துட்டு தர்றதா பேச்சு... கட்சி மாறினதும் போச்சு!| Dinamalar

'துட்டு' தர்றதா பேச்சு... கட்சி மாறினதும் போச்சு!

Added : ஆக 02, 2016
Share
இரண்டு நாளாக மித்ராவுக்கு காய்ச்சல். படுக்கையில் இருந்தவாறு ஆன்ட்ராய்டில், 'வாட்ஸ் ஆப்' வாசிப்பில் ஈடுபட்டிருந்தாள். சுற்றிலும் நாளிதழ்கள் சிதறிக் கிடந்தன. வெளியே சென்று திரும்பிய சித்ரா, ''என்ன மித்து, காய்ச்சல் எப்படியிருக்கு?'' என கேட்டாள்.''கொஞ்சம் பரவாயில்லக்கா... என்ன, டெங்கு அது இதுன்னு பேப்பர்ல போட்டிருக்காங்க. அதான் பயமாயிருக்கு,'' என்றாள்
'துட்டு' தர்றதா பேச்சு... கட்சி மாறினதும் போச்சு!

இரண்டு நாளாக மித்ராவுக்கு காய்ச்சல். படுக்கையில் இருந்தவாறு ஆன்ட்ராய்டில், 'வாட்ஸ் ஆப்' வாசிப்பில் ஈடுபட்டிருந்தாள். சுற்றிலும் நாளிதழ்கள் சிதறிக் கிடந்தன. வெளியே சென்று திரும்பிய சித்ரா, ''என்ன மித்து, காய்ச்சல் எப்படியிருக்கு?'' என கேட்டாள்.
''கொஞ்சம் பரவாயில்லக்கா... என்ன, டெங்கு அது இதுன்னு பேப்பர்ல போட்டிருக்காங்க. அதான் பயமாயிருக்கு,'' என்றாள் மித்ரா.
அதற்கு சித்ரா, ''உண்மைதான் மித்து, நம்ம மாநகராட்சில எந்த வேலையும் உருப்படியா நடக்கறதில்லை. நெறைய இடத்துல குப்பை நாள் கணக்கா குவிஞ்சு கிடக்கு. சாக்கடை எல்லாம் அடைச்சிருக்கு. மழைத் தண்ணி பல இடத்தில் தேங்கியிருக்கு. அப்புறம் டெங்கு வராம என்ன செய்யும். நாமதான் உஷாரா இருக்கணும்,'' என்றாள்.
''அதான் மாநகராட்சில ஒரே நாள்ல, 40 அதிகாரிங்கள மாத்திட்டாங்களா?'' என கேட்டாள் மித்ரா.
''ஆமா... அதிகாரிங்க டேபிள்ல, 'முக்கிய பேப்பர்' இருந்தா மட்டும்தான் 'பைல்' நகருதாம். மேயர் இடைத்தேர்தல் நடந்தப்ப, ஆச்சரியப்படுற மாதிரி திட்டங்கள அறிவிச்சாங்க; எதுவுமே நடக்கலை. எல்லாமே பேப்பர்ல வெறும் எழுத்தாதான் இருக்காம்,'' என அங்கலாய்த்தாள் சித்ரா.
''அப்ப, சில அதிகாரிங்க வெறுமனே சம்பளம் வாங்கறாங்கன்னு சொல்லு,'' என்றாள் மித்ரா.
அதற்கு சித்ரா, ''அவுங்க என்ன செய்வாங்க. சுதந்திரமா செயல்பட விட்டாத்தானே வேலை பார்க்க முடியும்? எந்த வேலையா இருந்தாலும், மேலிடத்துல இருந்து 'பிரஷர்' வருது; அப்படியே கெடப்புல போட்டுர்றாங்க. உள்ளாட்சி தேர்தல்
வேற வரப்போகுது. அதனால, வேலைகளை சீக்கிரமா முடிக்கச் சொல்லி, உத்தரவு வந்திருக்கறதால அதிகாரிகளை மாத்தியிருக்காங்க,'' என்றாள்.
''அப்ப இனி வேலையெல்லம் 'ஸ்பீடா' நடக்கும்னு சொல்லு,'' என்றாள் மித்ரா.
''அதெப்படி நடந்துரும்? 'வெயிட்'டான இடம் கெடைச்சவங்க, பூரிப்புல இருக்காங்க. இதுவரை அதிகாரம் பண்ணிட்டு இருந்தவங்க, பதவி போச்சேன்னு, மூஞ்சியைத் தொங்க போட்டுக்கிட்டு முடங்கிக் கிடக்கறாங்க. பதவி கெடைச்ச சந்தோஷத்துல, முக்கிய அதிகாரியோட உதவியாளர்களுக்கு சிலபேரு, 'ஸ்மார்ட் போன்' கிப்ட்டா குடுத்து மகிழ்ச்சிபடுத்தியிருக்காங்க,'' என்றாள் சித்ரா.
''அது சரிதான், மக்கள் மகிழ்ச்சியா இல்லியே...'' என, இழுத்த மித்ரா, ''எல்லா போலீஸ்காரங்களும் பொது இடத்துல 'விசிபிலா' இருக்கணும்னு, ஒவ்வொரு ஆய்வுக்கூட்டத்துலயும் சொல்லிட்டே இருக்காரு கமிஷனரு.
ஆனா, முக்கிய இடங்கள்ல போலீசையே காணோம். கடைவீதில இருக்குற சில கடைக்காரங்க, ஆட்கள ரோட்டுல நிறுத்தி போற வர்ற லேடீஸ்கள எல்லாம் 'உள்ளே வாங்க... உள்ளே வாங்க...'ன்னு கையை பிடிச்சு இழுக்கறாங்க; ரெட்டை அர்த்தத்துல அசிங்கமா பேசுறாங்க. அதுமட்டுமல்ல, சிட்டியில பகல் நேரத்துலயே வழிப்பறி நடக்குது. கமிஷனரு அப்பப்ப திடீர் ரவுண்ட்ஸ் வந்தாத்தான், போலீஸ்காரங்கள ரோட்டுல பார்க்க முடியும்,'' என்றாள்.
நாளிதழ்களை புரட்டிக் கொண்டிருந்த சித்ரா, ''இங்க பார்த்தியா மித்ரா, ஹோப் காலேஜ் சிக்னலை மூடுனதால, ரெண்டு கிலோ மீட்டருக்கு ரோடு ப்ரீயா இருந்துச்சு. ஆனா, ஒரே வாரத்துல இந்த நடவடிக்கையை, போலீஸ்காரங்க கைவிட்டுட்டாங்க. இதுக்கு பின்னாடியும் அரசியல் இருக்கு,'' என்றாள்.
''இதுலயும் அரசியலா...தெளிவா சொல்லுக்கா,'' என்று புருவத்தை சுருக்கினாள் மித்ரா.
''ஏற்கனவே இருந்த டிராபிக்கை மாத்தக்கூடாதுங்கறது, மசக்காளிபாளையம் ஜனங்களோட டிமாண்ட். இதைக் கேட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏ., களத்துல குதிச்சாரு. பா.ஜ.,- கம்யூ.,ன்னு, ஒவ்வொரு கட்சியா போராட்டத்துக்கு தயாரானாங்க. நமக்கெதுக்கு வம்புன்னு, அந்த திட்டத்த போலீஸ் கைவிட்டுருச்சு,'' என்று பதிலளித்தாள் சித்ரா.
''நானும் ஒரு போலீஸ் மேட்டர் சொல்றேன். செட்டிபாளையம் போலீஸ் ஸ்டேஷன் லிமிட்ல, ஆக்சிடென்ட் நடக்கக்கூடாதுனு போலீஸ்காரங்க கருப்பு ரெட்டை கிடா வெட்டி, துஷ்ட தேவதைக்கு பரிகார பூஜை செஞ்சிருக்காங்க. இதுக்கு, போலீஸ்காரங்க ஒவ்வொருத்தருகிட்டயும், ஒரு 'அமவுன்ட்' வசூல் பண்ணியிருக்காங்க. பணம் குடுத்த போலீஸ்காரங்க சிலபேர, கிடா விருந்துக்கு கூப்பிடாததால, மேட்டர ஊர்பூரா 'ஜமாப்' அடிச்சுட்டாங்க,'' என்றாள் மித்ரா.
'''ஜமாப்'னு சொன்னவுடனேதான் ஞாபகம் வருது... கவுண்டம்பாளையம் தொகுதியில, போனவாட்டி எந்த வேலையும் நடக்காததால, ஜனங்க அதிருப்தியா இருந்தாங்க. சமீபத்துல நடந்த தேர்தல்ல, பையா கவுண்டர் தி.மு.க., சார்புல போட்டி போட்டார். செல்வாக்கு இருந்தும் தோத்துப் போயிட்டாரு,'' என்றாள் சித்ரா.
''ஆமா...அதான் தெரிஞ்ச கதையாச்சே...புதுசா இதுல என்ன இருக்கு?'' என்று கேட்டாள் மித்ரா.
''எலக்ஷன் முடிஞ்ச பிறகு, ஆளுங்கட்சிக்கு ஓட்டு குறைஞ்ச பகுதிகள்ல எந்த வேலையும் நடக்கறதில்லையாம். குறிப்பா, சேரன்மாநகர் ஏரியால, ஜனங்க ஏதாவது கம்ப்ளைய்ன்ட் சொன்னா, 'நீங்க 'பையா'வுக்குத்தானே ஓட்டு போட்டீங்க, உங்க பிரச்னைகளை அங்கேயே போய்ச் சொல்லுங்க' ன்னு ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., கிட்டேயிருந்து பதில் வருதாம்,'' என்றாள் சித்ரா.
''அடுத்ததா உள்ளாட்சி எலக்ஷன் வரப்போறத, யாராவது ஞாபகப்படுத்தினா நல்லது,'' என்று சிரித்த மித்ரா, தனது கையில் இருந்த ஒரு நாளிதழை காட்டி, ''அக்கா, இங்க பாரேன்...ஒரு பாரீன் நாய் ஒரே கலர்ல, ஆறு குட்டி போட்டிருக்கு... சூப்பர்ல?'' என்றாள்.
''இன்னொரு பொலிட்டிக்கல் மேட்டர் இருக்கு மித்து, தே.மு.தி.க., - காங்., த.மா.கா., கட்சிகளோட, மாவட்ட முக்கிய நிர்வாகிங்க சிலபேரு, அ.தி.மு.க., வுக்கு தாவுனாங்கள்ல... அவங்களுக்கு 'கட்டு கட்டா' குடுத்தாங்களாம்.
அதில, ஒரு கட்சியின் செயலாளருக்கு, பல லட்சம் கொடுத்ததா பேச்சு. கட்சியில இருந்து வந்த பகுதி செயலாளர்களுக்கு, தொகையை பிரிச்சு கொடுக்க சொன்னாராம். ஆனா... மலை முழுங்கி மாவட்டமோ, லேசா கண்ணுல காட்டிட்டு, பாக்கிய மொத்தமா அமுக்கிட்டாராம். இதனால அவரு கூட சென்னைக்கு போன கட்சிக்காரங்க, புலம்பித்தள்றாங்களாம்,'' என்றாள் சித்ரா.
அப்போது வீட்டின் அருகில் இருந்த கோவிலில், 'முருகா என்றழைக்கவா...' என மைக்செட்டில் பக்திபாட்டு முழங்கியது.
அதை கேட்ட சித்ரா, ''மருதமலை கோவில் அன்னதான திட்டத்துல ஊழல் பண்ணுன ஒருத்தர பத்தி, அன்னிக்கு பேசிட்டிருந்தோமே...ஞாபகம் இருக்கா மித்து, அந்த மேட்டர பத்தி ஆடிட் அதிகாரிங்க விசாரிச்சிருக்காங்க. உண்மைன்னு தெரிஞ்சதால அவரை, பஸ் பராமரிப்பு செக்ஷனுக்கு மாத்திட்டங்களாம்,'' என்றாள்.
அதற்கு மித்ரா, ''நானும் ஒரு 'பாலோ அப்' நியூஸ் சொல்றேன்... தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக உக்கடம் -2 கிளையில, சில்லரையில் பல லட்சங்களை சம்பாதிக்கறவர பத்தி பேசினோமே...இப்ப அவரை, அங்கயிருந்து வேற பிராஞ்சுக்கு மாத்திட்டாங்களாம்,'' என்றாள்.
''நீ பேசற வேகத்தை பார்த்தா, உனக்கு காய்ச்சல் இருக்கான்னே எனக்கு டவுட்டா இருக்கு,'' என்று கூறியபடி, மித்ராவின் நெற்றியை தொட்டுப் பார்த்தாள் சித்ரா. காய்ச்சல் காணாமல் போயிருந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X