சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு படி, ஆம்னி பஸ்களுக்கான வரி வசூலை, போக்குவரத்து துறை அமல் படுத்தினால், பஸ் கட்டணத்தை குறைக்க தயாராக இருப்பதாக, ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் மாநில அரசின் அனுமதி பெற்ற 1,106 ஆம்னி பஸ்கள், தேசிய அனுமதி பெற்ற, 306 ஆம்னி பஸ்கள், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களின் அனுமதியை பெற்ற, 2,600 என மொத்தம், 4,012 பஸ்கள் இயக்கத்தில் உள்ளன. இதில், செமி சிலிப்பர், 'ஏசி' செமி சிலிப்பர், சிலிப்பர், 'ஏசி' சிலிப்பர், வால்வோ, வால்வோ சிலிப்பர், ஸ்கேனியா என அதி நவீன வசதிகளை கொண்ட பஸ்கள் இயக்கத்தில் உள்ளன. தமிழக அரசுக்கான வரியை, காலாண்டு, அரையாண்டு, ஓர் ஆண்டு என்ற வகையில், ஆம்னி பஸ் உரிமையாளர்கள் செலுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த, 2012ம் ஆண்டு முதல், ஆம்னி பஸ்களுக்கான வரியை, வாரம் தோறும் செலுத்த வேண்டும் என, போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்து, அமல் படுத்தியது. இதை எதிர்த்து, புதுச்சேரி கான்ட்ராக்ட் கேரேஜ் உரிமையாளர்கள் சஙகம், பெங்களூருவை சேர்ந்த சர்மா டிரான்ஸ்போர்ட், தமிழக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் ஆகியவை. இணைந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
கடந்த ஏப்ரல், 4ம் தேதி, வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ராமசுப்பிரமணியன், கிருபாகரன் ஆகியோரை கொண்ட அமர்வு, தமிழக அரசின் வாரம் தோறும் கட்டாய வரி வசூலை ரத்து செய்தது. மேலும், வாரம், மாதம், காலாண்டு, அரையாண்டு, ஆண்டு என, ஆம்னி பஸ் உரிமையாளர்கள், எதை விரும்புகிறார்களோ, அந்த முறையில் வரியை பெற்றுக் கொள்ள வேண்டும் என, தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பு வெளியாகி, நான்கு மாதங்களாகி விட்ட நிலையில், அதை அமல் படுத்த போக்குவரத்து துறை அதிகாரிகள் முன்வர வில்லை. வாரம் தோறும் வரியை செலுத்த நிர்ப்பந்தித்து வருவதாக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். உயர்நீதிமன்ற தீர்ப்பை, போக்குவரத்து துறை அமல் படுத்தினால், ஆம்னி பஸ்களின் கட்டணத்தை குறைக்க தயாராக இருப்பதாக, ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கூறியதாவது: தமிழத்தில் ஆம்னி பஸ்சின் சீட் ஒன்றுக்கு காலாண்டுக்கு, 3,500 ரூபாய் என்ற வகையில், 36 சீட்டுக்களை கொண்ட பஸ்சுக்கு, காலாண்டுக்கு (90 நாட்களுக்கு), 1.26 லட்சம் ரூபாய் வரியாக செலுத்தினோம். இதுவே, வாரம் தோறும் செலுத்தும் சூழலில், வாரத்துக்கு சீட் ஒன்றுக்கு, 600 ரூபாய் என்ற வகையில், வாரத்துக்கு, 21,600 ரூபாய், அதுவே மூன்று மாதம் (12வாரம்) 2 லட்சத்து, 59 ஆயிரத்து, 200 ரூபாய் செலுத்து வேண்டி உள்ளது. அரசின் இந்த உத்தரவு அமலால், ஆம்னி பஸ் உரிமையாளர்கள், மூன்று மாத்துக்கு, ஒரு லட்சத்து, 33 ஆயிரத்து, 200 ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வால்வோ, படுக்கை வசதி கொண்ட பஸ்களுக்கு இந்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இந்த தொகையை சமாளிக்க கட்டணத்தை உயர்த்தி, பயணிகள் மீது திணிப்பதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, வழக்கின் தீர்ப்பும் வெளியாகி விட்டது. போக்குவரத்து துறை, உயர்நீதிமன்ற உத்தரவை அமல் படுத்த மறுக்கிறது. உயர்நீதிமன்ற உத்தரவு அமல் படுத்தும் நிலையில், செமி சிலிப்பர் பஸ்களுக்கான கட்டணத்தில், 75 ரூபாயும், வால்வோ, சிலிப்பர் 'ஏசி' பஸ்களுக்கான கட்டணத்தில், 200 ரூபாய் வரை, குறைக்க தயாராக உள்ளோம். பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, ஆம்னி பஸ்களின் கட்டணத்தை குறைக்கும் வகையில், போக்குவரத்து துறை, உயர்நீதிமன்ற உத்தரவின் படி, காலாண்டு முறையில் வரி வசூலிக்க முன் வந்தால் மட்டுமே இது சாத்தியப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்.
- நமது சிறப்பு நிருபர் -