புதுடில்லி : 'நாட்டை விமர்சித்து பேசியவர்களுக்கு நல்ல பாடம் கற்பிக்கப்பட்டது' என, பாலிவுட் நடிகர் அமீர் கான் குறித்து, ராணுவ அமைச்சர் மனோகர் பரீக்கர் கூறியதற்கு, காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்தாண்டு நவம்பர் மாதத்தில், சகிப்பின்மை குறித்து பெரும் விவாதம் நடந்தது. அப்போது, 'இந்தியாவில் தொடர்ந்து இருப்பதற்கு பயமாக உள்ளது, வெளிநாடுகளுக்கு சென்றுவிடலாமா என்று என் மனைவி கேட்கிறார்' என்று, பாலிவுட் நடிகர் அமீர் கான் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், அமீர் கான் நடித்த விளம்பரத்தால், ஒரு இணைய விற்பனை நிறுவனமும் இந்த சர்ச்சையில் பாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அமீர் கானுடனான ஒப்பந்தத்தை அந்த நிறுவனம் ரத்து செய்தது.
இந்த நிலையில், மஹாராஷ்டிர மாநிலம் புனேயில், நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு நிகழ்ச்சியில், ராணுவ அமைச்சர் மனோகர் பரீக்கர் பேசுகையில், ''தன்னுடைய மனைவி சொன்னதாக நாட்டுக்கு எதிராக பேசியவருக்கு தகுந்த பாடம் கற்பிக்கப்பட்டது. அதேபோல், அவரை விளம்பரத்தில் நடிக்கச் செய்த நிறுவனத்துக்கும் பாடம் கற்பிக்கப்பட்டது,'' என்றார்.
இதற்கு, காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ''பரீக்கரின் பேச்சு, எதிர் கருத்து கூறுபவர்களை நசுக்கும் வகையில், பா.ஜ., அரசு செயல்படுகிறது என்பதை நிரூபிப்பது போல் உள்ளது,'' என, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE