மதுவாடை பெண் கவுன்சிலரின் புது கனவு!| Dinamalar

'மது'வாடை பெண் கவுன்சிலரின் 'புது கனவு!'

Added : ஆக 09, 2016 | கருத்துகள் (1)
Share
கணபதியில், கல்லூரி தோழி வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு, போய் விட்டு ஸ்கூட்டரில் திரும்பிக் கொண்டிருந்தார்கள் சித்ராவும், மித்ராவும். வழக்கமாக கலகலவென பேசியபடி வரும் மித்ரா, ஏனோ அன்று மவுனமாக ஸ்கூட்டரை ஓட்டினாள்.''நம்மூருல 'எலக்ஷன் பீவர்' வந்திருச்சு பார்த்தியா மித்து...'' என்று மித்ராவின் மவுனத்தை கலைத்தாள் சித்ரா.''ம்ம்ம்...டி.எம்.கே., கவுன்சிலருங்க,
'மது'வாடை பெண் கவுன்சிலரின்  'புது கனவு!'

கணபதியில், கல்லூரி தோழி வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு, போய் விட்டு ஸ்கூட்டரில் திரும்பிக் கொண்டிருந்தார்கள் சித்ராவும், மித்ராவும். வழக்கமாக கலகலவென பேசியபடி வரும் மித்ரா, ஏனோ அன்று மவுனமாக ஸ்கூட்டரை ஓட்டினாள்.
''நம்மூருல 'எலக்ஷன் பீவர்' வந்திருச்சு பார்த்தியா மித்து...'' என்று மித்ராவின் மவுனத்தை கலைத்தாள் சித்ரா.
''ம்ம்ம்...டி.எம்.கே., கவுன்சிலருங்க, கார்ப்பரேஷன் வடக்கு மண்டல ஆபீஸ் முன்னாடி, போராட்டம் நடத்துனதுல இருந்தே தெரிஞ்சு போச்சு. நம்மூர்ல எலக்ஷன் இல்லாம, ஜனங்க மேல அரசியல்வாதிங்களுக்கு திடீர் பாசம் எப்படி வருமாம்?'' என, கேட்டாள் மித்ரா.
அதற்கு சித்ரா, ''அதுமட்டுமில்லை, அடிப்படை வசதிகள் செஞ்சு தரலை, ரோடு சரியில்லை, தெருவிளக்கு எரியல, அறிவிச்ச திட்டம் எதையும் நிறைவேத்தலைன்னு, கார்ப்பரேஷன கண்டிச்சு ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு பண்ணியிருக்காங்க,'' என்றாள்.
''அஞ்சு வருஷமா தெரியலையா. எலக்ஷன் வரும் போதுதான் வேலை எதுவும் செய்யலைன்னு தெரியுதாமா?'' என்று கிண்டலாக சிரித்தாள் மித்ரா.
''நம்ம ஊர்ல இதெல்லாம் சகஜம்தான். ஆனா நம்ம ஊருலயா இப்படியெல்லாம் நடக்குதுன்னு ஆச்சரியப்படுற மாதிரி, ஒரு மேட்டர் நடக்குது தெரியுமா மித்து?'' என்று கேட்டாள் சித்ரா.
''அது என்ன மேட்டர்...?'' - மித்ராவால் 'சஸ்பென்ஸ்' தாங்க முடியவில்லை.
''சிட்டி போலீஸ் டி.சி., மேடம் தலைமையில போலீசார், பிரபல ஓட்டல்ல 'மிட்நைட் பப்' நடக்குறதை கண்டுபிடிச்சிருக்காங்க,'' என்று துவங்கினாள் சித்ரா.
''என்னது, 'பப்'பா...? அது ஒண்ணுதான் குறையா இருந்திச்சு...அதுவும் வந்திருச்சா?'' - அதிர்ச்சியில் ஸ்கூட்டரின் வேகத்தை குறைத்தாள் மித்ரா.
''என்னை முடிக்க விடு மித்து... அந்த 'ஷோ'ல இருந்தது எல்லாமே, 'ஐ.டி.,' கம்பெனி இளவட்டங்களாம். போலீசை கண்டதும் பசங்க பயந்துட்டாங்களாம். ஆனா, ஷோவுல அரைகுறை ஆடையோட இருந்த பொண்ணுக, 'எங்களுக்கும் எல்லா ரைட்சும் இருக்கு'ன்னு போலீஸ்கிட்ட போதையில வாக்குவாதம் செஞ்சாங்களாம். போகும்போது கையில இருந்த டம்ளரை, காலி பண்ணிட்டுதான் நகர்ந்தாங்களாம்,'' என்றாள் சித்ரா.
அதற்கு மித்ரா, ''கலாசாரம் சுத்தமா மாறிப் போச்சு. நீ சொன்னமாதிரி நம்ம ஊருலயா இப்படியெல்லாம் நடக்குதுன்னு ஆச்சரியமா இருக்குதுக்கா,'' என்று புலம்பினாள்.
''இதுக்கே இப்படி 'பீல்' பண்றியே... நம்ம கார்ப்பரேஷன் லேடி கவுன்சிலரு ஒருத்தருக்கு, 'சரக்கு' போடாம தூக்கம் வராதாம். இதுக்கு என்ன சொல்றே?'' என்றாள் சித்ரா.
''அக்கிரமம்... அது யாருக்கா?'' என்று கேட்டாள் மித்ரா.
''யாருங்கறது இருக்கட்டும். ஆனா அவரு இப்ப குடியை மறக்க பிரைவேட் ஆஸ்பத்திரில, டிரீட்மென்ட் எடுத்துக்கிட்டிருக்காராம்,'' என்றாள் சித்ரா.
அதற்கு மித்ரா, ''எப்படியோ திருந்தினா சரி,'' என்றாள்.
''நீ ஒண்ணு...விஷயமே வேற. அந்தம்மா மேயர் சீட்டுக்கு குறி வச்சிருக்காங்க. எம்.பி., சசிகலா புஷ்பா மேட்டர், பூகம்பமா வெடிச்சிருக்கற நேரத்துல, இந்த கவுன்சிலரு மேல, புகார் வந்துரக்கூடாதுனு, அவங்களுக்கு 'குளோசா' இருக்கறவங்க, 'அட்வைஸ்' செஞ்சிருக்காங்க. அதான் திடீர் டிரீட்மென்ட். அவங்களுக்கு தான் மேயர் சீட்டுன்னு, ஆளுங்கட்சி வி.ஐ.பி.,ஒருத்தரு ஆசை காட்டி விட்டதால கட்சியில பெரிய பூகம்பமே உருவாயிருக்காம்,'' என, எலக்ஷன் நியூசையும் 'அப்டேட்' செய்தாள் சித்ரா.
அப்போது மொபைல் போன் முணுமுணுத்தது. ஸ்கூட்டரை ஓரம்கட்டிய மித்ரா, ''ஹலோ! சித்தியா... என்னது, மேகாலயாவுக்கு டூர் போறீங்களா? பத்திரமா போயிட்டு வாங்க. ஷில்லாங் போனீங்கன்னா, தோல் செருப்பு ரொம்ப கம்மி விலையாம்; கண்டிப்பா வாங்கிட்டு வாங்க...,'' எனக்கூறி போனை 'ஆப்' செய்து விட்டு வண்டியை கிளப்பினாள்.
''அக்கா, நானும் ஒரு பொலிட்டிக்கல் மேட்டர் சொல்றேன்,'' என்றாள் மித்ரா.
அதற்கு சித்ரா, ''முதல்ல வண்டியை பார்த்து ஓட்டு. ம்ம்...இப்ப சொல்லு,'' என்றாள்.
''ஆளும் கட்சிக்கு தாவுன பல மாத்துக்கட்சிக்காரங்க, உள்ளூர் அமைச்சரு கைய, கால பிடிச்சாவது, 'உள்ளாட்சித் தேர்தல்ல கவுன்சிலர் சீட் வாங்க, முயற்சி பண்ணிட்டு இருக்காங்களாம். அதுல, முக்கியமா, கதர்வேட்டி சட்டை கட்சியில இருந்து வந்தவரு, தன்னோட 'திருமுகத்த' அமைச்சரு கண்ணுல தெரியுற மாதிரி, சுத்தி சுத்தி வர்றாராம்,'' என்றாள் மித்ரா.
அதற்கு சித்ரா, ''நானும் கேள்விப்பட்டேன் மித்து, ஆனா...சொத்து குவிப்பு வழக்குல, ஜெ., ஜெயிலுக்கு போனப்ப, 'மீன் கிடைக்கும்; ஜாமீன் கிடைக்காது' ன்னு நக்கலடிச்சு 'பேஸ்புக்'ல போட்டவராச்சே இவரு...'' என்றாள்.
''சரியா சொன்னேக்கா... சட்டசபை எலக்ஷன்ல, அ.தி.மு.க.,காரங்க ஓட்டுக்கு துட்டு கொடுத்ததா சொல்லி, இவருதான் பிரச்னை செஞ்சாராம். இப்ப நல்ல பிள்ளையாட்டம் அ.தி.மு.க.,வுல சேர்ந்திருக்காரு... இந்த மேட்டர் மேலிடம் வரை போயிருச்சாம்,'' என்றாள் மித்ரா.
அப்போது ஸ்கூட்டர், வ.உ.சி., பூங்காவை கடந்து சென்றது.
''இந்த பூங்காவுக்கு 'லைசென்ஸ்' கெடைக்குமா? அல்லது பூட்டு போட்டுருவாங்களா?'' கேட்டாள் மித்ரா.
''அதுக்குத்தான் கார்ப்பரேஷன் அதிகாரிங்க போராடிக்கிட்டு இருக்காங்க. ஜனங்களுக்கு இருக்கற ஒரே ஒரு பொழுதுபோக்கு இடம் இதுதான். இதையும் மூடிட்டா, மக்கள் 'அப்செட்' ஆகிடுவாங்க. அதனால, எப்படியாவது, 'லைசென்ஸ்' வாங்கிரணும்னு போராடறாங்க,'' என்றாள் சித்ரா.
''அக்கா, அப்செட்டுன்னதும் ஒரு மேட்டர் ஞாபகத்துக்கு வருது. கோவை மேற்கு மண்டல போலீசுல, ஒரே புகைச்சலா இருக்குக்கா. ஆளாளுக்கு பெட்டிஷன் போட ஆரம்பிச்சிட்டாங்க. டிரான்ஸ்பராகிப் போன ஐ.ஜி., கோவையில இருந்து கிளம்புறதுக்கு முன்னாடி, இன்ஸ்பெக்டர்கள் நிறைய பேருக்கு 'டிரான்ஸ்பர்' போட்டுட்டு போனாராம். அதுல, ஐ.ஜி., ஆபீசுல இருக்குற ஒருத்தரு, நிறைய 'விளையாடிட்டதா' விவகாரம் கிளம்பியிருக்கு...'' என்றாள் மித்ரா.
''என்னடி மித்து, சம்பந்தப்பட்ட ஆளு, 'ஆனந்தமா' இருக்காருன்னு சொல்லு. இவர பக்கத்துல வச்சிருந்தா, புதுசா வந்திருக்கிற ஐ.ஜி., பேரு, நிச்சயம் ரிப்பேரு தான்,'' என, நாசூக்காக ஒரு போடு போட்டாள் சித்ரா.
அவிநாசி ரோடு, அண்ணாசிலை சிக்னலில் வண்டியை நிறுத்தினாள் மித்ரா. இவர்களுக்கு இணையாக நின்றிருந்த, ஸ்கூட்டரிலிருந்த பெண்ணை பார்த்து, ''அங்க பாருக்கா அந்தம்மா கழுத்துல... 20 பவுனு நகை தேறும் போலிருக்கு,'' என, மித்ரா முடிப்பதற்குள்...
''ஆமா, நகைன்னு சொன்னதும்தான் ஞாபகம் வருது... 'ஊட்டு, ஊட்டுன்னு ஒரு பைனான்ஸ் இருக்கே. அதோட ஆபீஸ்கள்ல கேரளா பூரா சமீபத்துல, வருமானவரித்துறைக்காரங்க ரெய்டு நடத்துனாங்களே, ஞாபகம் இருக்கா?'' என்றாள் சித்ரா.
''என்னக்கா இப்படி கேட்டுட்டே. கோவையில கூட ஒருத்தரோட கடைல ரெய்டு நடந்துச்சே...'' என்றாள் மித்ரா.
'' அதே தான். அந்த பைனான்ஸ்காரங்க மேலே, ஏற்கனவே ஏகப்பட்ட கம்ப்ளைன்ட் போயிருக்காம், வருமான வரித்துறைக்கு. நகைய அடகு வச்ச ஆளுங்க, கடனை அடைச்சு நகைய மீட்க முடியாத நெலமைக்குப்போனா, அவங்களோட நகைகள, நோட்டீஸ் கொடுத்து, தனித்தனி ஏலமா விடணும்னு சட்டம் சொல்லுதாம்...''
''ஆனா, அப்படி நடத்தாம, ஒட்டுமொத்தமா ஒரே ஆளுக்கு வித்துடறாங்களாம். கடன் தொகை போக, மிச்சமிருக்கிற பணத்தையும், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தர்றதில்லையாம். இப்படி மாசா மாசம், 50 கோடி ரூபா வரைக்கும் நகைகள வித்துடறாங்களாம். அத, வாங்குன ஆள் கடையிலதான், கோவையில ரெய்டு நடந்துச்சாம்,'' என, சித்ரா முடிக்கும் முன்...
''வேற யாருக்கும் இதுல தொடர்பு இல்லையாக்கா...''- வண்டியை 'இதயதெய்வம் மாளிகை' ரோட்டில் திருப்பியபடி கேட்டாள் மித்ரா.
பதிலளித்த சித்ரா... ''இருக்காங்க. இன்னும் நாலஞ்சு பேரு இருக்காங்க. அவுங்களையும் ஐ.டி.,காரங்க தீவிரமா கண்காணிச்சுட்டு இருக்காங்களாம். சீக்கரமே, அவங்களும் ரெய்டுக்கு உள்ளாவாங்கன்னு, நகைக்கடை வீதில ஒரே பேச்சா இருக்கு,'' என்றாள் சித்ரா.
அதற்குள் ரேஸ்கோர்சுக்குள் வண்டி நுழைந்திருந்தது. அங்குள்ள இயற்கை அங்காடி முன் வண்டியை நிறுத்தி விட்டு, இருவரும் உள்ளே நுழைந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X