சிவகங்கை: சிவகங்கை அருகே விவசாயத்தை பாழாக்கிய அதிகாரிகளை " கவுரவிக்கும் " விழாவிற்கு கிராம மக்கள் ஏற்பாடு செய்து, அதற்கான அழைப்பிதழை, தேங்காய், பழத்துடன் கொண்டு வந்து கலெக்டரிடம் நேரில் வழங்கினர்.சிவகங்கை அருகே கீழக்கண்டனி, மேலவெள்ளஞ்சி கண்மாய் மூலம் நுாறு ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றது. சமீபத்தில் இந்த நிலத்திற்கு இடையே மானாமதுரை - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை அமைத்த போது கண்மாய் தண்ணீரை ரோட்டில் மறுபுறம் கொண்டு செல்வதற்காக கால்வாய்களின் மேல் கட்டப்பட்டிருந்த சிறுசிறு பாலங்களை நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் மூடி விட்டனர். இதனால் விவசாயிகள் கண்மாய் தண்ணீரை வயல்களுக்கு பாய்ச்ச முடியாமல் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து கடந்த மே மாதம் கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர். நடவடிக்கை இல்லாததால்,தங்களின் வாழ்வாதாரத்தை பாழாக்கிய அரசு அதிகாரிகளுக்கு பொன்னாடை போர்த்தி " கவுரவிக்கும் " விழாவை வரும் ஆக.,2ல் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். இதற்காக அழைப்பிதழ் அச்சடித்து அரசு அலுவலகங்களிலும், கடைகளிலும் வழங்கினர்.நேற்று நடந்த மனுநீதி நாளில் பங்கேற்க வந்த கீழக்கண்டனி கிராம மக்கள் 2 பெரிய பாக்கு மட்டை தாம்பாலத்தில் தேங்காய்,வாழைப்பழம், பூக்கள் வைத்து கிராம சம்பிரதாய முறைப்படி கலெக்டரை விழாவிற்கு வரும்படி அழைத்து, பத்திரிகை வழங்கினர்.முதலில் பத்திரிகையில் என்ன இருக்கிறது என்று தெரியாத நிலையில் பழம், தேங்காயை பார்த்த கலெக்டர் மலர்விழி அழைப்பிதழை பிரித்து படித்து பார்த்தார்.விவசாயிகளின் நுாதன போராட்டத்திற்கு தனக்கே அழைப்பிதழா... என்பதை புரிந்து கொண்டு உதவியாளரை அழைத்து பழங்களை எடுத்துச் செல்லும்படி கூறிவிட்டு, அழைப்பு விடுத்தவர்களிடம், 'சரி... சரி... பார்க்கலாம்' எனக்கூறி, அவர்களை அவசர, அவசரமாக அங்கிருந்து அனுப்பி வைத்தார்.கீழக்கண்டனி விவசாயி பாக்கியராஜ் கூறுகையில்,“ கடந்த ஜனவரி மாதமே மனுக்கொடுத்தும் விவசாயத்தை பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்தோம். அதிகாரிகள் தலையிட்டு, 'தேர்தல் முடிந்ததும் கால்வாய் அமைத்து, சேதப்படுத்தப்பட்ட சிறு பாலங்களை கட்டி தருவோம்' என உறுதி அளித்தனர்.அதை நம்பி வாக்களித்தோம். தேர்தல் முடிந்ததும் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் இந்த நுாதன போராட்டத்திற்கு தேதி குறித்து, கலெக்டருக்கு அழைப்பிதழ் வழங்கி இருக்கிறோம். இனியாவது கால்வாய் அமைத்து கண்மாய் நீரை நாங்கள் பயன்படுத்தி விவசாயம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா, என்பது தெரியவில்லை,” என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE