புதுடில்லி:'அரசுக்கு எதிராக விமர்சனம் செய்பவர்களை அரசியல் ரீதியாக பழிவாங்கும் ஆயுதமாக, அவதுாறு சட்டத்தை பயன்படுத்தக் கூடாது' என, தமிழக அரசை சுப்ரீம் கோர்ட் கண்டித்துஉள்ளது.
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தொடர்ந்த வழக்கில், இவ்வாறு கூறியுள்ள சுப்ரீம் கோர்ட், இதுவரை தொடரப்பட்டுள்ள அவதுாறு வழக்குகளின் பட்டியலை, இரண்டு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் செயல்பாடு குறித்தும், முதல்வர் ஜெயலலிதா குறித்தும், 2015 நவம்பர், 6ல், விமர்சனம் செய்து பேசியதாக, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா மீது, திருப்பூர் மாவட்ட அரசு வழக்கறிஞர் அவதுாறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் ஆஜராகாததால், விஜய காந்த் மற்றும் பிரேமலதாவுக்கு எதிராக, ஜாமினில் வெளிவர முடியாத கைது வாரன்டை, திருப்பூர் கோர்ட் பிறப்பித்துள்ளது; இதை எதிர்த்து, இருவர் சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தீபக் மிஸ்ரா, ஆர்.எப்.நரிமன் ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு, திருப்பூர் கோர்ட்
உத்தரவுக்கு தடை விதித்து, நேற்று பிறப்பித்த உத்தரவு:
ஊழல் அரசு அல்லது செயல்படாத அரசு என ஒருவர் கூறியதால், அவர் மீது அவதுாறு வழக்கை தொடர முடியாது.
விமர்சனங்களுக்கு எதிரான சகிப்புத்தன்மை வேண்டும். கருத்து தெரிவித்த
உடனேயே, அரசியல் ரீதியில் பழிவாங்குவதற்காக, அவர்கள் மீது அவதுாறு வழக்கை
தொடரக் கூடாது.
அரசு குறித்தோ, அதிகாரிகள் குறித்தோ விமர்சனம் செய்பவர்கள் மீது வழக்கு தொடர்வது, அரசுக்குஎதிரான வெறுப்புணர்வையே ஏற்படுத்தும். எதிர்ப்பு கருத்து தெரிவிப்பவர்களின் குரல்வளையை நெரிக்கும் வகையில், அவதுாறு சட்டத்தை தவறாகப் பயன்படுத்தக் கூடாது; அவ்வாறு பயன்படுத்தினால், தொடர்ந்து ஒருவருக்கு எதிராக அதிக அளவில் அவதுாறு வழக்கு பதிவு செய்தால், கோர்ட் தலையிட வேண்டிய நிலை உருவாகும்.
அவதுாறு சட்டத்தை தமிழக அரசு தவறாகப் பயன்படுத்தக் கூடாது. தமிழகத்தில், பல்வேறு தனிநபர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் மீது தொடரப்பட்டுள்ள அவதுாறு வழக்குகள் குறித்த பட்டியலை, இரண்டு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
விஜயகாந்த் மகிழ்ச்சி:
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், நேற்று வெளியிட்ட அறிக்கை:'பழிவாங்கும் ஆயுதமாக அவதுாறு வழக்குக்கான, சட்டப் பிரிவை பயன்படுத்தக் கூடாது' என, தமிழக அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியதோடு, பிடிவாரன்ட் உத்தரவுக்கும் இடைக்கால தடை
விதிக்கப்பட்டுள்ளது. 'அரசின் தவறுகளை விமர்சிப்பது எப்படிஅவதுாறாகும்?' எனவும் நீதிபதிகள் கேட்டுள்ளனர். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அவதுாறு சட்டம் தொடரும்:
அவதுாறு வழக்குகள் குறித்த, ஐ.பி.சி., எனப்படும், இந்திய தண்டனைச் சட்டத்தின், 499 மற்றும், 500வது பிரிவை எதிர்த்து, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
அந்த வழக்கில் தீர்ப்பு அளித்த போது, 'இந்தச் சட்டப் பிரிவுகளை நீக்க முடியாது' என, நீதிபதி தீபக் மிஸ்ரா கூறியிருந்தார். தற்போது தொடர்ந்துள்ள வழக்கில், 'இந்தப் பிரிவை நீக்க வேண்டும்' என, விஜயகாந்த் தரப்பில் கூறப்பட்டது.நேற்று அளித்த உத்தரவின்போது, நீதிபதி தீபக் மிஸ்ரா கூறியதாவது:
அவதுாறு சட்டப் பிரிவுகளை நீக்க முடியாது. பேச்சுரிமை என்பது முழுமையான உரிமை கிடையாது. அதற்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன. பேச்சுரிமை உள்ளது என்பதற்காக, எதையும் பேசலாம் என்பதை கட்டுப்படுத்த, அவதுாறு சட்டம் தேவை. அதே நேரத்தில் அவதுாறு சட்டத்தை தவறாகப் பயன்படுத்தக் கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.அவதுாறு சட்டம் தொடர்பாக, ஏற்கனவே தொடரப்பட்ட ஒரு வழக்கில், நீதிபதி ஆர்.எப்.நரிமன், இணையதளத்தில் ஆட்சேபகரமான பதிவுகளை வெளியிடு வோரை, அவதுாறு வழக்கில் கைது செய்வதற்கு தடை விதித்து, தீர்ப்பு அளித்தார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (61)
Reply
Reply
Reply