கம்பனுக்கு வாய்த்த 'கம்பன் அடிப்பொடி'| Dinamalar

கம்பனுக்கு வாய்த்த 'கம்பன் அடிப்பொடி'

Added : ஜூலை 28, 2016 | கருத்துகள் (2)
கம்பனுக்கு வாய்த்த 'கம்பன் அடிப்பொடி'

இலக்கிய ரசனையாளர், ஆராய்ச்சி திறனாளர், விஞ்ஞானத்தில் மெய்ஞானம் கண்ட மெய்யன்பர், தமிழ் மரபுக்காவலர், இவை எல்லாவற்றையும் விட “கம்பன் அடிப்பொடி” என மக்களால் அழைக்கப்பெற்றவர் சா.கணேசனார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செல்வவளம் மிக்க சாமிநாதன், நாச்சம்மை தம்பதியினருக்கு, புதல்வராக 1908 ஜூன் 6-ல் சா.கணேசன் பிறந்தார்.
அரசியல் வாழ்க்கை : முறையாக கல்வி கற்றது குறைவே. தானாகவே படித்து கல்வி அறிவை வளர்த்து கொண்டார். பர்மா சென்று வியாபார நுணுக்கங்களை தெரிந்து கொண்ட போதிலும், மனம் தேசிய இயக்கத்தின் பால் ஈர்க்கப்பெற்றது. காரைக்குடியில் ராய.சொக்கலிங்கம் போன்றோருடன் இணைந்து, அரசியல் பணியில் ஈடுபட்டார். 34 வயதில் 'ஆகஸ்ட் போராட்டத்தில்,' தன்னை அர்ப்பணித்து கொண்டார். 1942 ஆகஸ்ட் 9-ம் தேதி சா.கணேசன், தேவகோட்டை கோர்ட்டில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, போலீசார் சுட்டனர். அதில் சலவை தொழிலாளி ஒருவர் இறந்ததால், ஆத்திரம் கொண்ட போராட்டக்காரர்கள் சலவை தொழிலாளியின் துணி மூட்டையில் பெட்ரோலை ஊற்றி, தீயிட்டு கோர்ட்டுக்குள் எறிந்தனர். கோர்ட் பற்றி எறிந்தது. சா.கணேசன் மீது தேச துரோக வழக்கு பதியப்பட்டு, இரண்டு ஆண்டு சிறை, ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. விடுதலைக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார். மாகாண காங்கிரஸ் கமிட்டி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் உறுப்பினராக இருந்தார். 1962 முதல் 1967 வரை எம்.எல்.ஏ.,வாகவும், 1968 முதல் 1974 வரை மேலவை உறுப்பினராகவும் பணியாற்றினார். காந்திய நெறியில் மக்கள் பணி செய்து வந்தார். இவர், எப்போதும் சட்டை அணிந்ததில்லை. அதற்கு ஒரு வரலாறு உண்டு.கானாடுகாத்தானில் 1938-ல் விடுதலை போராட்ட கூட்டம் ஏற்பாடாகி இருந்தது. அதில், பங்கேற்க தீரர் சத்தியமூர்த்தி, டாக்டர் சுப்ராயன், பாரிஸ்டர் ஜோசப், என்.கிருஷ்ணமூர்த்தி போன்ற தலைவர்களுடன் சென்ற சா.கணேசனை போலீசார் தடுத்து நிறுத்தினர். மீறி சென்றால் சுட்டுவிடுவதாக மிரட்டினர். அப்போது, தன் சட்டையை கிழித்து நெஞ்சை திறந்து காட்டி 'சுடுங்கள்' என்று வீறு கொண்டு எழுந்தார். அது முதல் தன் வாழ்நாள் இறுதிவரை அவர் சட்டை அணிவதையே நிறுத்தி விட்டார். காந்தியை போல 4 முழம் கதர் வேட்டி, மேலில் ஒரு துண்டையுமே அணிந்து வந்தார். பிள்ளையார்பட்டி தல வரலாறு, நுாற்பவர்க்கு, ராஜராஜன், தமிழ் திருமணம் போன்ற நுால்களை எழுதியுள்ளார். கவிதை நுால்களையும் படைத்துள்ளார்.
தமிழ்த்தாய் கோயில் : உலகில் வேறு எங்கும், எம்மொழிக்கும் இல்லாத கோயிலை, மொழியின் பெயரால் தமிழ்த்தாய் கோயிலாக, தமிழக அரசின் ஆதரவோடு, கம்பன் மணிமண்டப வளாகத்தில் நிறுவினார். தமிழ்த்தாய், அகத்தியர், தொல்காப்பியர், கம்பன், திருவள்ளுவர், இளங்கோவடிகள், ஒலித்தாய், வரித்தாய் ஆகியோரின் சிலை வடிவங்களோடு, அறுகோண அமைப்பிலான, கல் திருப்பணி கோயிலாக இக்கோயில் விளங்குகிறது. தமிழ்த்தாயின் படிமத்தை கண்டு, அண்ணாத்துரை பாராட்டி, அதன் அச்சுப்படத்தை பெற்று, அதை கண்களில் ஒற்றி கசிந்து உள்ளம் நெகிழ்ந்தது வரலாற்று சிறப்பு.
கம்பன் கழகம் : இவரது மாபெரும் பணி 1939ல் காரைக்குடியில் கம்பன் கழகத்தை தோற்றுவித்ததே. கணேசனாருக்கு இந்த ஈடுபாடு ஏற்பட காரணமாக இருந்தது, காரைக்குடியில் ராமகிருஷ்ணன கல்வி சாலையில், மோகனுார் கோவிந்தராச அய்யங்காரின் கம்பராமாயண சொற்பொழிவாகும். வடபுலத்தின் கதையென கருதிப் புறந்தள்ளிய, ராம காவியத்தை தென்புலத்தின், ஒட்டு மொத்த தமிழினத்தின், எழுச்சி காவியம் மட்டுமல்ல, மானுட குலத்தின் மகத்தான வெற்றியை பாடும் காவியம், என்று காட்டிய பெருமை, இந்த காரைக்குடி கம்பன் கழகத்திற்கே உண்டு.இன்று, தமிழகத்தில் மட்டுமன்றி, உலக அளவில் பல்வேறு கம்பன் கழகங்கள் தோன்றிட காரணமாகிய தாய்க் கழகம், காரைக்குடி கம்பன் கழகம். இதன் துவக்க விழாவில் தலைமை ஏற்று பேசிய ரசிகமணி டி.கே.சி., “காரைக்குடியில் கம்பன் பணி தொடங்கி விட்டது. இனி அது உலகெங்கும் பரவிவிடும்” என்று கூறிய வாக்கு பலித்து விட்டது. - -கணேசனார் தமது ஆய்வில் கி.பி.886-ல் விசுவாச ஆண்டு, பங்குனி திங்கள் 4-ம் நாள் கம்பராமாயணம் அரங்கேற்றப்பட்டதை அறிந்தார். அந்த அடிப்படையில் பங்குனி மாதம், மகம், பூரம், உத்திர நட்சத்திர நாட்களில், காரைக்குடியில் மூன்று நாட்கள் விழாவாகவும், அஸ்தம் நட்சத்திரத்தில் கம்பன் சமாதி கொண்ட நாட்டரசன் கோட்டையில் கம்பன் திருநாளை கொண்டாடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார். கம்பன் திருநாளின் முதல் நாள் திருநாள் மங்கல பேரவையை, கம்பன் மலர் வணக்கத்துடன் தொடங்குவார். அதற்கெனவே 108 போற்றி தொடர்கள் அடங்கிய கவிமலரை இயற்றியிருக்கிறார். நாட்டரசன்கோட்டை கம்பன் அருட்கோயிலில் அஸ்த நாள் வழிபாடு நிகழ்த்துவதற்கென்று, கம்பராமாயண பாடல்கள் ஐந்திணை, “கம்பன் அருட்கவி ஐந்து” எனத் தேர்ந்தெடுத்து, அவற்றுக்கு திருவையாறு, தியாகராசர் சமாதியில் பாடும் பஞ்ச ரத்ன கீர்த்தனைக்குரிய, அதே ஐந்து கனராகங்களில், ஸ்வரம் அமைத்து பாட ஏற்பாடு செய்தார். இன்றும் இந்த நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
கம்பன் அடிப்பொடி : 1970-ல் நடந்த கம்பன் விழாவில், நீதிபதி எஸ்.மகராசன், சா.கணேசனுக்கு 'கம்பன் அடிப்பொடி' என்ற பட்டத்தை வழங்கினார்.
நேரந்தவறாமை : நேர்மை, நேரந்தவறாமை இரண்டும் அவருக்கு பக்க பலம். உரிய நேரத்தில் கம்பன் விழாவிற்கு அழைக்கப்பட்ட முக்கிய விருந்தினர்கள் மேடைக்கு வரவில்லை என்றால், அவர்கள் முதலமைச்சராக இருந்தாலும் காத்திருக்க மாட்டார். தாட்சண்யம் காட்டாமல் 'கம்பன் வாழ்க' என்று முழங்கி உரிய நேரத்தில் ஆரம்பித்து விடுவார். இதற்கு பயந்தே முக்கிய விருந்தினர்கள் உரிய நேரத்தில் மேடையேறி விடுவார்கள். அதே போல் எப்பேர்பட்ட பேச்சாளராயினும் ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் பேசி முடித்து விட வேண்டும். நேரம் காட்ட பேச்சு மேடையின் மீது சிவப்பு விளக்கு பொருத்தப்பட்டிருக்கும். விளக்கு எரியும்போது பேச்சை நிறுத்தியே தீர வேண்டும் என்பது கம்பன் கழக வாடிக்கை.கடை கோடி மக்களுக்கும், ராம காதையை கொண்டு சென்ற கம்பன் அடிப்பொடி சா.கணேசனார், 1982 ஜூலை 28-ல் மறைந்தாலும் நம்மோடு இன்றும் வாழ்கிறார், வழி நடத்துகிறார்.
-- எம்.பாலசுப்பிரமணியன்

காரைக்குடி. 94866 71830---

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X