கடந்த கால கிலி கலெக்டர் கொடுத்த பலி!| Dinamalar

கடந்த கால கிலி கலெக்டர் கொடுத்த பலி!

Added : ஜூலை 26, 2016
Share
'கபாலி' காய்ச்சல், மித்ராவையும் பலமாக தாக்கியிருந்தது. ஞாயிறன்று எப்படியும் படத்தை பார்த்து விடும் தீர்மானத்துடன், சித்ராவுடன் காலையிலேயே டிக்கெட் வாங்க, தியேட்டரில் கியூவில் காத்திருக்கத் துவங்கி விட்டாள். 'கவுன்டர்' திறக்கும் முன்பே, இவர்களுக்கு முன் சுமார், 15 பேர் காத்திருந்தனர்.அப்போது தியேட்டர் அருகில் இருந்த மருத்துவமனைக்குள் ஆம்புலன்ஸ் அலறியபடி
கடந்த கால கிலி கலெக்டர் கொடுத்த பலி!

'கபாலி' காய்ச்சல், மித்ராவையும் பலமாக தாக்கியிருந்தது. ஞாயிறன்று எப்படியும் படத்தை பார்த்து விடும் தீர்மானத்துடன், சித்ராவுடன் காலையிலேயே டிக்கெட் வாங்க, தியேட்டரில் கியூவில் காத்திருக்கத் துவங்கி விட்டாள். 'கவுன்டர்' திறக்கும் முன்பே, இவர்களுக்கு முன் சுமார், 15 பேர் காத்திருந்தனர்.
அப்போது தியேட்டர் அருகில் இருந்த மருத்துவமனைக்குள் ஆம்புலன்ஸ் அலறியபடி வேகமாக நுழைந்தது. அதைக் கண்ட சித்ரா, ''ஞாயித்துக்கிழமை காலைல யாருக்கு என்னவோ... இப்பல்லாம் வசதி குறைஞ்சவங்க கூட, பிரைவேட் ஆஸ்பத்திரிக்கு போறததான் விரும்பறாங்க தெரியுமா மித்து,'' என்றாள்.
''சுத்தம்தான் காரணம்க்கா. கவர் மென்ட் ஆஸ்பத்திரியை கொஞ்சம் சுத்தமா வச்சிருந்தா, வசதியானவங்க கூட அங்கதான் போவாங்க,'' என்று பதிலளித்தாள் மித்ரா.
''உண்மைதான் மித்து... நம்ம ஜி.எச்.,சுல 100லிருந்து 150 சுகாதாரப் பணியாளர்கள்தான் வேலை பார்க்கறாங்க. ஆனா, 300, 400 பேர் வேலை பார்க்கறதா பொய் கணக்கு காண்பிச்சு, பெரியளவுல துட்டு அடிக்கறாங்களாம்... பொறுப்பானவங்க'' என்றாள் சித்ரா.
அதற்கு மித்ரா, ''இந்த பிரச்னை பற்றி ஏற்கனவே புகார் வந்த மாதிரி இருக்கே...'' என்றாள்.
''நீ சொல்றது சரிதான்க்கா. இது வெளியே தெரிஞ்சதால, கொஞ்ச நாள் அமைதியா இருந்தாங்க. இப்ப மறுபடியும் வேலைய ஆரம்பிச்சுட்டாங்க,'' என்றாள் மித்ரா.
''ஆடுன காலும், பாடுன வாயும் சும்மா இருக்காதுன்னு, என் பிரண்ட் உமா சொல்லுவா,'' என்றாள் சித்ரா.
அப்போது ஒரு பார்ச்சூனர் வாகனத்தில் ஒரு பேமிலி வந்திறங்கியது.
''செமயா இருக்குல்ல இந்த பார்ச்சூனர் வண்டி?'' என்றாள் மித்ரா.
அதற்கு சித்ரா, ''ஸ்கார்ப்பியோவுல வந்துட்டிருந்த நம்ம ஏரியா கவுன்சிலர், இப்ப இந்த மாதிரி வண்டிலதான் வர்றார். எல்லாம் தண்ணி சப்ளைல வர்ற துட்டாம்,'' என்றாள்.
''தண்ணியிலயா... கொஞ்சம் வெவரமாதான் சொல்லேன்க்கா,'' என்றாள் மித்ரா.
''யார் குடிநீர் கனெக்ஷன் கேட்டாலும் குடுத்துர்றாராம். இதை தவிர, ஏரியால இருக்கற அந்த பெரிய ஆஸ்பத்திரிக்கும் லாரி, லாரியா தண்ணி சப்ளை பண்ணி பாக்கெட்டை நிரப்புறாராம். அதான் பார்ச்சூனர்ல வலம் வர்றார். அது மட்டுமா, ரெண்டு கோடி ரூபா செலவுல, பங்களா டைப் வீடு கட்டிட்டிருக்கார்னா பார்த்துக்கோ மித்து,'' என்று விரிவாக போட்டுடைத்தாள் சித்ரா.
அப்போது அந்த வழியாக சென்ற இளைஞரிடம், வரிசையில் நின்றிருந்த ஒருவர், 'டேய் செந்தில், நேத்துதான், 35 டிக்கெட் வாங்கிட்டுப் போனே, இப்ப மறுபடியும் வந்திருக்கே... என்ன பிளாக்குல விக்கிறயா?' என்றார்.
''என்கிட்டயும் ஒரு கவுன்சிலர் மேட்டர் இருக்குக்கா... இவரு காட்டுலயும் பணம் 'தண்ணியா' கொட்டுது,'' என்றாள் மித்ரா.
''ம்ம்...சொல்லு மித்து,'' என்றாள் சித்ரா.
''இவர் சரவணம்பட்டி ஏரியால இருக்கற, ஐ.டி., கம்பெனிங்க, காலேஜூகளுக்கு அத்திக்கடவு தண்ணிய ஓவரா திறந்து விட்டுர்றார். இங்கருந்து டிச்சுத் தண்ணி வெளிய போகவும், கார்ப்பரேஷன் செலவுலயே நீட்டா கட்டிக் குடுத்துருக்காரு. இதனால மனசு குளிர்ந்து போன அந்த காலேஜ் குரூப், 10 லட்சம் ரூபா நோட்டால, கவுன்சிலர குளிப்பாட்டிருச்சாம். இதைத் தவிர, தண்ணி திறந்து விடுறதுக்கு மாசா, மாசம் ஸ்பெஷல் கவனிப்பும் உண்டாம்,'' என்றாள் மித்ரா.
பேசிக் கொண்டிருக்கும்போதே, பக்கத்தில் நின்றிருந்த கல்லூரி மாணவர் ஒருவர், 'கபாலி' படத்துல முதல்ல அர்ஜூன் நடிக்கறதா இருந்துச்சாமே' என்று 'பொது அறிவை' வளர்த்துக் கொண்டிருந்தார்.
''ஜாயின்ட் டைரக்டரா பொறுப்பு எடுத்துக்கிட்ட பிறகு, ஒரே கெடுபிடியா இருக்காராம் ஆர்ட்ஸ் காலேஜ் லேடி அதிகாரி,'' என்று அடுத்த மேட்டருக்கு தாவினாள் சித்ரா.
''விவரமா சொல்லுக்கா,'' என்றாள் மித்ரா.
''இப்ப, மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனரா பொறுப்பு வகிக்கற அந்தம்மா, 'எனக்கு தெரியாம யாரும் பிரஸ்சுக்கு நியூஸ் குடுக்கக்கூடாது'ன்னு கண்டிஷன் போட்டுருக்காராம். ஆபீஸ்ல ஏகப்பட்ட கண்டிஷன் போடறதால, எல்லாரும் 'எப்படா புது ஜாயின்ட் டைரக்டர் வருவாரு'ன்னு காத்திட்டிருக்காங்களாம்,'' என்றாள் சித்ரா.
தியேட்டர் கவுன்டர் இன்னும் திறக்கப்படவில்லை. கூட்டம் மொய்த்ததால் போலீசார் வரிசையை ஒழுங்குப்படுத்தினர்.
''உனக்கு தெரியுமா மித்து, துடியலூர்ல கஞ்சா விற்பனை கொடிகட்டி பறக்க காரணமா இருந்த அந்த 'இன்ஸ்' மேல, நிறைய கம்பிளையின்ட் வந்ததால,
வடவள்ளிக்கு தூக்கியடிச்சாங்க. அங்க போயும் அவர் அடங்கல. பழைய கஞ்சா வியாபாரிங்கள எல்லாம் வடவள்ளிக்கு வர வெச்சுட்டாராம். இப்ப வடவள்ளில கஞ்சா சேல்ஸ் பட்டய கிளப்புதாம். இவர என்னதான் செய்றதுன்னு, டிபார்ட்மென்டுல குழம்புறாங்களாம்,'' என்றாள் சித்ரா.
அருகில் 'கபாலி' நாயகனின் படங்களை, 'அப்டேட்' செய்து கொண்டிருந்த அந்த கல்லூரி இளைஞர்கள், 'சந்திரமுகி படத்துல சரவணன் கேரக்டர் சூப்பர் இல்ல?' என பேசிக் கொண்டனர்.
''துடியலூர்னு சொன்னவுடனேதான் ஞாபகம் வருது. துடியலூர்ல லோக்கல்பாடி எலக்ஷன் சூடு பறக்குதாம். ஆனா, ஒரு குறிப்பிட்ட வார்ட கண்டா மட்டும், ஆளுங்கட்சிக்காரங்க தெறிச்சு ஓடறாங்களாம்,'' என்று பொலிட்டிக்கல் மேட்டருக்குள் நுழைந்தாள் மித்ரா.
''ஏன்...அப்படி என்ன பிரச்னை?'' ஆர்வமுடன் கேட்டாள் சித்ரா.
''அந்த வார்டு கவுன்சிலர் மேல ஏகப்பட்ட கம்ப்ளையின்ட். வார்டுல வேல எதுவும் நடக்கலயாம். வீட்டுல தண்ணி தொட்டி கட்டுனா கூட, நேர்ல வந்து 'கறந்துர்றாராம்'.
அந்த கட்சிக்காரங்களுக்கே இந்த நிலைமை ஏற்பட்டிருக்கு. ஜனங்கள்லாம் அதிருப்தில இருக்கறதால, அங்க போட்டி போட்டா கண்டிப்பா தோத்துருவோம்னு, எல்லாரும் 'ஜகா' வாங்கறாங்க,'' என்றாள் மித்ரா.
''அந்த கவுன்சிலரம்மா பத்தி, நானும் கேள்விப்பட்டேன். ஆத்தா மகமாயி...அன்னபூரணி...அந்த வார்டு ஜனங்கள நீதான் காப்பாத்தணும்,'' என்று தலைக்கு மேல் கையெடுத்து கும்பிட்டு, சிரித்த சித்ரா, ''என்கிட்ட ஒரு டி.எம்.கே.,மேட்டர் இருக்கு. சொல்லவா?'' எனக் கேட்டாள்.
''ம்ம்...எப்ப கவுன்டர் திறந்து, எப்ப படம் பார்க்கறதோ... சரி சொல்லுக்கா,'' என்றாள் மித்ரா.
''மேற்கு மண்டலத்துல, தி.மு.க., தோல்விக்கான காரணத்த பத்தி, விசாரிக்க தளபதியாரு, கடந்த வாரம் வந்தாருல்ல... திருப்பூர்ல விசாரணைய முடிச்சிட்டு, லீ மெரிடியன்ல, கோவை மாவட்ட கட்சி நிர்வாகிகள சந்திச்சு விளக்கம் கேட்டிருக்காரு. தோல்விக்கு, பணம்தான் காரணம்னு, உடன் பிறப்புகள்லாம் சொல்லியிருக்காங்க,'' என்றாள் சித்ரா.
இடைமறித்த மித்ரா, ''அதான் தெரிஞ்ச கதையாச்சே...புதுசா ஏதாவது சொல்லு,'' என்றாள்.
''முழுசா கேளு...தி.மு.க.,வுல தேர்தல் செலவுக்கு கட்சி கொடுத்த பணத்தையும், வசூல் பண்ணுன பணத்தையும் செலவழிக்காம, அப்படியே சுருட்டுனதுதான் காரணம்னு சொன்னாங்களாம். வரிசையா விசாரிச்ச தளபதி, 'எம்.எல்.ஏ.,வை வரச்சொல்லுங்க'ன்னாராம்.
''இதை முதல்லயே தெரிஞ்சிக்கிட்ட அவரு, அங்கிருந்து 'எஸ்கேப்' ஆயிட்டாராம். அப்போ கம்ப்ளையின்ட்ல உண்மையிருக்குன்னு தானே அர்த்தம்னு, உடன் பிறப்புக்கள்லாம் பேசிக்கிட்டாங்களாம்,'' என்றாள் சித்ரா.
''அதுல உண்மை இருக்கோ இல்லையோ, தன்னோட புது பங்களா பின்னால இருக்கற காவல் தெய்வத்துக்கு, உண்மையான சக்தி இருக்குன்னு நம்புறாராம் நம்ம புது கலெக்டர்,'' என்றாள் மித்ரா.
''ம்ம்...மேல சொல்லு,'' என்றாள் சித்ரா.
''ரேஸ்கோர்ஸ்ல இருக்கற அவரு பங்களா பின்னால உள்ள, வேப்பமரத்தடில காவல் தெய்வம் ஒண்ணு இருக்கு. தினமும் மத்தியானம் அங்க பூஜை நடக்கும். பப்ளிக்குக்கு பர்மிஷன் இல்லை. இந்த கலெக்டர் உட்பட, ஒருத்தர் கூட இந்த காவல் தெய்வத்தை ஒதுக்குனதில்லை,''.
''கடவுள் நம்பிக்கை உள்ள புது கலெக்டரும், காவல் தெய்வத்துக்கு, போன வாரம் ஆடுகளை பலி போட்டு, நேர்த்திக்கடன் செலுத்தியிருக்காரு. அங்கேயே பிரியாணி சமைச்சு, நெருக்கமான அதிகாரிங்க, வி.ஐ.பி.,களை கூப்பிட்டு, விருந்து போட்டு அசத்தியிருக்கார்,'' என்று முடித்தாள் மித்ரா.
''போனவாட்டி வெறும், 17 நாள்ல இங்கிருந்து அனுப்பிட்டாங்க. இந்த தடவையாச்சும் முழு பதவிக்காலத்தையும் இங்க கழிக்கணும்ங்கறதுதான், கலெக்டரோட வேண்டுதலா இருக்கலாம்,'' என்றாள் சித்ரா.
- அப்போது டிக்கெட் கவுன்டரை திறந்து விட்டனர். 'கபாலியை' காணும் ஆர்வத்தில் சித்ராவும், மித்ராவும் வேகமாக கியூவில் நகர ஆரம்பித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X