சென்னை:''புதிய வருவாய் வழிமுறைகள் தெரியாமல், தமிழக அரசு தொடர்ந்து பற்றாக்குறை பட்ஜெட் தயாரித்து, கடனில் திண்டாடி வருகிறது,'' என, சட்டசபையில் தி.மு.க., குற்றஞ் சாட்டியது.
திண்டாட்டம்:சட்டசபையில் நேற்று, எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் பேசியதாவது: இந்த அரசு, வருவாயை பெருக்கும் வழிமுறைகள் தெரியாமல், கடனில் சிக்கி திண்டாடி வருகிறது. 2014 - 15ல், 27,350 கோடி ரூபாயாக இருந்த வருவாய் பற்றாக்குறை, 31,870 கோடி ரூபாயாக அதிகரித்து, இந்த நிதியாண்டில், 40 ஆயிரம் கோடி ரூபாயை கடந்துள்ளது.
பற்றாக்குறை பட்ஜெட் தவறானதல்ல. நல்ல திட்டங்களுக்கு செலவிடுவதால் ஏற்படும் பற்றாக்குறை பட்ஜெட்டை, நல்ல பட்ஜெட் இல்லை என, சொல்ல முடியாது. ஆனால், அதை ஈடுகட்ட வருவாயை பெருக்கும் வழிமுறைகளை அரசு கண்டறிய வேண்டும். உ.பி.,யில், 37,750 கோடி ரூபாயாக இருந்த பற்றாக்குறையும், மஹாராஷ்டிராவில், 14,150 கோடியாக இருந்த பற்றாக்குறையும், அதற்கு அடுத்த ஆண்டுகளில் குறைக்கப்பட்டு உள்ளது.
பற்றாக்குறை:ஆனால், தமிழகத்தில் வருவாய் ஈட்டுவதற்கான வழிமுறை தெரியாததால், தொடர்ந்து பற்றாக்குறை பட்ஜெட் போடப்பட்டு வருகிறது. அவர்கள் செய்ததை, தமிழகத்தால் ஏன் செய்ய முடியவில்லை? இவ்வாறு அவர் பேசினார்.