*''ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா நாடு முழுவதும் நடைமுறைக்கு
வரும் போது, தமிழக அரசும், அதை கண்டிப்பாக செயல்படுத்தும்,'' என, மத்திய நிதியமைச் சரும்,பா.ஜ., மூத்த தலைவருமான அருண் ஜெட்லி நம்பிக்கை தெரிவித்தார்.
நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை கொண்டு வரும் வகையில், அறிமுகம் செய் யப்பட்ட, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா, ராஜ்யசபாவில் நேற்று முன்தினம், ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
துவக்கம் முதலே இந்த வரி விதிப்பு முறைக்கு, எதிர்ப்பு தெரிவித்து வந்த அ.தி.மு.க., ராஜ்ய சபாவிலும் தன் எதிர்ப்பை வலுவாக தெரிவித்தது. மேலும் மசோதாவை நிறைவேற்றுவதற்கு நடந்த ஓட்டெடுப்பில் பங்கேற்காமல், வெளிநடப்பு செய்தது.
சந்தேகம் இல்லை: இந்நிலையில், ஜி.எஸ்.டி., வரி விதிப்பு முறையை தமிழக அரசு செயல்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. டில்லியில், நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது, இது குறித்து, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது:
இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள், மிகவும் பொறுப்பானவை. சட்டப்பூர்வமான எந்த நடவடிக்கையையும், அனைவரும் செயல் படுத்துவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நிதியமைச்சர்கள் குழு கூட்டத்திலும், பார்லி மென்டிலும், தமிழக அரசு தன் நிலைப்பாட்டை வலுவாக தெரிவித்துள்ளது.
இந்த வரி விதிப்பில், அவர்களுக்கு சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இந்த வரி விதிப்பு வருவதற்கு மிகவும் ஒத்துழைப்பு அளித்தனர். அனைத்து கூட்டத்திலும் பங்கேற்ற துடன், தங்கள் கருத்தையும் மிகவும் வலுவாக தெரிவித்தனர். இதன் மூலம், இந்த வரி விதிப்பு முறையில், அவர்களுக்கும் ஈடுபாடு உள்ளது தெரிய வரும். தமிழகத்தில் பொறுப்பான ஓர் அரசு உள்ளது. ஜி.எஸ்.டி., வரி விதிப்பை நாடு முழுவதும் கொண்டு வரும்போது, இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், தமிழகமும் அதை கண்டிப்பாக செயல்படுத்தும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ரூ.9,௦௦௦ கோடி இழப்பு ராஜ்யசபாவில் நேற்று முன்தினம் நடந்த விவாதத்தின் போது, ஜி.எஸ்.டி., வரி விதிப்புக்கு, அ.தி.மு.க.,வின் நவநீதகிருஷ்ணன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். 'உற்பத்தி மாநிலமான தமிழகத்துக்கு, இந்த வரி விதிப்பால், ஆண்டுக்கு, 9,௦௦௦
கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். மேலும் இந்த வரி விதிப்பு, மாநிலங் களில் நிதி சுயாட்சிக்குஎதிரானது' என, நவநீதகிருஷ்ணன் பேசியது குறிப்பிடத்தக்கது.
60 ஆயிரம் பேருக்கு பயிற்சி:
மிக
நீண்டகாலமாக பேசப்பட்டு வரும், ஜி.எஸ்.டி., மசோதா, லோக்சபாவில், 2015, மே
மாதம் நிறைவேறியது. நீண்ட இழுபறிக்குப் பின், பெரும்பான்மை ஆதரவுடன், இந்த
மசோதா, ராஜ்யசபாவில் நேற்று முன்தினம் நிறை வேறியது.இந்த மசோதா சட்டமாக, அதை
நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு, பல்வேறு கட்டங்கள் உள்ளன.
இதற்காக,அடுத்த சில மாதங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, மத்திய வருவாய் துறைச் செயலர் ஹஸ்முக் ஆதியா கூறியதாவது:
* ராஜ்யசபாவில் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதால், லோக்சபாவில், இந்த திருத்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும்
* அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா என்பதால், அடுத்த, 30 நாள்களுக்குள், 50 சதவீத சட்டசபைகளில், அதாவது, 16 மாநில சட்டசபைகள், இந்த மசோதாவுக்கு ஒப்புதல் தர வேண்டும்
* பின் ஜனாதிபதியின் ஒப்புதலை பெற வேண்டும்
* ஜி.எஸ்.டி., கவுன்சில் அமைப்பதற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் தர வேண்டும்
* வரைவு ஜி.எஸ்.டி., சட்டங்களை, ஜி.எஸ்.டி., கவுன்சில் பரிந்துரைக்க வேண்டும்
* மத்திய ஜி.எஸ்.டி., ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி., சட்டங்களுக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் தர வேண்டும்
* மாநில ஜி.எஸ்.டி., சட்டங்களுக்கு, மாநில சட்டசபைகள் ஒப்புதல் தர வேண்டும்
* அதைத் தொடர்ந்து, அடுத்து நடக்கவுள்ள பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரில், மத்திய ஜி.எஸ்.டி., மற்றும் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி., சட்டங்களுக்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்ற வேண்டும்
* வரும், 2017, மார்ச், 31ம் தேதிக்கு முன், ஜி.எஸ்.டி., சட்ட விதிகளுக்கான அரசாணை வெளியிட வேண்டும்
* அதற்கு முன், ஜி.எஸ்.டி., வரிவிதிப்பு தொடர்பான மென்பொருள், இந்த ஆண்டு இறுதிக்குள் தயாராக வேண்டும்
* அடுத்த ஆண்டு, ஜனவரி - மார்ச் மாதங்களுக்குள், இந்த புதிய மென்பொருள் சோதனை செய்யப்பட்டு, நாடு முழுவதும் இணைக்கப்பட வேண்டும்
* இந்த ஆண்டு இறுதிக்குள், மத்திய, மாநில அரசுகளை சேர்ந்த, 60 ஆயிரம் அதிகாரிகளுக்கு, ஜி.எஸ்.டி., வரிவிதிப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட வேண்டும்
* அடுத்த ஆண்டு, மார்ச்மாதத்துக்குள், இந்த வரிவிதிப்பின் கீழ் வரும் நிறுவனங்கள் உள்ளிட்ட
அமைப்புகளுடன் ஆலோசனை செய்து, செயல்படுத்துவதற்கு அவற்றை தயார் செய்ய
வேண்டும்
* தற்போதுள்ள வாட், சேவை வரி, மத்திய சுங்க வரி போன்றவற்றை, ஜி.எஸ்.டி., முறைக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு பல்வேறு நடவடிக்கைகள், அடுத்த சில மாதங்களில் எடுக்கப்பட வேண்டும். இவை அனைத்தும் ஒரே நேரத்தில் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மேலும் கூறியதாவது:
ஜி.எஸ்.டி., வரி விதிப்பை, 2017, ஏப்ரல், 1ம் தேதி முதல் அமல்படுத்துவது என்ற இலக்குடன், அரசு செயல்பட்டு வருகிறது.
வரி விதிப்பு சதவீதம் எவ்வளவு இருக்கும் என்பது, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் தான் முடிவு செய்யப்படும். ஆனால், வரி குறைவாக இருக்கும் என்பதை மட்டும் உறுதியாக கூற முடியும். மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், மத்திய - மாநில அரசுகளின் வரி வருவாயும் பாதிக்காத வகையில்,வரி விதிப்பு இருக்கும்.
மிக விரைவாக, இந்த விதிப்பை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். 2017 ஏப்ரல், 1ம் தேதி என்ற இலக்குடன் செயல்படுவதால், வரி விதிப்பை கொண்டு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மிகவேகமாக நடைபெறும்.
இந்த வரிவிதிப்பு முறையால், விலைவாசி கண்டிப்பாக கட்டுக்குள் வரும். அடுத்த சில ஆண்டுகளில், வரிகள் மேலும் குறையும்; அதனால் விலையும் குறையும்.
இதன் மூலம், தொழில்துறை வளர்ச்சி பெறும். இந்த வரி விதிப்பு, தொழில் நிறுவனங்கள், வியாபாரிகள், பொதுமக்கள், மத்திய - மாநில அரசுகளுக்கு சாதகமானது.
அதிகபட்ச வரி, 18 சதவீதமாக இருக்க வேண்டும் என்று, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் வலியுறுத்தினார். முன்னாள் நிதியமைச் சருக்கும், தற்போதைய நிதியமைச்சருக்கும் நிறைய வேறுபாடு உள்ளது. ஒரு நிதியமைச்சராக, 'குறைந்த வருவாயில், அதிக திட்டங்களை செயல்படுத்துங்கள்' என்று என்னால் கூற முடியாது.
எனினும், வரி குறித்த இறுதி முடிவை, மத்திய, மாநில அரசுகள் பங்குபெறும், ஜி.எஸ்.டி., கவுன்சில் தான் எடுக்க உள்ளது. வரியை குறைக்க வேண்டும் என்பதற்காகத் தான், ஜி.எஸ்.டி., கொண்டு வரப்பட்டுள்ளது. அதனால், கண்டிப்பாக வரி குறைவாகவே இருக்கும்.இவ்வாறு ஜெட்லி கூறினார்.
ஜி.எஸ்.டி., மசோதா நிறைவேற்றம் என்பது ஒரு முடிவல்ல; ஆனால் இந்த முடிவில் இருந்து தான்,இனி உண்மையான,கடினமான பணிகள் துவங்கும்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (16)
Reply
Reply
Reply