அரிதாரம் பூசும் காட்சி ஊடகங்கள்!| Dinamalar

அரிதாரம் பூசும் காட்சி ஊடகங்கள்!

Added : ஆக 06, 2016 | கருத்துகள் (1)
Share
உலகில் மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே, தகவல் தொடர்பும் துவங்கி விட்டது. துவக்க காலங்களில், தன் வாழ்வின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக, மனிதன் பல வழிகளிலும் தொடர்பு கொண்டான். ஆனால், இன்றோ, வாழ்வின் ஒரு உறுப்பாகவே தகவல் தொடர்பு மாறி விட்டது. தகவல் பரிமாற்றம் என்ற அடிப்படை நோக்கத்திலிருந்தே மாறி, இன்று பல நோக்கங்களை அடிப்படையாக கொண்டு, மக்கள் தொடர்பு மாறி விட்டது.
அரிதாரம் பூசும் காட்சி ஊடகங்கள்!

உலகில் மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே, தகவல் தொடர்பும் துவங்கி விட்டது. துவக்க காலங்களில், தன் வாழ்வின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக, மனிதன் பல வழிகளிலும் தொடர்பு கொண்டான். ஆனால், இன்றோ, வாழ்வின் ஒரு உறுப்பாகவே தகவல் தொடர்பு மாறி விட்டது. தகவல் பரிமாற்றம் என்ற அடிப்படை நோக்கத்திலிருந்தே மாறி, இன்று பல நோக்கங்களை அடிப்படையாக கொண்டு, மக்கள் தொடர்பு மாறி விட்டது. மரபு வழி, அச்சு வழி, மின்னணு வழி சாதனங்கள் மூலமாக, பொதுமக்கள் தொடர்பு மிக எளிமையாக மாறி விட்டது. மக்கள் தகவல் தொடர்பு சாதனங்கள், அறிவித்தல், அறிவுறுத்தல், பொழுது போக்குதல், எண்ணத்தை உருவாக்குதல், எண்ணத்தை பிரதிபலித்தல், வியாபாரப்படுத்தல் போன்ற அடிப்படை நோக்கங்களாக கொண்டுள்ளன. கூர்ந்தாய்தல், இணைத்துக் காட்டல், சமுதாய சார்புடையவராக்கல், சமுதாய தகவல் தருதல், செய்தி வலுவூட்டல், நியதி வகுத்தல், வழிப்படுத்துதல் போன்றவற்றையும், சிறப்பு நோக்கங்களாக கொண்டு, மக்கள் தொடர்பு சாதனங்கள் இயங்குகின்றன.ஜனநாயகத்தின் நான்காவது துாணாக கருதப்படுபவை ஊடகங்கள். இதில், அச்சு ஊடகங்களும், மின்னணு ஊடகங்களும் குறிப்பிடத் தகுந்தவை. மின்னணு ஊடகங்களில் திரைப்படம், 'டிவி' போன்றவை, மக்களோடு நெருக்கமான தொடர்பு கொண்டுள்ள காட்சி ஊடகங்களாக விளங்குகின்றன. உடனடி தன்மை, உறவு நெருங்கிய தன்மை, உண்மை தன்மை உடையதாக இருக்க வேண்டுமென, 'டிவி' அறிமுகப்படுத்தப்பட்டது. காட்சி புலனுக்கும், செவிப்புலனுக்கும் இது விருந்தளிப்பதால், மக்கள் தொடர்பு சாதனங்களில் அதிக ஆற்றலுடைய ஊடகம் எனப்படுகிறது. வறுமை ஒழிப்பு, எழுத்தறிவின்மையை போக்குதல், சமூக ஒற்றுமை ஆகியவற்றுக்காகத் தான் இந்தியாவில், 'டிவி' சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. அப்படித்தான் அதன் துவக்க கால நிகழ்ச்சிகள் இருந்தன. துவக்க காலத்தில், எந்த நோக்கத்தோடு தொலைக்காட்சி நிறுவப்பட்டதோ, அவை, ஒன்றன் பின் ஒன்றாகக் கழற்றப்பட்டு, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் அதிக அளவில் இடம் பெறலாயின; வணிக நோக்கே மேலோங்கியுள்ளன. செய்திகள், விவாத அரங்குகள், பட்டிமன்றங்கள், கேளிக்கை நிகழ்ச்சிகள், தனித்திறன் வெளிப்பாடுகள், திரைப்பட நடிகர் - நடிகையரின் உள்நாட்டு, வெளிநாட்டு கலை நிகழ்ச்சிகள், திரைப்படம் என, நிகழ்ச்சிகள் கூட்டாஞ்சோறு ஆகிப் போயின. சுதந்திர தினவிழா, குடியரசு தினவிழா, ஆண்டின் முதல் நாள் போன்ற நாட்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. துவங்கப்பட்ட நாட்களில் நாட்டின் வளர்ச்சி, விழா அணிவகுப்புகள், தேசத் தலைவர்களின் பேட்டிகள், விடுதலை வரலாறு, விடுதலைத் தியாகிகளின் நினைவாக எடுக்கப்பட்ட திரைப்படங்கள், தேச பக்திப் பாடல்கள் என, நிகழ்ச்சிகள் அமைந்திருந்தன. காலப்போக்கில், நாட்டு விழாக்கள் கூட, நடிகர் - நடிகையரின் பங்கேற்பு விழாக்களின் காட்சிப்படுத்தல்கள் ஆகிப்போயின. அரிதாரம் பூசியவர்களின் பேட்டிகள், திரைப்படங்கள், நடனங்கள் என, சிறப்பு நிகழ்ச்சிகளாக ஒளிபரப்பப்படலாயின. இதற்கான விளம்பரங்களை, சில மாதங்களுக்கு முன்பே அறிவிக்கலாயினர். எந்தெந்த நடிகர், நடிகையர் கலந்து கொள்ளவிருக்கின்றனர். எந்தெந்த திரைப்படங்கள் திரையிடப்பட இருக்கின்றன என்பதையெல்லாம் விளம்பரப்படுத்தி, தேச நிகழ்வை சொல்வதற்குப் பதில், வணிக நோக்கையே பிரதானமாக்கிக் கொள்ளலாயினர்.'டிவி' நிகழ்வுகள் அனைத்தையும் மட்டமானவை என்றும் கூறி விட முடியாது. சில நல்ல நிகழ்ச்சிகள் உள்ளன. அவை, வாரத்தில் ஒரு நாளில், அரைமணி நேர நிகழ்வுகளாகவே உள்ளன. அவற்றிலும், வணிகத்தின் கையே ஓங்கி நிற்கிறது. பட்டிமன்றங்களும், விவாத அரங்குகளும் வெற்றுக் கூச்சல்களாகவே உள்ளன. விவாத மேடைகளில், பல கட்சி உறுப்பினர்களை சமகால நிகழ்வுகள் என்ற பெயரில் பேச வைத்து, வீண் சண்டைகளை மூட்டி விடுகின்றனர். 'டிவி' மோதல்கள், கட்சி மோதல்களாகிப் போயுள்ளன. அதைக் காண்போர், உண்மையென நம்பி, சமூகத்தில் வன்முறைகளும், பயங்கரவாதங்களும் நிகழ, காரணிகளாயின. வன்முறைகளும், அடிதடிகளும் காட்சிப்படுத்தப்பட்டு, பிரச்னைகளை ஊதிப் பெருக்குகின்றனர்.மறைவாகப் பேச வேண்டியவற்றை வெளிப்படையாக பேச வைத்து, சண்டைகளுக்கும், கலவரங்களுக்கும், வித்திடுகின்றனர். விற்பனைக்கு வரும் பொருட்கள் எல்லாம் நுகர்வோருக்கு பயனுடையதா, இல்லையா என்ற கேள்விகள் எழுவதில்லை. தனக்கு பிடித்தமான நடிகர், நடிகையர், 'டிவி' விளம்பரம் மூலம் கூறி விட்டனர் என்பதற்காக, கடன்பட்டாவது வாங்க நுகர்வோர் முண்டியடிக்கின்றனர். இது, துணி முதல், தின்பண்டங்கள் வரை நீளுகிறது. நடிகர், நடிகையரை தமிழகத்தில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் நடத்தி, விளம்பரத்தில் சம்பாதித்தது போய், வெளிநாட்டிற்கும் அழைத்து சென்று, குத்தாட்டம் போடும் நிகழ்ச்சிகளை, 'டிவி' நிறுவனங்களே முன்னின்று, பல மணி நேரங்கள் நடத்தி வருகின்றன. பொழுதுபோக்கு என்ற பெயரை சொல்லி, பல மணி நேரங்களை விழுங்கி, மூளைச் சலவை செய்து வருகின்றனர். இப்போது, கலை என்றாலே நடிகர், நடிகையர் என்றாகி விட்டது.தேசத் திருவிழாக்களில், அணிவகுப்பு நிகழ்ச்சிகளை, நேரலை என்ற பெயரில் காட்டியது போல, இறப்பு நிகழ்ச்சிகளை கூட, நேரலையாக காட்சிப்படுத்த துவங்கி விட்டனர்.இறந்தவரின் பெருமைகளைக் கூறுவதற்கு பதில், எந்தெந்த நடிகர், நடிகையர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்; அவர்கள் பேட்டிகள் என, ஒளிபரப்பப்படுவதால், இறந்தவரைப் பற்றிய செய்திகள், பின்னுக்கு தள்ளப்படுகின்றன.மொத்தம், 4,000த்திற்கும் குறைவான வாக்காளர்களை கொண்டுள்ள, நடிகர் சங்க தேர்தலை ஊதி, பெரிதாக்கி, நட்புடன் இருந்தோரை, கீரியும், பாம்புமாக ஆக்கியதில், 'டிவி'க்கும் கணிசமான இடமுண்டு. தினமும் பேட்டி என்ற பெயரில் சண்டையை மூட்டி விட்டனர். பத்தோடு பதினொன்றாக நடத்த வேண்டிய சாதாரண தேர்தலை, தமிழக சட்டசபை தேர்தல் போல சித்தரித்து, அரசியல்வாதிகளின் வயிற்றில் புளியை கரைத்தனர். நடிகர் சங்க தேர்தல் நாளன்று, ஒரு காட்சி ஊடகம், காலை துவங்கி, இரவு கடந்த பிறகும், நடிகர் சங்க தேர்தலை தொடர்ச்சியாக ஒளிபரப்பி, சமூக கடமை ஆற்றியதாக புளகாங்கிதம் கொண்டது.அறிவித்தல், அறிவுறுத்தல் என்ற வார்த்தைகளை தாரக மந்திரமாக்கி, ஜனநாயகத்தின் நான்காவது துாண் என உரக்க சொன்னவை ஊடகங்கள். இன்றோ, நான்கு திசைகளில் இருந்து செய்திகளை, நிகழ்வுகளை சொல்லி வந்தது போய், மக்களின் மிக, மிக சிறு அங்கமான அரிதாரம் பூசியவர்களின் பின்னால், காட்சி ஊடகங்கள் அணிவகுத்துச் செல்வதும், ஒளிபரப்புவதும் ஊடக நேர்மைக்கு ஊறு விளைவிப்பதாகும். மக்கள் திரள் அதிகம் உள்ள நாட்டில், அரிதாரம் பூசியவர்களை மட்டுமே உயர்த்திப் பிடித்து, நாட்டையே அரிதாரக் கூடாரமாக மாற்ற முயற்சிப்பது எந்த வகையில் நியாயம்?
இ-மெயில்: tamilsreekumar@gmail.com
- முனைவர் எஸ்.ஸ்ரீகுமார் -பேராசிரியர், சமூக ஆர்வலர்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X