தகவல் தொழில்நுட்ப உலகில் மயக்கும் மாய வலைகள்| Dinamalar

தகவல் தொழில்நுட்ப உலகில் மயக்கும் மாய வலைகள்

Added : ஆக 05, 2016 | கருத்துகள் (3)
தகவல் தொழில்நுட்ப உலகில் மயக்கும் மாய வலைகள்

தினமும் பல புதிய தகவல் தொழில் நுட்பங்கள் உருவாக்கப்பட்டு மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு உதவியாக வலம் வருகின்றன. அதே வேளையில் அவற்றைத் தவறாக பயன்படுத்தி மக்களை ஏமாற்றும் உத்திகளும் வளர்ந்து வருகின்றன. தற்போது அதிகமான பயன்பாட்டில் உள்ள 'ஸ்மார்ட்' கைபேசிகளின் மூலம் மாய வலையின் பிடி இறுகியுள்ளது. இவை பெரும்பாலும் நாம் தினமும் பயன்படுத்தும் குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள், அலைபேசி அழைப்புகள், செயலிகள் மற்றும் வலைத்தளங்கள் வாயிலாக நம்மை நித்தமும் அணுகிக் கொண்டு இருக்கின்றன. அவற்றைத் தவிர்ப்பதற்கான வழி முறைகளைத் தெரிந்து கொள்வோம்.
குறுஞ்செய்திகள் : உங்களது அலைபேசிக்கு அறிமுகமில்லாத எண்களிலிருந்து வரும் குறுஞ்செய்திகளை கவனத்தோடு கையாளுங்கள். உதாரணமாக பிரபலமான நிறுவனத்தின் பெயரோடு, உங்களது அலைபேசி எண் லாட்டரி முறையில் கோடிக்கணக்கான ரூபாய் பரிசுக்காக தெரிவு செய்யப்பட்டிருப்பதாக குறுஞ்செய்திகள் வரலாம். அதில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் அல்லது எண்ணுக்கு தொடர்பு கொண்டால் பரிசை அனுப்பி வைக்க சேவைக் கட்டணமாக சில ஆயிரங்களை ஒரு குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் செலுத்துங்கள் என்று செய்தி வரும். செலுத்திய பின் எந்த தகவலும் வராது. நீங்கள் செலுத்திய சேவைக் கட்டணம் திரும்பி வராது. ஆகையால் தேவையில்லாத குறுஞ்செய்திகளுக்கு பதில் அளிக்க வேண்டாம். உங்களுக்கு வரும் தேவையில்லாத விளம்பர குறுஞ்செய்திகளை 'டு நாட் கால்' வசதி மூலம் தவிர்க்கலாம்.
மின்னஞ்சல்கள் : கடிதப் போக்குவரத்து முறை குறைந்து வரும் இந்நாட்களில் தனி நபரிடமிருந்தோ அல்லது நிறுவனத்தில் இருந்தோ பெறப்படும் மின்னஞ்சல்கள் அதிகாரபூர்வமான கடிதங்களாகவே கருதப்படுகின்றன. தற்போது வேலை நியமனக் கடிதங்கள், கல்விச் சேர்க்கைக்கான அறிவிப்புகள் போன்றவை மின்னஞ்சல் வாயிலாகவே அனுப்பப் படுகின்றன. நமக்கு அடிக்கடி தேவைப்படும் தகவல்கள் மற்றும் கோப்புகளை சேமித்து வைக்கும் தகவல் வங்கியாக மின்னஞ்சலைப் பயன்படுத்தி வருகிறோம். மின்னஞ்சலுக்குப் பாதுகாப்பு அதன் கடவுச்சொல் மட்டும்தான். அதனை பிறர் அறியாத வகையில் பாதுகாப்பது மட்டுமன்றி, அவ்வப்போது மாற்றி அமைப்பதும் அவசியம். பலரும் பயன்படுத்தும் கணினிகளில் மின்னஞ்சல்களைப் பார்க்கும்போது 'ரிமெம்பர் பாஸ்வேர்டு' போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் இருப்பது மிகவும் நன்று. குறுஞ்செய்திகளைப் போல உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கும் போலி செய்திகள் வரலாம். சில சமயங்களில், யாகூ, ஜிமெயில் போன்ற இலவச மின்னஞ்சல் சேவை கொடுப்போரின் பெயரில், உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவார்கள். அதில் உங்களுடைய மின்னஞ்சல் கணக்கு தணிக்கை செய்யப்படுவதால் உங்களது கடவுச்சொல்லை உடனடியாக அனுப்பவும் அவ்வாறு செய்யாவிட்டால் உங்களது மின்னஞ்சல் கணக்கு முடக்கப்படும் என்று செய்தி இருக்கும். அதை நம்பி உங்களது கடவுச்சொல்லை அனுப்பினீர்கள் என்றால் அடுத்த நொடியே உங்களது கடவுச்சொல் மாற்றப்பட்டு மின்னஞ்சல் கணக்கு அவர்கள் வசமாகிவிடும்.
அலைபேசி அழைப்புகள் : வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிலிருந்து பேசுவதாகக் கூறி, அழைப்பு வந்தால் மிக கவனத்தோடு கையாளுங்கள். உங்களுடைய வங்கி கணக்குகளை பரிசோதனை செய்வதாகக் கூறி கணக்கு எண், பணப் பரிவர்த்தனை அட்டைகளின் விபரங்கள், ரகசிய எண்கள் ஆகியவற்றைக் கேட்டால் கூறாதீர்கள். அவற்றைக் கூறிய சில மணி நேரங்களில் உங்களது கணக்கில் இருந்து பணத்தை எடுத்துவிடுவார்கள். எந்த வங்கியும் இத்தகைய வாடிக்கையாளர் விபரங்களை கைபேசியின் மூலமாக பரிசோதனை செய்யாது.
அலைபேசிச் செயலிகள் : இலவசமாகக் கிடைப்பதால் தேவையில்லாத செயலிகளை(ஆப்) பதிவிறக்கம் செய்யாதீர்கள். ஒரு செயலியை நிறுவும் போது அது கேட்கும் அனுமதிகளைக் கவனித்துப் பாருங்கள். ஒரு விளையாட்டுச் செயலி உங்களது இருப்பிடம், தொடர்புகள் மற்றும் படத்தொகுப்புகள் போன்றவற்றை பயன்படுத்திக் கொள்ள அனுமதி கேட்கும். அவை அந்த செயலியின் பயன்பாட்டிற்குத் தேவையில்லாத ஒன்று. இவற்றைப் பயன்படுத்திக் கொள்ள நீங்கள் தரும் அனுமதி உங்களைக் கண்காணிக்க விரிக்கும் வலையில் உங்களைச் சிக்க வைக்கும்.
வலைத்தளங்கள் : இன்றைய இணைய உலகில் கோடிக்கணக்கான வலைத்தளங்கள் பல்வேறு பயன்பாடுகளுடன் பல விதமான செய்திகளோடு குவிந்துள்ளன. வலைத்தளங்களில் உள்ள விவரங்கள் அனைத்தும் உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு சாதாரண அலைபேசிக்கான சிம் அட்டை வாங்குவதற்குகூட, அடையாள அட்டை, புகைப்படம், முகவரிச்சான்று தேவைப்படும் பொழுது, வலைத்தளம் துவங்குவதற்கு பணம் செலுத்தினால் மட்டும் போதும். வேறு எந்த விவரங்களும் தேவை இல்லை. அதில் செய்திகளையும் மற்ற விவரங்களையும் ஏற்றுவதற்கு குறிப்பிடத்தக்க விதிமுறைகளோ கட்டுப்பாடுகளோ இல்லை. ஆகையால் வலைத்தளங்களைப் பயன்படுத்தும் பொழுது, அவற்றின் பயன்பாட்டையும் அவை சார்ந்த நிறுவனங்களையும் கவனிக்க வேண்டியது நமது கடமை. பல வலைத்தளங்கள் 'குக்கீஸ்' எனப்படும் நிரல்களை உங்களது கணினியில் பதிவு செய்து உங்களது செயல்பாடுகளைக் கண்காணிக்கின்றன. உதாரணமாக ஒரு தேடுதளத்தில் ஒரு பொருளைப் பற்றித் தேடும் பொழுது அதனைச் சார்ந்த விளம்பரங்கள் அருகே காண்பிக்கப்படும். மேலும் நீங்கள் முன்னர் தேடிய பொருட்களைச் சார்ந்த விளம்பரங்களையும் அதில் காணலாம். இது உங்களது செயல்பாடுகளைப் பதிவு செய்வதால் மட்டுமே சாத்தியமாகும். இத்தகைய திட்டங்களால் நீங்கள் இணையத்தில் இணையும் பொழுதெல்லாம், உங்களது செயல்பாடுகளைக் கண்காணிப்பது மட்டுமன்றி உங்களது கணினியில் உள்ள தகவல்களைத் திருடவும் செய்யலாம். அவற்றில் சில...
விளம்பர நிரல் (அட்வேர்): இவை நீங்கள் இணையத்தில் இணையும் போது பல விளம்பரங்களை உங்களது காட்சித்திரையில் காணச்செய்யும். மேலும் உங்களது விபரங்களையும் திரட்டி விளம்பர நிறுவனங்களுக்கு அனுப்பும்.
தகவல்களைச் சேதப்படுத்தும் நிரல் (மால்வேர்) : இவை இணையத்திலிருந்து தானாகவே உங்களது கணினியில் நிறுவல் ஆகிவிடும். பின் உங்களது தகவல்களைக் கண்காணிப்பது மட்டுமன்றி அவற்றை சேதப்படுத்தி உங்களுக்கு உபயோகமில்லாதவாறு ஆக்கிவிடும்.
தகவல்களை பணயப்படுத்தும் நிரல் (ரேன்சம்வேர்) : இவை உங்களது கணிணியில் உள்ள தகவல்களை நீங்களே உபயோகப்படுத்த முடியாதபடி முடக்கிவிடும். அவற்றைப் பயன்படுத்த வேண்டுமானால் அந்த வரைவுத்திட்டம் குறிப்பிடும் தொகையை அதன் வங்கிக்கணக்கில் பிணையத் தொகையாக செலுத்தவேண்டும். உலகளவில் பெரிய நிறுவனங்கள் கூட இது போன்ற சிக்கலுக்கு உள்ளாயிருக்கின்றன. தக்க வைரஸ் நிரல் தடுப்பான்களை நிறுவுவதன் மூலம் நமது தகவல்களை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம். எண்களையும் எழுத்துக்களையும் மட்டுமே பாதுகாப்பு கருவிகளாகக் கொண்ட தகவல் தொழில்நுட்ப உலகில் பொன், பொருட்களை விட நமது தகவல்கள் மதிப்பு மிக்கவையாக விளங்குகின்றன. இணையப் பயன்பாடு இன்றியமையாததாகி விட்ட இந்நாட்களில், அவற்றை எப்படி பாதுகாப் பாகப் பயன்படுத்துவது என்பதை அறிந்து நடப்பது அவசியம். தேவையற்ற இணையப் பயன்பாட்டை குறைப்பது மட்டுமே, நம்மை இத்தகைய கண்ணுக்குத் தெரியாத மாய வலைகளிலிருந்து பாதுகாக்கும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகுமல்லவா?
- முனைவர் நா.பழனியப்பன்
சிஸ்டம் அனலிஸ்ட்

காந்திகிராமம், 9442194473

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X