தமிழக சட்டசபை தேர்தலின் போது, கன்டெய்னர் லாரிகளில் பிடிபட்ட, 570 கோடி ரூபாய் பணம் குறித்து, மேலும் சில சந்தேகங்களை எழுப்பி, அதுகுறித்து முழுமையாக விசாரிக்க உத்தரவிடும்படி, சி.பி.ஐ., இயக்குனரிடம், தி.மு.க., நேரில் மனு அளித்துள்ளது.
தி.மு.க., ராஜ்யசபா எம்.பி.,க்களான டி.கே.எஸ்.இளங்கோவனும், ஆர்.எஸ்.பாரதியும், நேற்று டில்லியில், சி.பி.ஐ., அலுவலகத்திற்கு வந்தனர். சி.பி.ஐ., இயக்குனர் அனில்குமார் சின்காவை நேரில் சந்தித்து, கோரிக்கை மனு அளித்தனர்.
பரபரப்பு கேள்விகள் : அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் சட்டசபை தேர்தலின் போது, திருப்பூர் அருகே சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரிகளில், கட்டுக்கட்டாக பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பணம் யாருக்கு சொந்தமானது, எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்ற பரபரப்பு கேள்விகள் எழுந்தன. சில நாட்கள் கழித்து, அந்த பணத்தை, பாரத ஸ்டேட் வங்கி சொந்தம் கொண்டாடியது. இதையடுத்து, அப்பணம், கோவைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இருப்பினும், அரசியல் வட்டாரங்களில், பலத்த சந்தேகங்களையும் சர்ச்சைகளையும், இந்த விவகாரம் ஏற்படுத்தியது.
சி.பி.ஐ., விசாரணை : எனவே, இதுகுறித்து முழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, தி.மு.க., சார்பில், சென்னை கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட், பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டுமென்று
உத்தரவிட்டது. ஆனால், இதுவரையில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. பிடிபட்ட மூன்று லாரிகளின் நம்பர்களுமே, இருசக்கர வாகனங்களுக்கு உரியவை. பாரத ஸ்டேட் வங்கியின் ஸ்டிக்கர்களுக்கு பதிலாக, ஆக்சிஸ் வங்கியின் ஸ்டிக்கர்கள், அவற்றில் ஒட்டப்பட்டு உள்ளன.
அறிவுறுத்தல் : மேலும், பணம் தங்களுடையது எனக் கூறிய பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிக்கு, அவ்வாறு கூற தகுதி இல்லை. எனவே, இந்த புதிய சந்தேகங்களை கவனத்தில் வைத்து, முழு விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மனுவை பெற்றுக் கொண்ட சி.பி.ஐ., இயக்குனர் அனில் குமார் சின்ஹா, இந்த விவகாரத்தை கையாளும் பொறுப்பில் உள்ள துணை இயக்குனரிடம், தி.மு.க., - எம்.பி.,க்கள் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ள புதிய விபரங்கள் குறித்தும், விசாரணை நடத்துமாறு அறிவுறுத்தி உள்ளார்.- நமது டில்லி நிருபர் -