சென்னை:சட்டசபையில், நேற்று கடும் அமளி ஏற்பட்டது. சபை நிகழ்ச்சிகள் முடிந்த பின்னரும், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் சபைக்குள் அமர்ந்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அமளியால், அமைச்சரின் பதிலுரையை சபாநாயகர் தள்ளிவைத்தார்.
சட்டசபையில், நேற்று மின் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில், பரமக்குடி தொகுதி அ.தி.மு.க., உறுப்பினர் முத்தையா பேசினார்.
அவர், ''சட்டசபைக்கு, 89 வயக்காட்டு பொம்மைகள் வந்திருக்கின்றன. அவற்றை பார்த்து, குருவிகள் பயப்படலாம்; சீறும் சிங்கம் பயப்படுமா,'' என்ற போது, 89 உறுப்பினர்கள் உடைய தி.மு.க., தரப்பில் கொந்தளிப்பு ஏற்பட்டது. அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், இருக்கையில் இருந்து எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
தீர்ப்பை மாற்ற முடியாது: அதற்கு சபாநாயகர் தனபால், ''முத்தையா, யார் பெயரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை; அமருங்கள்,'' என்றார். ஆனால், அவர் பேசியதை சபைக்குறிப்பில் இருந்து நீக்கும்படி, தி.மு.க.,வினர் வலியுறுத்தினர்.
முதல்வர் ஜெயலலிதா: வயக்காட்டு பொம்மை ஒன்றும், சபைக்குறிப்பில் இடம் பெறக் கூடாத தவறான வார்த்தை அல்ல.
சபாநாயகர்: முதல்வர் தெளிவாகச் சொல்லி விட்டார். அது, தவறான வார்த்தை அல்ல. எனவே, விவாதம் தேவையில்லை. (அப்போது, ஸ்டாலினும், துரைமுருகனும் பேச வாய்ப்பு கேட்டனர்.)
சபாநாயகர்: தீர்ப்பை கூறிவிட்டேன்; அதை மாற்ற முடியாது.
முதல்வர்: அவர், தன் வயக்காட்டில் இருக்கும் பொம்மைகளை பற்றி பேசினார். அதற்கு எதிர்க்கட்சியினர், தங்களை தான் குறிப்பிடுவதாக நினைத்து, ஏன் இப்படி சத்தம் போடுகின்றனர் என, புரியவில்லை.
(முதல்வர் பேசும்போது, தி.மு.க., உறுப்பினர்கள் குறுக்கிட்டனர். அ.தி.மு.க.,வினரும் எழுந்து, பதிலுக்கு சத்தம் போட்டனர். சபாநாயகர் அமைதிப்படுத்த முயன்றும், தி.மு.க.,வினர் கோரிக்கையை கைவிடுவதாக இல்லை. அப்போது, முதல்வர் புறப்பட்டுச் சென்றார். பின், இரு தரப்பும் எழுந்து நின்று மாறி மாறி சத்தம் போட்டதால், கூச்சல், குழப்பம் அதிகமாகியது.)
சபாநாயகர்: பேச தினமும் வாய்ப்பு தருகிறேன். இன்று, தீர்ப்பு தந்த பின்னரும், நேரத்தை ஏன் வீணடிக்கிறீர்கள்?
முத்தையா: குதிரை போல கடைசி நேரத்தில், மூக்கை நீட்டி வென்றதாக, நீங்கள் கூறுகிறீர்கள். ஒரு சதவீதம் என்றாலும்
தோல்வி, தோல்வி தான். இவ்வாறு அவர் பேசியதும், தி.மு.க., வினரின் எதிர்ப்பு இன்னும் அதிகமானது. அவர்கள், முன்வரிசையை நோக்கி ஓடிவந்து, எதிர்ப்புக் குரல்
எழுப்பினர். இந்த களேபரத்தால், சபை நிகழ்ச்சிகள் பாதிக்கப்பட்டன.
அதனால்,
முத்தையாவின் பேச்சை பாதியில் முடிக்கும்படி உத்தரவிட்ட சபாநாயகர்,
அமைச்சர் தங்கமணியை பதிலுரைக்காக அழைத்தார். அவரை பேச விடாமல்,
தி.மு.க.,வினர் கூச்சலிட்டனர்.
அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்: தீர்ப்பை சொன்ன பின் மாற்ற முடியாது.
சபாநாயகர்: யார் மனதையும்புண்படுத்துவதற்காக அப்படி சொல்லவில்லை என்று முத்தையா கூறியுள்ளார். நீங்கள் இப்படி நடப்பதை பார்த்தால், நாட்டு மக்கள், இவர்கள் சரியில்லை என்று நினைக்க மாட்டார்களா?
அப்போது குறுக்கிட்டு பேசிய, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், ''நாங்கள் வயக்காட்டு பொம்மை என்றால் நீங்கள்...'' என, சில வார்த்தைகளை கூறினார். அதைக் கேட்டு தி.மு.க.,வினர் ஆரவாரம் செய்தனர். அ.தி.மு.க.,வினர் கடும் ஆவேசமடைந்தனர். உடனே, ஸ்டாலின் கூறிய வார்த்தைகளை, சபாநாயகர் நீக்கினார்.
ஒருமித்த குரலில்...
இதற்கிடையே, சபாநாயகரை விமர்சித்து, தி.மு.க., உறுப்பினர் மா.சுப்பிரமணியன் கோஷம் எழுப்பினார். அவரை பின்பற்றி ஒருமித்த குரலில், தி.மு.க.,வினர் கோஷம் போட்டனர். இதனால், பகல், 1:25 மணி முதல், 2:05 வரை, 40 நிமிடம் விவாதம் பாதித்தது.
நிலைமை கட்டுக்கடங்காமல் போவதை உணர்ந்த சபாநாயகர், 2:09 மணிக்கு, ''சபை யின் இன்றைய நிகழ்வுகள் இத்துடன் முடிந்தன; சபை, நாளை காலை மீண்டும் கூடும்; மின் துறை அமைச்சரின் பதிலுரை இடம்பெறும்,'' எனக்கூறி வெளியேறினார். அதன்பின், அ.தி.மு.க., வினரும் புறப்பட்டனர்.
இதை சற்றும் எதிர்பாராத தி.மு.க.,வினர், இருக்கைகளில் அமர்ந்து கோஷம் போடத் துவங்கினர். 10 நிமிடங்கள் கோஷமிட்ட பின், சபையில் இருந்து வெளியேறினர்.
வேதனை தருகிறது: ஸ்டாலின் சட்டசபையில், சபாநாயகர் நடந்து கொள்ளும் விதம் வேதனை அளிப்பதாக தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
எங்களை, 'வயக்காட்டு பொம்மை' என, அ.தி.மு.க., உறுப்பினர் குறிப்பிட்டார். அதற்கு பதில் தர வாய்ப்பு கேட்டோம். அப்போது, நாங்கள் கூறிய வார்த்தையை சபாநாயகர் நீக்கி விட்டார்.
நாங்கள் சொன்ன வார்த்தையை நீக்கியவர், அ.தி.மு.க., உறுப்பினர் கூறிய கருத்தை நீக்க வில்லை.சுயமரியாதையை காப்பதற்காக, முடிந்தவரை வாய்ப்பு கேட்டோம். இருப்பினும்,
சபாநாயகர் ஒப்புக் கொள்ளவில்லை. அவர் நடந்து கொள்ளும் விதம், வேதனை தருவதாக
உள்ளது. இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.
மோதிய எம்.எல்.ஏ.,க்கள்!
சட்டசபையில்
எதிர்க்கட்சியினர் அமரும் வரிசையில், அ.தி.மு.க., உறுப்பினர்கள்
சிலருக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.தளி தொகுதி எம்.எல்.ஏ., பிரகாஷ், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்ட தி.மு.க.,வினர்
அமர்ந்திருக்கும் வரிசைக்கு முன்வரிசையில், அ.தி.மு.க.,வின் வெற்றிவேலுக்கு இடம் தரப்பட்டுள்ளது.
சபையில் அமளி நடந்தபோது, வெற்றிவேலுக் கும், பிரகாஷுக்கும் இடையே தனிப்பட்ட வாக்கு வாதம் வெடித்தது. இருவரும், ஒருவரை ஒருவர், ஆக்ரோஷமாக கையை நீட்டி பேசினர். அதைப் பார்த்த, மற்ற தி.மு.க., உறுப்பினர்கள் ஓடி வந்தனர். வெற்றிவேல் கையை ஓங்க, பதிலுக்கு தி.மு.க., உறுப்பினரும் எச்சரித்தார். பின்னர், அவர்களை சமாதானப்படுத்தினர்.
அமைச்சர் இன்று பதிலுரை :
சட்டசபை நிகழ்ச்சிகள், மாலை, 5:00 மணி வரை நீண்டு கொண்டே போகும் போதும், ஒரே நாளில், இரண்டு, மூன்று அமைச்சர்கள் பதிலுரை இருக்கும் போதும், ஒரு அமைச்சரின் பதிலுரை ஒத்திவைக்கப்படுவது வழக்கம்.
ஆனால், எப்போதும் இல்லாத வகையில், அமைச்சர் மட்டுமே பதில் தர வேண்டிய நிலையில், தி.மு.க., அமளியால், நேற்று பிற்பகல், 2:00 மணி அளவில், சபை ஒத்திவைக்கப்பட்டது.
'திட்டி தீர்த்திட்டீங்க; திருப்தியா' :
சபாநாயகரை கடுமையாக விமர்சித்து, கோஷம் போட்ட தி.மு.க.,வினர், கண்டன பொதுக் கூட்டங்களில் தொடர் கோஷம் எழுப்புவது போல், 10 நிமிடங்களுக்கு மேலாக கூச்சல் போட்டனர். அதற்கு சபாநாயகர், ''என்னை இஷ்டம் போல திட்டி தீர்த்திட்டீங்க... இப்ப திருப்தியா,'' என, கேட்டார். அதற்கு, 'இல்லை' என்பது போல் சைகை காட்டிய தி.மு.க.,வினர், கோஷத்தை தொடர்ந்தனர்.
ஸ்டாலின் - ராமசாமி ஆலோசனை
சபை முடிந்த பின்னரும் வெளியேற மறுத்த தி.மு.க.,வினருக்கு துணையாக, காங்கிரஸ் உறுப்பினர்களும் அமர்ந்திருந்தனர். சபையில் இருந்து வெளியேறிய பின், ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர், காங்கிரஸ் சட்டசபை தலைவர் ராமசாமியுடன், இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தினர்.
திசை மாறும் விவாதம் :
காங்கிரஸ் சட்டசபை தலைவர் ராமசாமி கூறுகையில், ''சட்டசபையில் நீண்ட நாட்களாக இருக்கிறேன். இப்படிப்பட்ட நிகழ்வுகளை பார்த்ததில்லை. மக்களின் பிரச்னை பற்றி பேசாமல், விவாதங்கள் வேறு திசை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன,'' என்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (45)
Reply
Reply
Reply