்வாகிகள், 13 பேர், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், மூன்று பேர் த.மா.கா.,விலிருந்து விலகி, அ.தி.மு.க.,வில் இணைய விருப்ப கடிதம் அளித்துள்ளனர்.
சட்டசபை தேர்தலில், மக்கள் நலக் கூட்டணியுடன், த.மா.கா., 26 தொகுதிகளில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தது. மக்கள் நலக் கூட்டணியில் சேர்ந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தலுக்கு முன், கட்சியின் மூத்த தலைவர்கள் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், பீட்டர் அல்போன்ஸ் போன்றோர் வெளியேறினர். தேர்தல் முடிந்த பின், த.மா.கா., மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் பலர் வெளியேறி, அ.தி.மு.க.,வில் இணைந்து வருகின்றனர். சமீபத்தில், வாசனின் சொந்த மாவட்டமான தஞ்சாவூரைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் திருஞானசம்பந்தம், ராம்குமார் மற்றும் கோவை மகேஸ்வரி ஆகியோர், அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.
இதையடுத்து, காஞ்சிபுரம், திருவள்ளூர், விருதுநகர், நாகப்பட்டினம், விழுப்புரம், திருப்பூர், வேலுார் உட்பட, 16 மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள், 13 பேர், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மூன்று பேர், வாசனின் கூடாரத்திலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளனர். அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., ஒருவர் மூலமாக, கட்சியில் சேருவதற்கு முதல்வர் ஜெயலலிதாவுக்கு விருப்ப கடிதமும் வழங்கியுள்ளனர் என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
- நமது நிருபர் -