'நேட்டிவிட்டி' மாறாமல், 'கிரியேட்டிவிட்டி'யை கலந்து 'அன்னக்கிளி உன்னை தேடுதே' என்ற பாடலுக்கு முதன் முதலாக இசை அமைத்து, பட்டி தொட்டியெல்லாம் அதனை ஒலிக்க செய்த பெருமை இசைஞானி இளையராஜாவுக்கு உண்டு. உலகம் முழுவதும் பரவியுள்ள இசை பிரியர்களின் மந்திர சொல்லாகவே மாறி விட்டது இவரது பெயர். “தூளியிலே ஆட வந்த வானத்து மின் விளக்கே” என்ற தாலாட்டு பாடலாகட்டும், “எவரிபடி விஸ்யூ ஏ கேப்பி நியூ இயர்” என, ஆங்கிலப்புத்தாண்டை வரவேற்கும் பாடலாகட்டும், எப்போதும் ஏதாவது ஒரு இடத்தில் ஒலித்துக் கொண்டிருக்கும். இதுபோன்ற 'எவர்கிரீன்' பாடல்களால் மனித இதயங்களை வெகுவாக கவர்ந்தவர். தாயை தெய்வமாக மதிக்க வேண்டும் என்பதற்காக வாலி எழுதிய 'அம்மா என்றழைக்காத உயிரில்லையே... அம்மாவை வணங்காது உயர்வில்லையே' என்ற பாடலுக்கு இசை அமைத்தவர். தாயை நேசிக்கும் இதயங்கள் இப்பாடலை எளிதில் மறக்க முடியாது. அந்த திரையுலக இசை ஜாம்பவான் பிறந்தது, தேனி மாவட்டம் பண்ணைப்புரம் கிராமத்தில் தான். இங்கு நான்கு சகோதரர்களுடன் பிறந்த ராசையா, தன் இசை மூலம் உலகையே கட்டி போட்ட இளையராஜாவாக உருவெடுத்தார். தலைமுறைகள் தாண்டியும் திரையுலகில் இன்னும் ஜொலித்துக் கொண்டிருக்கும் இசைமேதை இளையராஜா, அவரது சகோதரர் கங்கை அமரன் மட்டுமல்லாமல், தென் இந்திய சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகளை மணந்த நடிகர் தனுஷின் தந்தையான சினிமா இயக்குனர் கஸ்துாரி ராஜா, மத்திய அரசு விருதை தட்டிச்சென்ற கருத்தம்மா திரைப்பட வசனகர்த்தாவும், நடிகர் சத்யராஜ் நடித்த சேனாதிபதியை இயக்கியவருமான ரத்னகுமார் ஆகியோரின் சொந்த ஊரும் பண்ணைப்புரம் தான். எஜமான், சின்னக்கவுண்டர் உள்ளிட்ட வெற்றி படங்களின் இயக்குனர் ஆர்.வி. உதயக்குமார் பண்ணைப்புரத்தை சேர்ந்த சுச்ச ரீட்டா என்பவரை மணந்தார். முன்னர் இருதய பாதிப்புக்குள்ளான இளையராஜா, பூரண குணமடைய வேண்டி பண்ணைப்புரத்தில் இருந்து அவருக்கு முதல் போன் பறந்தது. இதில் நெகிழ்ச்சியுற்ற அவர் தனது கிராம மக்களுக்காக மதுரையில் 'சங்கீத திருநாள்' என்ற 'மியூசிக்கல் ஷோ' வை நடத்தினார். வி.வி.ஐ.பி., க்கள் அதிகம் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் பண்ணைப்புரம் மக்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்டது. இன்று சமூகத்தில் என்ன தான் பெரிய அந்தஸ்தில் இருந்தாலும் பண்ணைப்புரத்தில் பிறந்தவர்கள் சொந்த ஊர், மக்களிடம் பாசப்பிணைப்பில் உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE