புதுடில்லி:அரசின் நலத் திட்ட உதவிகள்,ஒருவருக்கு ஆதார் எண் இல்லை என்பதற்காக மறுக்கப்பட மாட்டாது என்று மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
ஆதார் எண் இல்லை என்பதை காரணம்காட்டி, அரசின் நலத்திட்ட உதவிகள் மக்களுக்கு மறுக்கப்பட்டு வருவதாகக் கூறி, ராஜ்யசபா எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதற்கு மறுப்பு தெரிவித்து, அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியதாவது:நாடு முழுவதும் இதுவரை 103 கோடி பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டையைப் பெறாதவர்களின் பெயர்கள் தனியாகப் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஆதார் எண் அளிக்கப்படும் வரை, மானியங்கள் உள்ளிட்ட அரசின் நலத் திட்ட உதவிகள் மாற்று வழிகளில் வழங்கப்படும்.
ஆதார் அட்டை மூலம் ஊழல் ஒழிக்கப்படும். அத்துடன், அரசு அளித்துவரும் மானியத் தொகைகள், பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகச் செலுத்தப்படும் என்றார்.