தடம் மாறிய தமிழர் கலையை மீட்போம்!| Dinamalar

தடம் மாறிய தமிழர் கலையை மீட்போம்!

Added : ஜூலை 26, 2016 | கருத்துகள் (4)
தடம் மாறிய தமிழர் கலையை மீட்போம்!

நாட்டுப்புற மக்களின் வாழ்வியல் கூறுகள் ஒவ்வொன்றும் நமது சமுதாய பண்பாட்டின் அடையாளச் சிற்பங்களாகும். தமிழ் சமூகம் உலக அளவில் உச்சத்தை தொட்டதற்கு தமிழ்ப் பண்பாட்டின், கலாசாரத்தின் அடிப்படை ஆணிவேராக இருந்தது தமிழரின் கலைகளாகும். வாழ்வியலின் ஒவ்வொரு நிலையிலும் கலை இடம் பெறுகிறது. இதன்மூலம் தம்மையும், தம்மைச் சார்ந்தவரையும், தாம் வணங்கும் தெய்வத்தையும் மகிழ்ச்சிப்படுத்த கலைகளை பயன்படுத்தினர். இசைக்கு மயங்காத உயிர்கள் இல்லை என்பர். ஆனால் இசைக்கு தெய்வமும் இறங்கி வரும் என்பது நமது கலையின் சிறப்பு. இவ்வாறாக வாழ்வியலுக்கும், வழிபாட்டிற்கும் வழிகாட்டிய நாட்டுப்புற நிகழ்த்துக் கலைகள், இன்று மெல்ல மெல்ல தடம் அழிந்து கொண்டு இருக்கின்றன என்பதுதான் வேதனைப்பட வேண்டிய செய்தி. ஆட்டம் போட்ட கலைகள், இன்று ஆட்டம் கண்டு கொண்டிருக்கின்றன. இதற்கு பல்வேறு சமூகச்சூழல்கள் காரணமாக இருந்தாலும் அதனை மீட்டெடுப்பது என்பது தமிழ்ச் சமூகத்தின் கடமையாகவே உள்ளது.
வழிபாட்டில் : வழிபாடு என்பது இரு நிலைகளில் அமைகிறது. ஒன்று சிறுதெய்வம் என்று சொல்லக்கூடிய நாட்டுப்புற வழிபாடு. மற்றொன்று பெருந்தெய்வம் என்று சொல்லக்கூடிய சமய வழிபாடு சார்ந்தது. இவ்விரண்டு நிலைகளிலும் வழிபாட்டின் போது நிகழ்த்துக் கலைகள் இடம் பெற்று இருக்கின்றன. இதில் பெரும்பாலும் நாட்டார் வழிபாடு என்று சொல்லக்கூடிய நாட்டுப்புற வழிபாட்டில், கலைகள் இல்லாத வழிபாடே இல்லை என்று சொல்லும் அளவிற்கு, மக்களின் வழிபாட்டோடு இரண்டறக் கலந்துள்ளது. இதனை இன்றளவும் கிராமப்புறங்களில் காணமுடியும். கலைகளால் மக்கள் மனம் மகிழ்ந்தனர். உற்றார் உறவினர்களை மகிழ்ச்சிப்படுத்தினர். ஆண்டுதோறும் விவசாயம் செய்யும் விவசாயிகள் ஆனந்தத்தை வெளிப்படுத்தும் விதமாக ஆட்டக் கலைகள் அமைந்தன. ஆனால் இன்றோ பல கலைகள் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டன. பல கலைகளுக்கு ஆட்டக் கலைஞர்களே இல்லை. மிச்சம் இருக்கும் ஒன்றிரண்டு கூத்துக்கலைகள் தான் இன்றைய கிராமப்புற வழிபாட்டில் காணமுடிகிறது.
தமிழர் கலைகள் : தமிழரின் தனி அடையாளமாக அடையாளப்படுத்திய கலைகளான கரகாட்டம், வில்லுப்பாட்டு, மயிலாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், சிலம்பாட்டம், காவடியாட்டம், புலியாட்டம், ராஜாராணி ஆட்டம், காளையாட்டம், வில்லுப்பாட்டு, பாவைக்கூத்து, கும்மியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், கூத்து என்ற நாடகம். இந்த கலைகளும், இன்னபிற கலைகளும் தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் மூலை முடுக்கெல்லாம் பட்டொளி வீசிப் பறந்த கலைகளாகும். தமிழர்களின் பண்பாட்டை பறைசாற்றி நின்ற நிகழ்த்துக் கலைகள். ஆனால் இன்று இருந்த இடம் தெரியாமல் அழிந்து கொண்டிருக்கின்றன. இக்கலைகளின் மைய மற்றும் பாடுபொருளாக இருப்பது புராண, இதிகாசக் கதைகளே. கிராமங்கள் தோறும் ராமாயணத்தையும், மகாபாரதத்தையும் இக்கலைகள் எடுத்துரைத்தன. கண்ணகி, கோவலன் கதைகளை கற்றுக் கொடுத்தது. சமூகத்தின் பண்பாட்டை வீதிதோறும் எடுத்துரைத்தது. எளிமையான நடையாலும், பேச்சு வழக்கினாலும் கதைகளை புரியவைத்து மக்களை ரசிக்க வைத்தது. புராணங்களை கற்றுக் கொடுக்கும் ஆசானாக இக்கலைகள் விளங்கின.
கலைகள் உணர்த்தும் செய்தி : நமது நாட்டுப்புற கலைகள் நீதியை முன்னெடுத்துச் சென்றன. நீதி தவறிய பாண்டிய மன்னனை உலகிற்கு எடுத்துக் காட்டியது. அறத்தை வலியுறுத்தியது. விருந்தோம்பலை வீடுதோறும் கொண்டு சேர்த்தது. படிக்காத பாமரனுக்கும் சிலப்பதிகாரத்தையும், கந்தபுராணத்தையும் கற்றுக் கொடுத்தது. காதலையும், வீரத்தையும் சுட்டிக்காட்டியது. பொய்யே பேசாத அரிச்சந்திரனை ஊருக்கும், உலகிற்கும் எடுத்துக்காட்டி உண்மை பேச வலியுறுத்தியது.நாட்டுப்புற தெய்வங்களான மாரியம்மனை பற்றியும், காளியைப்பற்றியும், கொற்றவை பற்றியும், அய்யனார், கருப்பர், முனீஸ்வரன் போன்ற தெய்வங்களின் வரலாற்றினை கதைகள் மூலம் எடுத்துக் கூறி நின்றது.மக்களால் மதிக்கப்பட்ட இக்கலைகளில் ஒன்றான வில்லுப்பாட்டு முருகன், வள்ளி, தெய்வானை போன்றோரின் வாழ்க்கை வரலாற்றினை எடுத்து இயம்பியது. தோற்பார்வை கூத்து ராமாயணத்தில் உள்ள ராமனையும், சீதையையும் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சென்றது. தலையில் உள்ள கரகம் கீழே விழாமல் ஆடும் கரகாட்டம், விந்தைகளில் விந்தையாக உலக மக்களால் ரசிக்கப்பட்டது. பாமரப் பெண்கள் சொல்லும் கும்மிப் பாடல்கள் எதுகையும், மோனையும் தன்னகத்தே கொண்டிருக்கும். இப்பாடல்கள் குலதெய்வத்தையும், காவல் தெய்வத்தையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது.
நாடகம் : தெருக்கூத்துகளில் ஒன்றான நாடகம் தான் இன்றைய காலகட்டத்தில் தமிழகத்தின் சில மாவட்டங்களில் ஊர்த்திருவிழாவில், அத்தி பூத்தாற்போல காணப்படுகிறது. வள்ளி திருமணம், பவளக்கொடி, சத்தியவான் சாவித்திரி, அரிச்சந்திர புராணம், வீரபாண்டிய கட்டப்பொம்மன், மகமாயி போன்ற வரலாற்று புராண நாட கங்கள் மேடை நாடகங்களாக சில இடங்களில் காணப்படுகின்றன. பொய்சொல்லா உத்தமன் அரிச்சந்திரனின் வாழ்வினை மையப்படுத்தியும், வீரத்தில் சிறந்த கட்டபொம்மனின் கதையை உலகறியச் செய்தவை இந்நாடகங்களே.
காணாமல் போன கலைகள் : உண்மையையும், நீதியையும், தர்மத்தையும், நேர்மையையும், பலவித திறமைகளையும் தமிழ் பண்பாட்டையும், கலாசாரத்தையும் கட்டிக்காத்த நாட்டுப்புற ஆட்டக்கலைகள், இன்று இருந்த இடம் தெரியாமல் போய்க் கொண்டு இருக்கின்றன. கால மாற்றம், நவீன உலகம், சினிமாவின் தாக்கம், தொலைக்காட்சியின் வரவு போன்றவை இக்கலைகள் காணாமல் போக காரணமாக இருக்கலாம்.
நிகழ்ச்சிகள் இல்லை... போதிய வருமானம் இல்லை என்பதால் இக்கூத்துக் கலைஞர்களும் வேறு தொழில்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டு விட்டனர்.காணாமல் போன கலைகளை மீட்டெடுத்து கலைகளையும், கலைஞர் களையும், கதைக் கருவினையும் கட்டிக்காப்பது நமது கடமை. அப்பொழுது தான் அடுத்த தலைமுறைக்கு இதன் ஆழமும், அழகும் தெரியவரும். இல்லையெனில் ஏட்டில் மட்டும் தான் படித்துக் கொள்ள முடியும். இக்கலைகள் எப்படி இருக்கும் என்று கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. ஆடாதவரையும் ஆடவைக்கும், பாடாதவரையும் பாடவைக்கும் இக்கூத்துக்கள் தமிழரின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்தவை. இக்கலைகளை இன்று கேட்பதும் அரிது. அரிதாகிப் போன அரிதாரங்களை அரவணைப்பது, தமிழர்களின் இன்றைய கடமைகளில் ஒன்றாக இருக்கிறது. கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தமிழர் கலைகளை மீட்டெடுப்போம்; தமிழர் பண்பாட்டை பறை சாற்றுவோம்.
-மு.ஜெயமணி
உதவி பேராசிரியர், காரைக்குடி
84899 85231

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X