ஓட்டளிப்பதிலிருந்து விலகுவது ஏற்புடையதன்று!

Added : ஜூலை 31, 2016 | கருத்துகள் (1) | |
Advertisement
சட்டசபை தேர்தல் முடிந்த கையோடு, உள்ளாட்சி தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் இறங்கிஉள்ளன. சட்டசபை தேர்தலின் போது அமைக்கப்பட்ட கூட்டணி, உள்ளாட்சி தேர்தலிலும் தொடருமா, தொடராதா, சட்டசபை தேர்தல் முடிவுகளின் தாக்கம், உள்ளாட்சி தேர்தலிலும் தெரியுமா என, தொண்டர்கள் கணிக்க துவங்கி விட்டனர். வரும் உள்ளாட்சி தேர்தலில், பெண்களுக்கு, 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்பதால்,
 ஓட்டளிப்பதிலிருந்து விலகுவது ஏற்புடையதன்று!


சட்டசபை தேர்தல் முடிந்த கையோடு, உள்ளாட்சி தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் இறங்கிஉள்ளன. சட்டசபை தேர்தலின் போது அமைக்கப்பட்ட கூட்டணி, உள்ளாட்சி தேர்தலிலும் தொடருமா, தொடராதா, சட்டசபை தேர்தல் முடிவுகளின் தாக்கம், உள்ளாட்சி தேர்தலிலும் தெரியுமா என, தொண்டர்கள் கணிக்க துவங்கி விட்டனர். வரும் உள்ளாட்சி தேர்தலில், பெண்களுக்கு, 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்பதால், சரி பாதி வேட்பாளர்கள் பெண்கள் என்பதுடன், அதிகப்படியானோர், புதுமுக வேட்பாளர்களாகவும் இருப்பர்.

மேலும், மாநகராட்சி தலைவர்களை, மக்களால் தேர்வு செய்யப்படும் உறுப்பினர்கள் தேர்வு செய்ய உள்ளனர். அதனால், உள்ளாட்சி தேர்தலில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என்பதுடன், ஓட்டுப்பதிவு சதவீதமும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

ஓட்டுப்பதிவிலிருந்து ஒதுங்கிக் கொள்ளும் பெரும்பாலானோர், தாங்கள் ஓட்டளிக்காததற்கு, 'எங்களுக்கு வேட்பாளர்களை பிடிக்கவில்லை' என்பதையே காரணமாக கூறுவதுண்டு. இந்த கருத்து, சட்டசபை மற்றும் பார்லிமென்ட் தேர்தலில் வேண்டுமானால் ஏற்புடையதாக இருக்கலாம். ஆனால், உள்ளாட்சி தேர்தலில் ஏற்புடையதாக இருக்காது. ஏனெனில், உள்ளாட்சி அமைப்புகளை பொருத்தமட்டில், பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் முதல், மாவட்ட கவுன்சிலர் வரை, அனைத்து பதவிகளுக்கும் போட்டியிடும் வேட்பாளர்கள், அப்பகுதி மக்களுக்கு ஓரளவாவது அறிமுகம் ஆனவராகவோ அல்லது அறிந்து கொள்ள கூடியவராகவோ தான் இருப்பர்.

நகர்ப்புறங்களில் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேண்டுமாயின், அனைவருக்கும் அறிமுகம் இல்லாதவராக இருக்கக்கூடும்; கிராமப்புறங்களில் அனைவரும் அறியப்பட்டவர்களாகவே இருப்பர். எனினும், உள்ளாட்சி தேர்தலிலும், எதிர்பார்த்த அளவில், ஓட்டுப்பதிவு இருப்பதில்லை; வாக்காளர்கள் ஆர்வம் காட்டுவதும் இல்லை. ஓட்டளிப்பதிலிருந்து விலகிக் கொள்வது ஏற்புடையதன்று.

ஏனெனில், உள்ளாட்சி அமைப்புகள் தான், கிராமங்களின் அடிப்படை வசதிகளான சாலைகள், தெரு விளக்குகள், குடீநீர் வினியோகம், துப்புரவு வசதிகள் போன்றவற்றை பராமரிக்கின்றன.

உள்ளாட்சி அமைப்புகளின் மூலமே, கிராம சமுதாயம் மேம்படும். உள்ளாட்சி அமைப்புகள் அரசு கொள்கைகளை வகுப்பதில்லை. அங்கு கட்சி பிரச்னைகள், கட்சி கோட்பாடுகள் அடிப்படையில் நிர்வாகம் நடைபெறுவதில்லை. அதனால், மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் முன்வர வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகளின் அடிப்படை அலகாக கருதப்படும், வார்டுகளில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவு என்பதால், அப்பகுதியினர் ஒன்றிணைந்து, தங்களுக்கு பிடித்த ஒருவரை வேட்பாளராக்கி, அவரையே வெற்றி பெற வைக்க முடியும். உள்ளாட்சி அமைப்புகளை பொருத்தமட்டில், வார்டு உறுப்பினர் மற்றும் பஞ்சாயத்து தலைவர்களை இவ்வாறு தேர்வு செய்வது சாத்தியமானது தான். பொது வாழ்வில் பங்கேற்று, மக்களுக்கு நன்மை செய்ய விரும்பும் நல்லெண்ணம் கொண்டவர்கள், உள்ளாட்சி தேர்தல்களில் பங்கேற்க வேண்டும். பொது தேர்தல்களில் பல்வேறு காரணங்களைக் கூறி, ஓட்டளிப்பதிலிருந்து விலகிக் கொள்பவர்கள், உள்ளாட்சி தேர்தல்களில் தாங்களே போட்டியிடலாம் அல்லது நல்லவர்களை போட்டியிடச் செய்து, அவர்களை தேர்வு செய்யலாம்.ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மக்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், தன்னார்வ அமைப்புகள் போன்றவற்றை அணுகி, பேசி, நல்லவர்களை தேர்வு செய்யலாம். இவ்வாறு தேர்வு செய்வதன் மூலம், கிராமங்களில் எழும் பிரச்னைகளை, மக்கள் பிரதிநிதிகளுடன் ஆலோசித்து, அதற்கான தீர்வை உடனடியாக காண முடியும்.

பஞ்சாயத்து அமைப்புகள் மூலம், கிராமங்களின் அடிப்படை வசதிகள் நிவர்த்தி செய்யப்படும் அதே வேளையில், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி போன்ற அமைப்புகள், அடிப்படை வசதிகளோடு தொடக்கப் பள்ளிகளையும், சுகாதார நிலையங்களையும் நிர்வகிக்கின்றன.

நல்லவர்களை தேர்வு செய்வதன் மூலம், இவற்றையெல்லாம் திறம்படவும், எவ்வித குறைபாடும், முறைகேடும் இல்லாமல் நிர்வகித்தால், அவை, அந்தந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு, நன்மையை தரும்.நேர்மையும், பொதுத்தொண்டில் உண்மையான ஆர்வமும், அக்கறையும் கொண்ட நபர்களை, தங்கள் பகுதி பிரதிநிதிகளாக மக்கள் தேர்வு செய்வதன் மூலம்,

உள்ளாட்சி நிர்வாகம் நல்லவர்கள் வசம் சென்றடையும்.இதன் மூலம், உள்ளாட்சிகளை உள்ளடக்கிய சட்டசபை தொகுதிகளிலும், சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய பார்லிமென்ட் தொகுதிகளிலும் நேர்மையும், அக்கறையும் கொண்டவர்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பொதுத்தேர்தல்களில் ஓட்டுப்பதிவு அதிகரிக்கவும், நல்லவர்கள் தேர்வு செய்யப்படவும், இதுவே அடிப்படையானது என்பதை, அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும்.

உள்ளாட்சிகள், மக்களுக்கு மிக அருகிலுள்ள அமைப்பாகும். உள்ளாட்சி பிரதிநிதிகள், மக்களுடன் அன்றாட தொடர்பில் இருப்பவர்கள் என்பதால், சமூக அக்கறை கொண்டவர்களை தேர்வு செய்வதே சிறப்பானது. அப்போது தான், கிராமத்தின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி, கிராமங்களில் நிலவும் இள வயது திருமணம், சிறார் தொழிலாளர், பள்ளிகளில் இடை நிற்றல் போன்ற சமூகம் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்.உள்ளாட்சி அமைப்புகள், கிராம சமுதாயம் வளம் பெற உதவி புரிவதுடன், எதிர்காலத்தில் நல்ல அரசியல் தலைவர்கள் உருவாவதற்கு, ஒரு நாற்றாங்காலாகவும் பயன்படும். உள்ளாட்சி அமைப்புகளில் அங்கம் வகித்து அனுபவம் பெற்றவர்கள், சட்டசபை, பார்லிமென்ட் செல்லும் போது, அம்மன்றங்கள் சிறப்பாக செயல்பட ஏதுவாக இருக்கும்.இன்று, சட்டசபை, பார்லிமென்ட்டில் திறம்பட செயல்படுவோரின் பின்புலத்தை ஆராய்ந்தால், அவர்கள் உள்ளாட்சி அமைப்புகளில் அங்கம் வகித்தவர்களாக இருப்பது தெரிய வரும். மாநில, தேசிய அளவிலான தலைவர்களுக்கு, உள்ளாட்சி அமைப்புகள் பயிற்சிக் கூடமாகவும், படிக்கட்டுகளாகவும் விளங்க முடியும்.நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, அலகாபாத் நகர்மன்ற தலைவராகவும், தமிழக முதல்வராக பதவி வகித்த ராஜாஜி, நகர்மன்ற தலைவராகவும் பதவி வகித்தவர்கள். அதனால், உள்ளாட்சி தேர்தலில் அனைவரும் பங்கேற்பதன் மூலமும், நல்லவர்களை தேர்வு செய்வதன் மூலமும், உள்ளாட்சி வாயிலாக, நல்லாட்சியை பெற முடியும்.

- பெ.சுப்ரமணியன், சிந்தனையாளர்இ - மெயில்: psmanian71@gmail.com

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (1)

நான் தமிழன் - Zurich,சுவிட்சர்லாந்து
04-ஆக-201619:12:31 IST Report Abuse
நான் தமிழன் சரிங்க ஐயா நல்லவர்கள் எங்க அரசியல்ல பதவிக்கு போட்டியிடுறாங்க .....பதவிக்கு நிக்கிறவங்க எல்லாமே விட்டதா சம்பாரிக்கத்தான் பாக்குறாங்க ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X