மேம்பாலம், டவுன்ஹால், குமரன் ரோடு பகுதி முழுவதும் வழக்கம் போல், வாகன நெரிசல். அங்குலம் அங்குலமாக, நகர்ந்த வாகன கூட்டத்தில், மொபட்டில் ஊர்ந்து கொண்டிருந்தவர்களில், சித்ராவும், மித்ராவும் அடக்கம். ""இங்க மட்டும் என்ன செஞ்சாலும், டிராபிக் ஜாம் குறையறதேயில்ல,'' என அலுத்து கொண்டாள் மித்ரா.
""டிராபிக் அதிகமா இருக்குன்னு, பஸ் ஸ்டாப்பை மாத்தினாங்க. என்ன பிரயோஜனம்; பஸ் ஸ்டாப் மாத்தின இடத்தில், ரோட்டில்தான் பயணிங்க நிற்க வேண்டியிருக்கு. அந்த இடத்திலே, வாகன பார்க்கிங் நெருக்கடி. போதாக்குறைக்கு, தாலுகா ஆபீஸ் போய் வர்ற வண்டிகள், "ஐவேஸ்' ஆபீஸ் வளாகத்தில் உள்ள எம்.எல்.ஏ., ஆபீசுக்கு வரும் வண்டிகள்னு, அந்த இடத்தில் ஏகப்பட்ட டிராபிக். என்ன செய்றதுன்னு அதிகாரிங்களும் கையை பிசைஞ்சுகிட்டு முழிக்கறாங்க,'' என்றாள் சித்ரா.
டிராபிக்கில் இருந்து தப்ப, சட்டென மொபட்டை கோர்ட் வழியாக திருப்பிய சித்ரா; ""வக்கீல் போராட்டம் எப்பிடி போயிட்டுருக்கு,'' என்றாள். ""இதில் ஒரு கூத்து நடந்ததே. அது உனக்கு தெரியுமா,'' என, மித்ரா புதிர்போட, ""அதில் என்ன, இங்கும் வக்கீல்கள் ரெண்டு கோஷ்டியா இருக்காங்களா'' என கேட்டாள் சித்ரா.
""வக்கீல்கள் போராட்டத்தில் சிலருக்கு ஒப்புதல் இல்லைனாலும், சங்கம் என்ற அமைப்புக்காக, போராட்டத்துக்கு எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கலையாம். ஆனா, போராட்டம் தொடர்பான நடவடிக்கையில் தான், ஒரு கூத்து நடந்திருக்கு. உளவுப்பிரிவு போலீசார் மூலம் கிடைச்ச தகவல் அடிப்படையில், திருப்பூரில் மூன்று வக்கீல்கள் மீது, சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டது,'' என்றாள் மித்ரா.
""அடடா! அப்புறம்?'' என, சித்ராவிடம் ஆவல் தொற்றி கொண்டது.
""போராட்டத்தில் முன்னின்ற வக்கீல் ஒருவரின் செல்லப்பெயரை குறிப்பிட்டு, உளவுத்துறை தகவல் போயிருக்கு. அதனடிப்படையில், அவர் மீது நடவடிக்கை எடுப்பதாக நினைத்து, உண்மையாகவே அப்பெயரை கொண்ட, இன்னொருத்தரை சஸ்பெண்ட் செஞ்சுட்டாங்க. அவரோ, கோர்ட்டுக்கு வருவதே எப்போதாவது ஒரு தடவ தானாம். இதை தெரிஞ்சுட்ட மத்த வக்கீல்கள், தலையில் அடித்து கொள்ளாத குறையாக உள்ளனர்,'' என்றாள் மித்ரா.
""திருப்பூரின் ரெண்டு முக்கிய போலீஸ் அதிகாரிகளையும் டிரான்ஸ்பர் செஞ்சுட்டாங்க பார்த்தியா,'' என, அடுத்த விஷயத்துக்கு, சித்ரா தாவினாள்.
""ஆமாம். தேர்தலுக்கு பிறகு, எப்படியும் மாற்றம் வரும்னு தெரியும். அதனால் தான், பணியில் கூட, பெரியளவில் அவங்க, முனைப்பு காட்டாம இருந்தாங்களாம்,'' என, மித்ரா சொன்னாள்.
""எல்லாம் சரி. எஸ்.பி.,க்கு, இன்னும், ஏன் போஸ்டிங் போடாம இருக்காங்க,'' என, சித்ரா சந்தேகத்தை கிளப்பினாள்.
""எல்லாம் அந்த, 570 கோடி ரூபாய் மேட்டர்னு, ஒரு பேச்சு இருக்கு. தேர்தல் நேரத்தில், இதை பறிமுதல் செஞ்சு, நடவடிக்கை எடுத்த பிரச்னையில், அவருக்கு காத்திருப்போர் பட்டியலாம். அதே போல், கரூர் எஸ்.பி.,க்கு கண்ட்ரோல் ரூம் பணி. பணப்புழக்க புகாரால், அங்கு தேர்தல் தள்ளி வைக்கிற நிலை உருவானது. ஒழுங்கா, வேலை செய்யாததால, அவங்களுக்கு இந்த "பரிசு' கிடைச்சிருக்கறதா, போலீசார் மத்தியில் பேசிக்கறாங்க,'' என்றாள் மித்ரா.
""சில வார்டுல பிரசாரத்தையே ஆரம்பிசுட்டாங்களாம்பா,'' என, மித்ராவின் பேச்சு தேர்தல் பக்கம் திரும்பியது.
""உள்ளாட்சி தேர்தலை சொல்லறியா,'' என்றாள் சித்ரா.
""கரெக்டா சொன்னே. மாநகராட்சியில் எதுஎது "லேடீஸ்' வார்டுனு, ஆளுங்கட்சிக்கு விவரம் தெரிஞ்சு போச்சு. அதனால, ஒவ்வொரு வார்டிலேயும், "சீட்' வாங்கும் சாத்தியம் இருக்கறவங்க, இப்பவே வீடு வீடா போயி பிரசாரம் பண்றாங்களாம். இதை பார்த்து, தாமரை கட்சிக்காரங்களும் இப்பவே களமிறங்க ஆரம்பிச்சுட்டாங்க சித்ரா,'' என்றாள் மித்ரா.
""வார்டு எப்படி பிரிச்சிருக்காங்கனு யாருக்குமே தெரியல; இரண்டு விதமா "லிஸ்ட்' அனுப்பியிருக்காங்களாம். மக்கள் தொகையில, பெண்கள் அதிகம் உள்ள வார்டு; தற்போதுள்ள, 20 "லேடீஸ்' வார்டுடன், மேலும், 10 வார்டுனு, தனித்தனி "லிஸ்ட்' அனுப்பியிருக்காங்க,'' என்றாள் சித்ரா.
""இப்பவே, ஆளுங்கட்சிய சேர்ந்த, 10 பேர், மேயர் பதவியை பிடிக்க, சென்னையில முகாமிட்டிருக்காங்க. மண்டல தலைவருங்க, நிலைக்குழு தலைவர்கள், "சீனியர்' கவுன்சிலர்கள் மட்டுமல்ல, சட்டசபை தேர்தலுக்கு முன்னாடி, நேர்காணலுக்கு போயிட்டு வந்தவங்களுக்கும் அதிக வாய்ப்பு இருக்குதுனு பேச்சு அடிபடுது. இதற்காக, சென்னையில முகாமிட்டு, தங்களோட"ரூட்'ல காய் நகர்த்திட்டு இருக்காங்க; அதுக்குள்ள ஏலத்த முடிச்சுடனும்னு, ஒரு தரப்பு வேலை பார்க்குது,'' என்றாள் மித்ரா.
""அதென்ன ஏலம்?'' என்று சித்ரா கேட்டாள்.
""மாநகராட்சி கடை ஏலம் நடத்தக்கூடாது, கடைக்காரங்க கோர்ட்டுக்கு போயும், ஏலம் நடத்துங்கனு உத்தரவு வந்திருக்கு. மொத்தமுள்ளதில், 70 சதவீதம் கடையோட ஏலம் முடிஞ்சிருக்கு. மீதியுள்ள கடைக்கு ஏலம் நடக்காம இழுபறியா இருக்கு. அதுக்குள்ள சில கடைக்காரங்க,"பேசி' தீர்த்துக்கலாம்னு
காய் நகர்த்திட்டு வர்றாங்க. துப்புரவு ஆளெடுப்பு கைநழுவி போச்சு; "ஏலம்' இல்லாம பார்த்துக்கலாமுன்னு, சிலர் "ஐடியா' கொடுத்திருக்காங்க. அதனால,
முக்கிய ஏரியாவுல இருக்கற கடைகளுக்கான ஏலம், இழுபறியாவே போயிட்டு இருக்கு,'' என்றாள் மித்ரா. வீடு வரவே, மித்ராவிடம் விடைபெற்று, சித்ரா கிளம்பினாள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE