புதுடில்லி,: சொத்து விபரங்களை தெரிவிக்காத, தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு, அதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி, சுப்ரீம் கோர்ட், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது. தொழிலதிபர் விஜய் மல்லையா, 'ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா' உள்ளிட்ட வங்கிகளில், 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கி, திருப்பிச் செலுத்தாமல், பிரிட்டனின் லண்டன் நகருக்கு தப்பிச் சென்றார்; அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு எதிராக, இந்தியாவில் பல்வேறு கோர்ட்டுகளில் வழக்குகள் நடக்கின்றன. அவரது சொத்துக்களை ஏலத்தில் விடும் நடவடிக்கையை, கடன் வழங்கிய வங்கிகள் மேற்கொண்டு வருகின்றன. ஆனால், சொத்து தொடர்பான தகவல்கள், அவர் தெரிவிக்க மறுத்து வருகிறார். இதையடுத்து, மல்லையாவுக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில், வங்கிகள் கூட்டமைப்பு, கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில், மத்திய அரசின் சார்பில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி, நேற்று, மனு தாக்கல் செய்தார். அதில், 'மல்லையா, தன் சொத்து விபரங்களை மறைக்கிறார். பிரிட்டன் நிறுவனத்திடம் இருந்த பெற்ற, 300 கோடி ரூபாய் குறித்த விபரங்களை வெளியிடவில்லை' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி, மல்லையாவுக்கு, சுப்ரீம் கோர்ட் சார்பில், 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.