இஸ்ரோ எனும் இமாலயம்!| Dinamalar

இஸ்ரோ எனும் இமாலயம்!

Added : ஜூலை 24, 2016 | கருத்துகள் (4)
இஸ்ரோ எனும் இமாலயம்!

உலகின் மிகப் பெரிய விண்வெளி ஆய்வு மையங்களில் 'இஸ்ரோ' (இந்திய விண்வெளி ஆய்வு மையம்) ஆறாவது இடத்தில் உள்ளது. 1969ல் பெங்களூருவில் துவங்கப்பட்ட இதன் முதன்மை நோக்கம், விண்வெளித் தொழில்நுட்பத்தில் மேம்பாடுகளை ஆராய்வதும், அவற்றை நாட்டு நலனுக்கு பயன்படுத்துவதும் ஆகும். தற்போது 16 ஆயிரம் ஊழியர்கள் இங்கு உன்னத பணியில் உள்ளனர்.
சாதனை... சாதனை : 'இஸ்ரோ' தொடர்ந்து பல சாதனைகளை கண்டுள்ளது. 1975ல் நமது முதல் செயற்கைக்கோள் 'ஆரியபட்டா'வை உருவாக்கி சோவியத் ஒன்றியத்தால் ஏவப்பட்டது. 1980ல் இந்தியாவில் கட்டமைக்கப்பட்ட ஏவுகலம் (எஸ்.எல்.வி.-3) மூலமாக முதல் செயற்கைக்கோள் 'ரோகிணி'யை ஏவியது. தொடர்ந்து செயற்கைக்கோள்களை முனைய சு ற்றுப்பாதைகளில் ஏவத்தக்க முனையத் துணைக்கோள் ஏவுகலம் (பி.எஸ்.எல்.வி.,) மற்றும் புவிநிலைச் சுற்றுப் பாதைகளில் ஏவத்தக்க ஜி.எஸ்.எல்.வி., என்ற இரு ஏவுகலங்களை வடிவமைத்து காட்டியது. இந்த ஏவுகலங்கள் மூலம் பல தொலைத்தொடர்பு செயற்கைக்கோள்களையும், புவி கூர்நோக்கு செயற்கைக்கோள்களையும் 'இஸ்ரோ' ஏவியுள்ளது. உச்சகட்டமாக 2008ல் நிலவை நோக்கிய இந்தியாவின் முதல் பயணமாக, 'சந்திராயன் -1' ஏவப்பட்டது.
எதிர்காலத்தில் :இந்திய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமின்றி பிற நாட்டு வாடிக்கையாளர்களுக்கும், விண்வெளி செயற்கைக்கோள் தொடர்புடைய செயல்பாடு களையும் தருகிறது 'இஸ்ரோ'. புவியியைவு செயற்கைக்கோள் ஏவுகலத்தை (ஜி.எஸ்.எல்.வி.,) மேம்படுத்தி முழுமையும் இந்திய பொருட்களால் கட்டமைப்பதும், மனிதருக்குரிய விண்வெளி திட்டங்கள், நிலவு புத்தாய்வுகள், கோளிடை ஆய்வு கருவிகள் செயல்படுத்துவதையும் எதிர்கால திட்டங்களாக 'இஸ்ரோ' கொண்டுள்ளது.
முதல் வானிலை செயற்கைக்கோள் : வானிலைக்காக மட்டும் பயன்படும் முதல் வானிலை செயற்கைக்கோள் 'கல்பனா-1' முனையத் துணைக்கோள் ஏவுகலம் மூலமாக செப்.,12, 2002ல் விண்ணேற்றியது. "இந்தியா, கிராமங்களில் வாழ்கிறது," என்ற காந்தியடிகளின் கூற்றிற்கு ஏற்ப 'இஸ்ரோ' கிராம முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவிடும் வகையில் 'கிராம வள மையம்' ஏற்படுத்தியுள்ளது. கிராமங்களில் விவசாயிகள் சந்தை நிலவரம் அறியவும், திறன் மேம்பாட்டுக்காகவும், விவசாயம் சார்ந்த சந்தேகங்களை துறை வல்லுனர்களை தொடர்புகொண்டு தெளிவுப்படுத்திக் கொள்ளவும் இந்த மையம் வழிகாட்டு கிறது. இயற்கை சார்ந்த வளங்களை கண்டறிய இது உதவுகிறது.
கல்விக்காக 'எஜூசாட்' : கல்விச் சேவைக்காக 'எஜூசாட்' எனும் பிரத்யேக செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது. இதன்மூலம் 'எஜூசாட்'டில் இணைக்கப்பட்ட கல்லுாரிகள் ஒலி-ஒளி நேரலை காட்சி மூலம் சிறந்த பேராசிரியர்களின் விரிவுரையை மாணவர்கள் காணலாம். இதில் 35,400 மையங்கள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் அறிவியல், தொழிற்கல்வி, பள்ளிக் கல்வி என அனைத்து விதமான பாடத் திட்டத்தை செயல்முறையோடு விளக்குகின்றனர். இதில் ஐ.ஐ.டி.,- என்.ஐ.ஐ., -இக்னோவும் இணைந்துள்ளன. ஆரோக்கியமான குடிமகன் ஆரோக்கியமான நாட்டை உருவாக்க உதவுவான்,' என்பதை உறுதிபடுத்த 'இஸ்ரோ டெலி மெடிசின்' சேவையை துவக்கியுள்ளது. இதனால் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்கள், மருத்துவத்துறை சார்ந்த வல்லுனர்களை காணொலி காட்சி மூலம் எளிதில் தொடர்பு கொள்ளலாம். தற்சமயம் 300க்கும் மேற்பட்ட மையங்கள் பயன்பாட்டில் உள்ளது. இதனை நாடு முழுவதும் விரிவுபடுத்த முயன்று வருகிறது.
சாதனைகள் : விண்வெளிக்கு செல்லும் கருவிகள், விண்வெளி பரப்பு போன்றவை மட்டுமில்லாமல் மேலும் சில திட்டங்களையும் 'இஸ்ரோ' மேற்கொண்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்கது, 'புவன்' திட்டம். 'கூகிள் ஏர்த்' திட்டத்திற்கு போட்டியாகவும், அதிநவீன வசதிகளுடன் நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக வடிவமைக்கப்பட்ட இத்திட்டத்தின் வாயிலாக முப் பரிமாண படங்களையும் மிக துல்லியமாக காணலாம். இந்திய கடல்சார் ஆராய்ச்சிக்கான 'ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.- 1 ஜி' விண்ணில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது. செயற்கைக்கோளையும், அதை விண்ணில் ஏவுவதற்கான பி.எஸ்.எல்.வி.,- ஜி.எஸ்.எல்.வி., ஆகிய இருவகை ராக்கெட்களையும் தயாரித்து வருகிறது.
கடல்சார் ஆராய்ச்சி : தெற்கு ஆசியாவில் உள்ள கடல் ஆராய்ச்சிக்காக ரூ.1,420 கோடி மதிப்பில் ஏழு செயற்கைக் கோள்களை பி.எஸ்.எல்.வி., ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த 'இஸ்ரோ' திட்டமிட்டு, ஆறு செயற்கைக் கோள்களை செலுத்திவிட்டது. ஏழாவது செயற்கைக்கோளாக 'ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., 1 ஜி', 'பி.எஸ்எல்.வி., சி-33' ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. இது மிகப் பெரிய வெற்றியாகும். இதன் மூலம் 1500 கி.மீ., சுற்றளவில் கடல் வழிகளையும், எல்லைகளையும் துல்லியமாக கண்காணிக்கலாம். தரையிலும் வானிலும் செல்லும் வாகனங்களையும் கண்காணிக்கலாம். இதன் ஆயுட்காலம் 12 ஆண்டுகள். இதுபோன்று மேலும் இரு செயற்கைக் கோள்களை, கடல்சார் ஆராய்ச்சிக்காக 'இஸ்ரோ' அனுப்ப திட்டமிட்டுள்ளது.
பி.எஸ்.எல்.வி.,- 34 : ஒரே நேரத்தில் 20 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி 'இஸ்ரோ' சாதனை படைத்தது. ஏவப்பட்ட சில நிமிடங்களில் 20ம் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது. இதில் 17 வெளிநாட்டை சேர்ந்த செயற்கை கோள்கள். சி- 34 ராக்கெட், நவீன மோட்டார் கருவி பொருத்தப்பட்ட 'எக்ஸ்எல்' வகையில் 14வது ராக்கெட் ஆகும். இதன் எடை 320 டன். உயரம் 44.4 மீட்டர் என 'இஸ்ரோ' தெரிவித்துள்ளது . ஒரே ராக்கெட்டில் செல்லும் செயற்கைக் கோள்களை, வெவ்வேறு சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தி புதிய சாதனை படைத்துள்ள 'இஸ்ரோ'வின் சாதனைகள் தொடரட்டும்.
முனைவர் ஜெ.கார்த்திகேயன்
திண்டுக்கல். 90922 82292

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X