அன்பின் கடலில் நதியாவோம்!| Dinamalar

அன்பின் கடலில் நதியாவோம்!

Updated : ஜூலை 29, 2016 | Added : ஜூலை 28, 2016 | கருத்துகள் (3)
 அன்பின் கடலில் நதியாவோம்!

உறவுகளின் உரசல்களில் இன்று பூமி புண்பட்டுப் போயிருக்கிறது. தந்தை சொல் மிக்கமந்திரமில்லை, தாயிற்சிறந்த கோவிலுமில்லை என்று புகழப்பட்ட பெற்றோர்-- பிள்ளைகள் உறவு தலைமுறை இடைவெளியால் இன்று தள்ளாடிக்கொண்டிருக்கிறது. எப்படி உறவுகளை உடையாமல் காப்பது? சினேகத்தோடு சில பரிந்துரைகள்..
வெளிப்படையாய் இருங்கள் :அடி நாக்கில் நஞ்சையும் நுனி நாக்கில் அமுதையும் வைத்துக்கொண்டு உறவுகளைப் பேணமுடியாது. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதாதிருங்கள். எல்லோரையும் அப்பாவியாய் நம்பிவிடுவதும் எல்லோரையும் எப்போதும் சந்தேகப்படுவதும் ஆபத்தானது என்று உணருங்கள்.
எடை போடும் இயந்திரமா நாம்? அத்திப்பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழுக்களாகத்தான் இருக்கும். அதனால் யாரையும் துப்பறிய நினைக்காதீர்கள், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைத் தரம்குறைய விமர்சிக்காதீர்கள், காரணம் எடை போடும் இயந்திரங்கள் அல்ல நாம். முழுமையான மனிதர்கள் என்று இந்த உலகில் யாரும் கிடையாது. ஒவ்வொருவரின் குறையையும் கருத்தில்கொண்டு பழகத்தொடங்கினால் யாரிடமும் நட்பு பாராட்ட முடியாது. எனவே ஜாதி மத இன பேதங்கள் இன்றி அனைவரிடமும் இயல்பாகப் பழகுங்கள்.கணவன் மனைவியின் நடத்தையைச் சந்தேகப்படுவதும், மனைவி கணவனைக் குறைத்துப்பேசுவதும் பெரும்விரிசலை உருவாக்கிவிடும்.
குடும்பமானாலும் அலுவலகமானாலும் 'நானே பெரியவன்' என்ற தன்முனைப்பு நம்மைத் துன்பத்தில் ஆழ்த்திவிடும். அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக்கட்டி மூன்று வேண்டும். நீங்கள் மற்றவர் துணையின்றித் தனியாக எதையும் சாதித்துவிட முடியாது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். எப்போதும் உங்களைப்பற்றியே உயர்வாகப் பேசிக்கொண்டே இருக்காமலும், மற்றவர்களைத் துச்சமாகக் கருதாமலும் அவர்கள் சொல்வதையும் பொறுமையாகக் காதுகொடுத்துக் கேளுங்கள். எல்லாப் பிரச்னைகளும் தீர்க்கக்கூடியதே என்று உணருங்கள். அவராக நீங்கள் மாறி அவர்கள் கோணத்தில் பிரச்னைகளைப் பார்த்து அவர்கள் தரப்பு நியாயத்தைப் புரிந்துகொள்ள முயலுங்கள்.
இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது :நாம் செய்வது தவறு என்று யாரேனும் சுட்டிக்காட்டினால், எடுத்த எடுப்பில் அதை நியாயப்படுத்த முயலாமல், பொறுமையாக அவர்கள் சொன்ன கருத்தை யோசித்துப் பாருங்கள். நாம் செய்வது தவறு என்று நம் மனம் சொன்னால் அதை உடன் திருத்திக்கொள்ள முயலுங்கள். பெரியவர்கள் சொல்வதை எடுத்தெறிந்து பேசிவிட்டு, இறுதியில் பெருஞ்சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிப்பதைவிடப் பொறுமையாக அவர்கள் சொல்வதைக் கேளுங்கள், வாழ்க்கை வசப்படும்.
இறைக்க இறைக்க ஊறும் மணற்கேணி; அதைபோல் அன்பு சுரக்கசுரக்க பலப்படும் மனிதஉறவுகள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். நமக்கு ஏதாவது காரியம் நடக்கவேண்டும் என்பதற்காக மட்டும் அடுத்தவர்களைத் தொடர்பு கொள்ளாமல், எப்போதும் அனைவரிடமும் தொடர்பில் இருங்கள். நம் உறவினர்கள், நண்பர்கள், உடன்பணிபுரிவோர், குடும்ப உறுப்பினர்கள் பெயர்களை, அவர்களின் பிறந்தநாள், மணநாள் ஆகியவற்றை உங்கள் அலைபேசியின் நினைவூட்டல் பகுதியில் சேமித்து வைத்துக்கொண்டு அந்த நாட்கள் வரும்போது செய்தியனுப்பாமல் நேரில் சந்தித்து வாழ்த்துங்கள். வாழ்த்தும்போதுதான் நாம் வளர்கிறோம். நா காக்க எப்போதும் நல்ல சொற்களையே பயன்படுத்துங்கள். ஒருவரைப்பற்றி மற்றவர்களிடம் எதிர்மறையாகப் பேசாதீர்கள். நாம் பேசும் பயனற்ற பேச்சுதான் நம் அமைதியைக் குலைக்கும் கொடுமையான ஆயுதம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.வாழ்க்கை, போராட்டங்கள் நிறைந்த பூந்தோட்டமே என்பதை உணருங்கள். சங்கடங்களை, சவால்களைச் சந்தோஷமாய் எதிர்கொள்ளுங்கள்.நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று நொந்துகொள்ளவேண்டாம், எல்லோருக்கும் நடந்தது தான் நமக்கும் நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
தீதும் நன்றும் பிறர்தர வாரா! என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். எனவே நடந்த தவறுகளைப் பழிபோட மனிதர்களைத் தேடாதீர்கள். தெரியும் என்றால் பெற்றுக்கொள்வதும் தெரியாதாதென்றால் கற்றுக்கொள்வதும் நம் இயல்பாக இருக்கட்டும்.அடுத்தவர்களுக்கு நியாயமாய் கிடைக்கவேண்டியதை அநியாயமாய் தட்டிப்பறித்தால் நமக்குக் கிடைக்கவேண்டியது கிடைக்காமல் போகும் என்று புரிந்துகொள்ளுங்கள். இறைவன் கொடுப்பதை யாராலும் தடுக்கமுடியாது. அவன் தடுப்பதை யாராலும் கொடுக்க முடியாது என்று உணருங்கள்.
மனம் திறந்து பேசுங்கள் :ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் மறுபேச்சு என்று இல்லாமல் எல்லோரிடமும் மனம்விட்டுப்பேசுங்கள். கடுங்காற்று மழையைக் கெடுக்கும், கடுஞ்சொல் உறவைக் கெடுக்கும். எனவே கண்டதை எல்லாம் எதிரே கண்டவர்களிடம் சொல்லிக்கொண்டே இருக்காமல் இனிமையாகப் பேசுங்கள். உங்கள் புன்முறுவல் பலரது புண்களை ஆற்றும் அருமருந்து என்பதைப் புரிந்துகொண்டு முகமலர்ச்சியோடு சக மனிதர்களோடு நன்றாகப் பழகுங்கள்.
பரந்த மனம் :முன்முடிவுகளோடு எதையும் அணுகாதீர்கள். காமாலைக்காரனுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் என்பதைப்போல் நம் பார்வையே எல்லாவற்றுக்கும் காரணமாய் அமைகிறது. குறுகிய சுயநல எண்ணங்கள் நம்மை வீழ்த்திவிடும். பாரம் சுமக்கிறவனுக்குத்தான் அதன் பாடுதெரியும், எனவே பரந்த மனதோடும் திறந்த இதயத்தோடும் சக மனிதர்களின் துயரங்களையும் அவர்களின் பாடுகளையும் எதிர்கொள்ளுங்கள்.
எல்லோரையும் திருத்தி விடலாம் என்ற நினைப்பு நம்மை வருத்திவிடலாம். நல்லோர் நட்பு நன்மையே தரும். தீயோர் நட்பு நம்மையும் தீயுக்குள் இறக்கிவிடும்.எனவே நட்பு கொள்வதில் நாம் செலுத்தும் கவனம் உறவுகள் சிதையாமல் நம்மைக் காக்கும்.\அன்பு செலுத்துங்கள் :அன்பு அரூப வரம், அன்பு ஒரு பெருங்கருணை,அன்பு ஓர் அழகிய தவம், அன்பு சிவம், அன்பு ஒரு கொண்டாட்டம். கணவன் மனைவி, குழந்தைகள் பெற்றோர், ஆசிரியர் மாணவர்,மாமியார்- மருமகள், மாமனார் -மருமகன் என்று பேதமில்லாமல் அனைவரும் அன்பின் கடலில் நதிகளாய் கலக்கலாம். அன்பில் அன்பைத் தவிர ஏதுமில்லை. அன்பில் பேதமில்லை. இவருக்கு நாம் உதவினால் இவர் இப்படி மாற்றுதவி செய்வார் என்று நாம் செலுத்துவதற்குப் பெயர் அன்பு இல்லை, அது நாகரிக வணிகம். எனவே எல்லோர் மீதும் எதிர்பாராமல் அன்பு செலுத்துங்கள். 'அன்பிற் சிறந்த தவமில்லை' என்கிறான் மகாகவி பாரதி.
ஆகவே நண்பர்களே...உலகம் மிகப் பெரிய உறவுக்கூடம். அதில் வாழ நமக்குக் கிடைத்ததோ நற்பேறு. சிட்டுக்குருவிகள் கூட நமக்குச் சின்ன உறவினர்களே. கரையும் காகத்திற்கும் கத்திஅழைத்து உணவிட்ட சமுதாயம் நம் சமுதாயம். உறவுகள் இறைவன் எழுதிய உயிர்க் கவிதைகள். உறவுகள் காட்டி குழந்தைகளை வளர்ப்போம். விட்டுக்கொடுப்பவர்கள் என்றும் கெட்டுப்போவதில்லை. கெட்டுப்போனவர்களின் தோல்வி விட்டுக் கொடுக்காததால் வந்தது. ஒரு சிறுபுன்னகை நம் அலுவலக நண்பரின் நெடுநாள் பகையை நீக்கும். ஒரு சிறு ஆறுதல் சொல் நம் பலநாள் சண்டையை முடிவுக்குக் கொண்டுவரும். ஒரு சிறு சினேகக் கைகுலுக்கல் நடைபெறவிருந்த பெரிய போரை நிறுத்தும். மாதத்தில் ஒரு நாள் ஆதரவற்றோர் இல்லம் செல்வோம்..உறவாய் நாங்கள் உடன் இருக்கிறோம் எனக் கரம்பற்றி உணர்த்துவோம். ஆம்! பிரார்த்தனை செய்யக் கூடிய உதடுகளைவிடச் சேவை செய்யும் கரங்கள் உன்னதமானவை. உறவெனும் சிறகு பூட்டி பறப்போம் வாழ்வெனும் வானில்.- பேராசிரியர் சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி. 99521 40275

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X