சென்னை: ''கடன் வாங்குவதில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. ஒவ்வொரு தமிழரின் தலையிலும், 28 ஆயிரத்து, 798 ரூபாய் கடன் சுமையை, அ.தி.மு.க., அரசு ஏற்றி உள்ளது,'' என, தி.மு.க., உறுப்பினர் சக்கரபாணி குற்றம் சாட்டினார்.
சட்டசபையில், பட்ஜெட் மீதான விவாதத்தில், அவர் பேசியதாவது: அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற, 2011 - 12ல், அரசின் கடன், 1 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. தற்போது, 2.52 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களின் கடனை சேர்த்தால், இன்னும் அதிகரிக்கும். வரி வருவாய் குறைந்து வருகிறது. வணிக வரி வசூல் இலக்கு, 66 ஆயிரம் கோடியிலிருந்து, 10 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்துள்ளது. வருவாய் குறைவால், நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வருவாய் பற்றாக்குறையும் அதிகரித்துள்ளது.
கடந்த, 2010 - 11ல், மிக அதிக கடன் வாங்கிய மாநிலங்களில், மஹாராஷ்டிரா முதலிடத்தில் இருந்தது. தமிழகம், ஆறாவது இடத்தில் இருந்தது. ஐந்து ஆண்டுகளில், 1.45 லட்சம் கோடி ரூபாய் கடன் அதிகரித்துள்ளது. வேகமாக கடன் வாங்கியதன் மூலம், தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது. தமிழர்கள் ஒவ்வொருவருக்கும், 28 ஆயிரத்து, 798 கோடி ரூபாய் கடன் சுமை உள்ளது. இவ்வாறு சக்கரபாணி பேசினார்.
இதற்கு பதில் அளித்து, அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியதாவது: அரசின் வரி வசூல் கூடியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், வரி வசூல் இலக்கு, 15 சதவீதம் அதிகரிக்கப்படுகிறது.
சராசரி வரி வசூல் குறைவதில்லை. 2013 - 14ல் வரி வசூல், 73 ஆயிரத்து, 718 கோடி ரூபாய்; 2014 - 15ல், 78 ஆயிரத்து, 656 கோடி ரூபாய்; 2015 - 16ல், 80 ஆயிரத்து, 476 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு பன்னீர்செல்வம் தெரிவித்தார்.