பாட்னா:பீஹார் மாநிலத்தில் மது விலக்கு அமல் சட்டத்தில், முதல்வர் நிதிஷ் குமார் அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்.
அதன்படி, ஒரு வீட்டில் மது இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அந்த வீட்டில் உள்ள, ௧௮ வயது நிரம்பிய அனைவரையும் சிறையில் தள்ள முடியும்.பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரீய ஜனதா தள கூட்டணி ஆட்சி நடக்கிறது.
அங்கு, கடந்த ஆண்டு சட்ட சபை தேர்தல் நடந்த போது, 'ஆட்சிக்கு வந்தால் மது விலக்கு அமல்படுத்தப்படும்' என, நிதிஷ் குமார் வாக்குறுதி அளித்தார்; அதன்படி, ஏப்ரலில் மது விலக்கு அமல்படுத்தப்பட்டது.
எனினும், வெளிநாட்டு மதுபானங்கள் மற்றும் கள் விற்பனை தொடர்ந்தது. இதுகுறித்த விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து, முழுமையான மது விலக்கு அமல்படுத்தப்பட்டது. எனினும், ஆளுங்கட்சி அரசியல் பிரமுகர்கள் உட்பட பலர், மதுபானம் குடித்தபோதும், பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தபோதும் பிடிபட்டனர். இதையடுத்து, மது விலக்கு அமல் சட்டத்தில் புதிய விதிமுறைகளை கொண்டு வர, பீஹார் அரசு முடிவு செய்துள்ளது;
அதன்படி, ஒருவர், தன் வீட்டில் மதுபானத்தை தயாரித்தாலோ, வைத்திருந்தாலோ, பயன்படுத்தினாலோ, அவரது வீட்டில் உள்ள, 18 வயது நிரம்பிய அனைவரையும் சிறையில் தள்ள முடியும்.
இந்த மசோதாவிற்கு, பீஹார் மாநில அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. பீஹாரில் நாளை துவங்கும், சட்டசபை கூட்டத்தொடரில், மசோதா கொண்டு வரப்பட உள்ளது. சட்டசபையில் மசோதா
நிறைவேறினால், இந்த அதிரடி சட்டம் அமலுக்கு வரும்.
இந்த சட்டம் மிகக் கடுமையாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. 'இதில் உள்ள, பல அம்சங்களை நீக்க வேண்டும்' என, பா.ஜ., மற்றும் ஐக்கிய ஜனதா தளத்தின்
கூட்டணி கட்சியான லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகள்
வலியுறுத்தியுள்ளன.
சட்டத்தில் இருப்பது என்ன?
* ஒரு அலுவலகம் அல்லது நிறுவனத்தில் ஊழியர் மதுபானம் குடித்திருப்பதுஉறுதியானால், அதன் உயரதிகாரி அல்லது தலைவரே பொறுப்பு ஏற்க வேண்டும்
* தனி நபர் ஒருவர், வீட்டில் வைத்து மது அருந்தினால், அவரது வீட்டில் உள்ள, 18 வயது நிரம்பிய அனைவரும் பொறுப்பு; அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்
* மாவட்டம் முழுவதும், மது விலக்கை அமல்படுத்துவதற்கு, கலெக்டரே பொறுப்பு; எஸ்.பி.,
அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும்
* மது அருந்தியது உறுதி செய்யப்பட்டால், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் முதல், ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படும்
* ஒரு லட்சம் முதல், 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்
* இந்த சட்டத்தில் யாருக்கும் விதி விலக்கு கிடையாது.
பா.ஜ., கடும் எதிர்ப்பு:
பீஹார் மாநில, பா.ஜ., மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி கூறியதாவது: மதுபானத்தை தயாரித்தாலோ, வைத்திருந்தாலோ, பயன்படுத்தினாலோ, அவரது வீட்டில் உள்ள, 18 வயது நிரம்பிய அனைவரையும் சிறையில் அடைக்கும் முடிவு அபத்தமானது.
சட்டத்தை கடுமையாக்குகிறோம் என்ற பெயரில், முதல்வர் நிதிஷ் குமார், நடைமுறைக்கு சாத்தியமில்லாதவற்றை செய்கிறார். இந்த சட்டம், அரசியல் எதிரிகளை பழிவாங்கவே பயன்படும். இவ்வாறு அவர்கூறியுள்ளார்.
நடைமுறைக்கு சாத்தியமா?:பீஹார் அரசின் புதிய மது
விலக்கு சட்டம், பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. 'இந்த சட்டத்தை எப்படி
நடைமுறைபடுத்துவது' என, அம்மாநில அதிகாரிகளே குழம்பியுள்ளனர்.
இதுகுறித்து
அவர்கள் கூறியதாவது:: ஒருவரது வீட்டில் மது வைத்திருப்பது உறுதி செய்யப்
பட்டால், அவரது வீட்டில் உள்ள, 18 வயது நிரம்பிய அனைவருக்கும் சிறை தண்டனை
என சட்டம் கூறுகிறது. ஒருவர் குடிப்பதை, குடும்பத்தில் உள்ளவர்கள்
கண்டுபிடிப்பது எப்படி?
பீஹாரில், பல வீடுகளில் கூட்டுக் குடும்பங்கள் உள்ளன. குடும்பம் என்பதன் வரையறை என்ன? வீட்டில் யாருக்கும் தெரியாமல் ஒருவர் குடித்து விட்டால், அதற்காக வீட்டில் உள்ள பலரும் தண்டனை அனுபவிக்க வேண்டுமா?
வீட்டில், 18 வயது நிரம்பிய அனைவரும் கைது செய்யப்பட்டால், வீட்டில் உள்ள குழந்தைகள் என்ன செய்வர்? அவர்களின் உணவு மற்றும் பாதுகாப்பிற்கு என்ன செய்வது? இவ்வாறு அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சிக்கிய அரசியல்வாதிகள்:
* பீஹாரில் ஆளுங்கட்சியான ஐக்கிய ஜனதா தள சட்ட மேல்சபை உறுப்பினர், மனோரமா தேவி, வீட்டில் வெளிநாட்டு மதுபானங்கள் வைத்திருந்ததாக கைதானார்
* ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ., ஷியாம் பகதுார் சிங், மது அருந்தி விட்டு, நடன மங்கையுடன் நடனம் ஆடிய, 'வீடியோ' காட்சி வெளியானது
* காங்கிரஸ் எம்.எல்.ஏ., வினய் வர்மா, மது குடித்து, மற்றவர்களுக்கும் மதுவை கொடுக்கும் வீடியோ காட்சி பரபரப்பை ஏற்படுத்தியது.
முழுமையான மது விலக்கை கடுமையாக அமல்படுத்த முடிவு செய்துள்ளோம். எனவே, வலிமையான சட்டம் தேவை. இந்த மசோதா, அனைத்து கட்சிகளின் ஒருமித்த ஆதரவுடன் சட்டசபையில் நிறைவேற்றப்படும் என, எதிர்பார்க்கிறேன். நிதிஷ் குமார், பீஹார் முதல்வர்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (28)
Reply
Reply
Reply